மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்யும்: மோடி

தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்யும்: மோடி

அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. பரவலுக்கு ஏற்றவகையில் அந்தந்த மாநிலங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதேசமயம், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், மாநில முதல்வர்கள் என அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறார். அந்தவகையில் நேற்று (ஏப்ரல் 14) காணொலி வாயிலாக யூனியன் பிரதேச ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் பங்கேற்றனர். கொரோனா குறித்து மாநில ஆளுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது இதுவே முதன்முறை.

இந்தக் கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கலந்தலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், ”பத்து கோடி தடுப்பூசிகளை வேகமாக செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நான்கு நாட்கள் தடுப்பூசி திருவிழாவின் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரித்துள்ளது. புதிதாக தடுப்பூசி மையங்களும் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.

பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் இளைஞர்கள், கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மக்களை ஈடுபடுத்துவதில் ஆளுநர்கள் ஒரு முக்கிய தூணாக இருப்பதுடன், மாநில அரசுகளுடன் இணைந்தும், அரசை வழிநடத்தியும் ஆளுநர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் மாநிலங்கள் தேசிய உறுதிப்பாட்டை வலுப்படுத்த முடியும்.

மாநில அரசுகளுடன் சமூக நிறுவனங்கள் தடையின்றி ஒத்துழைப்பை அளித்திடவும், தடுப்பூசியுடன், ஆயுஷ் மருந்துகள் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்துபவர்களாகவும் ஆளுநர்கள் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, "கடந்தாண்டு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டதன்மூலம் வெற்றியைப் பெற முடிந்தது. இது நமக்கு கிடைத்த பாடம். இந்தாண்டும் அரசியல் வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொரோனாவை வீழ்த்த வேண்டும்.

கடந்த 2 வாரங்களில் 10 மாநிலங்களில் 85 சதவிகித பாதிப்பும், 89 சதவிகித மரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாநிலங்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசியல் சாசன தலைவர்களாக ஆளுநர்கள் திகழ்கின்றனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆளுநர்களுக்கு முக்கிய பங்குள்ளது” என்று கூறினார்.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 15 ஏப் 2021