மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

பெரியார் மண்ணில் அம்பேத்கருக்கு சிலை எங்கே? ஸ்டாலினுக்கு ஒரு மடல்!

பெரியார் மண்ணில் அம்பேத்கருக்கு சிலை எங்கே?  ஸ்டாலினுக்கு ஒரு மடல்!

இன்று (ஏப்ரல் 14) ஆம் தேதி மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு தலைவர்களும் இன்று அம்பேத்கரின் புகழைப் போற்றுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸின் செய்தித் தொடர்பாளரும், பொதுச் செயலாளருமான திருச்சி ஜி.கே. முரளிதரன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை கடிதமாக எழுதியிருக்கிறார். இத்தனை காலமாக இப்படியா இருக்கிறது என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு இருக்கிறது அவரது கடிதம்.

மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஜி.கே. முரளிதரன் அப்படி என்னதான் சொல்கிறார்?

“ ஐயா,கடந்த ஏழாம் தேதி அரக்கோணம் அருகில் சோகனூரில் நிகழ்ந்த சோக சம்பவம் வளர்ந்த தமிழகத்திற்கு வடுவாகிப்போனதை நீங்கள் அறிவீர்கள். சனாதன வர்ண பேதங்களை ஒழிக்கவேண்டும் என்பதில் பேச்சளவில் நாம் காட்டும் ஆர்வத்தில் அரை சதவிகிதம்கூட வர்க்க பேதத்தை ஒழிப்பதில் காட்டுவதில்லையோ என்ற குற்ற உணர்ச்சி பல நேரங்களில் ஏற்படுகிறது.

சாதி இரண்டொழிய வேறில்லை என்பதை வேர்களும் உணர்ந்துகொள்ள ஏதுவாகத்தான் தங்கள் தந்தையார் சமத்துவபுரம் என்ற கான்செப்டையே உருவாக்கினார். அதை மாடலாக வைத்து நாடும் நகரமும் நகரும் என்று அவர் ஆசைப்பட்டதில் அரைப்புள்ளி கூட குற்றம் சொல்லமுடியாது. இப்படி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உணரவைக்க அவர் செய்த சர்வபரிச் சேவைகளும் செல்லுபடியாகாமல் செய்வதே அடுத்து வந்த அரசுகளின் முதல் வேலையாகிப் போனது தாங்கள் அறியாததல்ல.

இந்த நிலையில் தங்களிடம் நான் மானுடம் வாழ இரண்டு கோரிக்கைகள் வைக்க நினைக்கிறேன்.

நம் தேசியத்தலைவர்கள் மகாத்மா காந்தி, காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றோரின் பிறந்தநாளில் கொடியேற்றி வைத்து உறுதி மொழி எடுத்துக்கொள்வார்களே. அதே போல அரசு அலுவலர்களும் அரசியல் இயக்கங்களும் இந்தியாவின் சட்டத் தந்தை பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கார் பிறந்ததினத்தை சமத்துவ சமூக நல்லிணக்க தினமாக அறிவித்து அன்று காலை எல்லோரும் சாதி மத தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும் என்பதை அரசு சட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

என் இரண்டாவது கோரி்க்கை.... பகுத்தறிவு பகலவன் ஐயா பெரியார் பிறந்த ஈரோட்டில் சட்டமேதை அம்பேத்காருக்கு ஒரு சிலை இல்லை. ஒவ்வொரு ஜனன, மரண தினத்தின் போதும் பாபாசாஹிப்பின் படத்தை மாட்டி அனுஷ்டிப்பதே அங்கு வாடிக்கையாய் இருக்கிறது. இந்தக் குறையும் உங்கள் ஆட்சிக்காலத்தில் தூரவீசி எறியப்படட்டும்.

பெரியார் பூமியில் அம்பேத்கார் சிலைவைத்த பெரும்பேறு உங்களுக்கு கிடைக்கட்டும். ஆட்சிக்கு வந்தவுடன் இந்த எளியேனின் கோரிக்கையை நிறைவேற்ற பாருங்கள்... பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜி.கே.முரளிதரன்.

இதுகுறித்து ஈரோடு வாழ் நண்பர்கள் சிலரிடம் பேசியபோது, “ஈரோட்டில் அம்பேத்கர் பிறந்த, மறைந்த தினங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் மரியாதை செலுத்துவதற்கும் அம்பேத்கருக்கு சிலை ஒன்று இல்லை என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத வகையில் இருக்கிறது. பெரியாரின் மண்ணுக்கு இந்த பேரவலம் இருக்கிறது. பெரியாரின் பிறந்த மண்ணில் அம்பேத்கருக்கு பொது இடத்தில் இடமில்லை என்பது திராவிட ஆட்சிக்கு தீராத களங்கம். காங்கிரஸ் சார்பில் இப்பிரச்சினையைக் கிளப்பிய ஜி.கே.முரளிதரனுக்கு ஈரோடு மக்கள் சார்பில் நன்றி கூறுகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தட்டும்” என்று கூறுகிறார்கள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 14 ஏப் 2021