மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

கொரோனா – ‘குடி’மகன்கள் – டாஸ்மாக்... ஓர் அலசல்!

கொரோனா – ‘குடி’மகன்கள் – டாஸ்மாக்... ஓர் அலசல்!

‘கொரோனா தடுப்பூசி போட்டதும் ஐந்து நாட்களுக்கு மதுவைத் தொடக்கூடாது. 45 நாட்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம்’ என்று கொரோனா தடுப்பூசி போடும் இடத்தில் வலியுறுத்துகிறார்கள்.

இந்த அறிவுறுத்தல் ‘கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு மது குடித்தால் என்னவாகும்?’ என்பது மதுப்பிரியர்களின் பலத்த சந்தேகமாக இருந்து வருகிறது. இந்த சந்தேகத்துக்குச் சரியான விடை கிடைக்காததால், பெரும்பாலான மதுப்பிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர்.

ஆனால், ‘கொரோனா இரண்டாவது அலை தீயாக பரவி பலரையும் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி, தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே’ என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

சரி, தடுப்பூசி போட்டுக்கொண்டு முதலில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று ‘குடி’மகன் நினைக்கும் சூழலில் கடந்த 10.04.2021 முதல் கோயில் வழிபாடுகள், திரையரங்குகள், சிறு குறு வியாபாரிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்த தமிழக அரசு, டாஸ்மாக்கை மட்டும் வழக்கம்போல் திறந்துவைத்திருக்கிறது.

‘மதுக்கடையிலோ, மது அருந்துபவர்களுக்கோ கொரோனா வராதா? மது குடித்தால் தடுப்பூசி பயன்தராதா?’ என்கிற கேள்விகளும், டாஸ்மாக்குக்குக் கட்டுப்பாடுகள் விதிக்காதது குறித்தும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்த விமர்சனங்கள் குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி, “டாஸ்மாக்கைத் திறக்க வேண்டுமா, வேண்டாமா எனப் பல விவாதங்கள் செய்துவிட்டோம். முதன்முதலில் முழு ஊரடங்கு அமல்படுத்தும்போது அருகிலிருக்கும் மாநிலங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அப்படி மது வாங்கச் சென்றவர்கள் அங்கிருந்து கூடுதலாக கொரோனா தொற்றையும் அவர்களுடன் வாங்கி வந்தனர். இதனால்தான் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் இப்படி மாநிலம் கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மதுவுக்கு ஆசைப்பட்டு கொரோனாவை விலை கொடுத்து வாங்கிவரும் பொறுப்பற்றவர்களைக் கண்காணிக்க அதிக அளவு காவல்துறையினரையும், மருத்துவ ஊழியர்களையும் களத்தில் இறக்கிவிட வேண்டிய சூழல் உருவானது.

இதனால், கொரோனாவால் பாதிக்கப்படும் எளிய மக்களை கவனிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதை உணர்ந்துதான் டோக்கன் கொடுப்பது, ஆதார் கார்டு எண்ணை வாங்கிக்கொண்டு கொடுப்பது என்று சில கட்டுப்பாடுகள் விதித்து டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தமிழக அரசு.

முழுவதும் அடைத்துவிடலாம் என்றால், அப்படி அடைப்பதால் உருவாகும் சிக்கல் திறந்துவைப்பதைவிட அதிகமாக இருக்கிறது. இதையும் கவனத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களும் இந்த ஓராண்டுக்குள் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது, எப்படித் தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதை கற்றுக்கொண்டுவிட்டனர். அதில் தெளிவாகவும் இருக்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி போடுவதே தனிமனித சுதந்திரத்தில் அடங்கும் எனும்போது, மதுப்பழக்கத்தில் எப்படித் தமிழக அரசு தலையிட முடியும்? அரசு ஒரு கொள்கையை, ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது அதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் அது முழு வெற்றி அடையும்.

அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்தாலும் நான் போக மாட்டேன் என்று ஒருவர் முடிவு செய்துவிட்டால் அவரை யாரால் தடுக்க முடியும்... அரசு திறந்துவைத்தாலும் என்ன பயன்? எல்லாவற்றுக்கும் அரசைக் கைகாட்ட முடியாது. சட்டங்களும், திட்டங்களும், விதிகளும் இருக்கின்றன. குடிக்கக் கூடாது என்று அரசு கூறுகிறது. ஆனால், நான் குடிப்பேன் என்னை யாரும் கேட்க முடியாது என்று சொல்பவர்களை நம்மால் என்ன செய்ய முடியும்?

தேர்தல் முடிந்து தற்போதுதான் எல்லோரும் அடுத்தடுத்த நடவடிக்கையில் கவனம் செலுத்திவருகிறோம். விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கொரோனாவைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும். எண்ணிக்கை அதிகரிக்கும்போது டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் அரசு கட்டுப்பாடு விதிக்கும். இது உறுதி” என்கிறார்.

டாஸ்மாக் கடைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்காத தமிழக அரசின் முடிவு குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்டத் தலைவர் பால் பர்னபாஸ், “பல லட்சம் கோடி கடனில் இருக்கும் அரசுக்கு பில் இன்றி, ஜிஎஸ்டி இன்றி மொத்தமாக வருவாய் தரும் ஒரே நிறுவனம் டாஸ்மாக் மட்டும்தான். டாஸ்மாக் கடைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தாலும், குடிப்பதற்காகவே வாழும் சிலர் அதையெல்லாம் மதிப்பதில்லை. இவர்களால்தான் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகளே விதிக்காமல்விட்டது அரசு.

