மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

வீடு தேடிச் சென்ற உதயநிதி-வியந்த நிர்வாகிகள்!

வீடு தேடிச் சென்ற உதயநிதி-வியந்த நிர்வாகிகள்!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக ஒரு குறிப்பிட்ட பணியில் மட்டும் கவனமெடுத்து அதிலேயே ஈடுபட்டார். ‘இப்படியும் செய்யலாமே?’என்று பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது உதயநிதியின் இந்த நடவடிக்கை.

அப்படி என்ன செய்தார்?

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுதும் பிரச்சாரத்தில் பிசியாக இருந்ததால் தனது தொகுதிக்கு குறைந்த நாட்களே வரமுடிந்தது. அதனால் இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்களான அசன் முகமது ஜின்னா, ஜோயல் ஆகிய இருவரிடமும் தனக்கான பிரச்சாரப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் உதயநிதி. மேலும் உதயநிதியின் தலைமை ஏஜென்ட்டாக அசன் முகமது ஜின்னாதான் செயல்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரத்துக்குச் சென்றதால், அவரது தொகுதியில் கூடுதல் கவனமெடுத்து தேர்தல் வேலைகளைச் செய்தார்கள் இவர்கள்.

இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு ஒரு சில நாட்களில் ஜின்னா, ஜோயல் ஆகியோரின் வீடுகளுக்கு நேராக சென்ற உதயநிதி ஸ்டாலின் தனக்காக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உழைத்தமைக்காக நன்றி தெரிவித்தார். அவர்களின் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்டார்.

இவர்கள் மட்டுமல்ல சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட திமுகவின் 2 பகுதிச் செயலாளர்கள், தலா ஏழு என 14 வட்டச் செயலாளர்கள் இளைஞரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி, மீனவரணி, இலக்கிய அணி, வர்த்தகர் அணி, மாணவரணி, சிறுபான்மை அணி என ஒவ்வொரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் வீட்டுக்கும் நேரில் செல்வதை மட்டுமே சில நாட்கள் முழு பணியாக வைத்துக் கொண்ட உதயநிதி... ஒவ்வொரு நிர்வாகி வீட்டுக்கும் சென்று அவர்களுக்கு நன்றி தெரிவித்து, நிர்வாகிகளின் குடும்பத்தினர், குழந்தைகளோடு பேசி கட்சியினருக்கு ஊக்கத்தை அளித்துச் சென்றிருக்கிறார்.

“தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு நன்றி சொல்லக் கூட நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் உலகில்...தான் போட்டியிட்ட தொகுதியில் பணியாற்றிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக ஒவ்வொருவர் வீட்டுக்காக சென்ற உதயநிதியின் பண்பு கட்சிக்குள் பலத்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி என்றால் எங்கோ இருப்பவன் என்று நினைத்து விடாதீர்கள். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள், என்ன குறை இருந்தாலும் சொல்லுங்கள் நான் நிவர்த்தி செய்கிறேன்’என்று தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். திமுகவில் மட்டுமல்ல பிற கட்சியிலுள்ளோரும் பின்பற்ற வேண்டிய நல்ல அணுகுமுறை இது” என்கிறார்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக நிர்வாகிகள்.

-ஆரா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

புதன் 14 ஏப் 2021