மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

2 ஆலோசகர்களுடன் மக்கள் பணியில் தமிழிசை

2 ஆலோசகர்களுடன் மக்கள் பணியில் தமிழிசை

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.

மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார், இதனால் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய திட்டங்களான, இலவச அரிசி விநியோகம், பென்ஷன், நிவாரண உதவி ஆகியவற்றைச் செயல்படுத்த முடிவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் நாராயண சாமி.

அதுபோன்று, ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த கிரண் பேடி, ஆளுநரான பின்பும், காவல் துறை அதிகாரி போலவே நடந்துகொள்கிறார் என்று கூறி வந்தார். கிரண்பேடி மிகவும் தொல்லை கொடுக்கிறார் என்று குடியரசுத் தலைவரிடம் நேரடியாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கிரண்பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்களோடு இணக்கமாகச் செயல்பட்டு வருகிறார் தமிழிசை. பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவை ஆய்வு செய்தது, வாரத்திற்கு ஒரு முட்டை அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட்டு வந்ததை 3 முட்டையாக அதிகரித்து அறிவித்தது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில், புதுவையில் எரிபொருள் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்தது, சாலை சரியில்லை என புகார் வந்ததும், மக்களோடு மக்களாகப் பேருந்தில் பயணித்து ஓட்டுநர்களிடம் கேட்டறிந்தது என மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தமிழிசை அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதால், கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா தடுப்பு மையங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார்,

அங்கிருக்கும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து விசாரிப்பது, மருத்துவத்துக்குத் தேவையான மருந்துகள், பிபிஇ கிட் ஆகியவை உள்ளதா என விசாரிப்பதோடு, அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் கேட்டறிகிறார்.

புதுச்சேரியில் ரெம்டெசிவர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு மற்றும் தெலங்கானா முதல்வரிடம் பேசி, 1000 ரெம்டெசிவர் மருந்தைப் புதுச்சேரிக்கு விமானத்தில் எடுத்து வந்து சுகாதாரத் துறையிடம் கொடுத்தார்.

இந்த சூழலில் கடந்த காலங்களில் மக்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்த இலவச அரிசியை உடனே வழங்க, ரூ.78 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளித்திருக்கிறார். நிவாரண உதவி, முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு பென்ஷன் வழங்குவதில் தடை ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை வழங்கவும் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

இவ்வாறு மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து வரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் பிரசாத் மகேஷ்வரி, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுளி ஆகியோர் தமிழிசைக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களிடம் , மக்கள் பிரச்சினை குறித்தும் அவசரத் தேவைகள் குறித்தும் தினசரி விவாதித்து, அதனை உடனே செய்வதற்காக இருவரிடமும் துறைகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். இருவரும், அந்தந்த துறையினரிடம் பேசி கோப்புகளுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக மக்களைச் சுகாதாரமாகப் பாதுகாத்தல், ஹெல்மெட் அணிவதை விட மாஸ்க் அணிவதை ஊக்குவித்தல், அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி வரும் தமிழிசைக்குப் புதுச்சேரி மக்கள் அதிக அன்பும், வரவேற்பும் கொடுத்து வருகின்றனர்.

-வணங்காமுடி

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 15 ஏப் 2021