பக்கத்து மாநிலத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்டவர்கள்தான். குடிக்காமல் இருப்பதால் உண்டாகும் கை நடுக்கம், கால் நடுக்கம் போன்ற நோய்களுக்கு இது ஒரு மருந்துக்கடை என்றாகிவிட்டது. அதனால்தான் லாக்டெளன் போட்டாலும் அரசு இதை இயக்குகிறது.

தனிமனித ஒழுக்கமே சீர்குலைந்து கிடக்கும்போது அதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? சாராயத் தொழிற்சாலைக்கு காப்பகமாக தமிழக அரசு இருக்கிறது. வருமானம் வரும் தொழிலை யார் நிறுத்த விரும்புவார்கள்... அப்புறம் எப்படி இதை அடைப்பார்கள்?

எளிய குடும்பத்தினருக்கு டாஸ்மாக்... கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு எலைட் டாஸ்மாக்... என்று வைத்திருக்கும்போது அரசு எப்படி டாஸ்மாக் கடைகளை மூட நினைக்கும்” என்கிறார்.

ஒருபக்கம் டாஸ்மாக்... மறுபக்கம் கொரோனா தடுப்பூசி... இந்த இரண்டுக்கும் இடையில் மதுப்பிரியர்கள். இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பலர் ஆர்வம் காட்டினாலும், மதுப்பிரியர்கள் மத்தியில் மட்டும் லேசான தயக்கம் இருந்து வருகிறது. ஏனெனில், கொரோனா தடுப்பூசி போட்டால், நோய் எதிர்ப்பு சக்தி உருவாக 45 நாட்கள் மது குடிக்காமல் இருக்க வேண்டும் என்ற செவி வழிச் செய்திகள்தான். இதை மீறினால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் மிரட்டலான சில எச்சரிக்கைகள் வருவதால், குடிக்க முடியாதே என்பதற்காகவே மதுப்பிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள்.

உண்மையிலேயே, தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது குடிக்கக் கூடாது என தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளதா அல்லது மது குடிக்கலாமா, அதனால் எந்த பிரச்னை வருமா என்பது குறித்து பிரபல டாக்டர்களே விளக்கம் அளித்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த டாக்டர் பிபின் ஜிப்காதே இதுகுறித்து கூறுகையில், “ஆன்டிபாடிகளின் உற்பத்தியுடன் ஆல்கஹாலுக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை. தடுப்பூசி போட்ட பிறகு ஆன்டிபாடிகள் உருவாக மூன்று வாரங்கள் ஆகும். எனவே அந்த நேரத்தில் மது குடித்தால், நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எதிர்ப்பு சக்தி உருவாக அதிக நேரமெடுக்கும். தடுப்பூசி போட்ட பிறகு மது அருந்தாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருப்பதை உறுதி செய்யும்.

பொதுவாக மது குடிப்பது உடல் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். மனநலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது” என்கிறார்.

புனேவைச் சேர்ந்த டாக்டர் மகேஷ் குமார் லாகே கூறுகையில், “எந்த நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் தனது கொரோனா தடுப்பூசி வழிகாட்டுதல்களில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தடுப்பூசி உற்பத்தியாளர்களில் பைசர், மாடர்னா, அஸ்ட்ரஜெனிகா போன்றவை தங்கள் வழிகாட்டுதல்களில் மது அருந்துவதை ஒரு முரண்பாடாக குறிப்பிடவில்லை. ஸ்பூட்னிக் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மட்டுமே ரஷ்யாவில் மதுவைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளனர்.

ஆல்கஹால் நோய் எதிர்ப்பு மண்டல கட்டமைப்பை பாதிக்கிறது என்பதற்கான போதுமான ஆதாரங்களைச் சேகரிக்க இன்னும் அதிகமான அறிவியல் ஆய்வுகள் தேவை. அதேநேரம், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் 45 நாட்களுக்கு ஆல்கஹால் தவிர்ப்பதே நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சிக்கு நல்லது’’ என்கிறார்.

மேலும் மது, ஒருவரின் உடலில் தொற்று வைரஸ்களுக்கு எதிராக சண்டையிடும் திறனையும் குறைக்கக் கூடியது. எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்ட நேரத்தில் மதுவை மறப்பதே நல்லது என்பதே டாக்டர்களின் பொதுவான அறிவுறுத்தலாக இருக்கிறது.

முக்கியமாக, “இதயநோய், நீரிழிவு போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு கட்டாயம் மது பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது. எனவே, கொலைகாரக் கொரோனாவிடமிருந்து தப்பிக்க தடுப்பூசி எடுத்துக் கொண்டதும் மதுவுக்குச் சற்று காலம் ‘குட்பை’ சொல்வதே நல்லது. அதற்கு, தமிழக அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட்டு, திறந்துவைத்துள்ள மதுபானக் கடைகளை மூட தீவிரமாக ஆலோசிப்பது மட்டுமே வீரியமான கொரோனா பரவலுக்குத் தீர்வாக இருக்கும்” என்பது பலரின் கருத்தாக உள்ளது.

-ராஜ்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 15 ஏப் 2021