மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

டிஜிபி, தலைமைச் செயலாளர் டெல்லி சென்றதன் உண்மைப் பின்னணி!

டிஜிபி, தலைமைச் செயலாளர் டெல்லி சென்றதன் உண்மைப் பின்னணி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், மூன்று நாட்கள் கழித்து ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் டெல்லி புறப்பட்டுச் சென்றது அரசியல் வட்டாரங்களிலும், அதிகார வட்டாரங்களிலும் தீவிர பேசுபொருள் ஆகியது.

9 ஆம் தேதி காலை 6.30க்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில், டிஜிபி திரிபாதி, தமிழக உள்துறை இணை செயலாளா் முருகன் ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டனர். சற்று நேரத்தில் 7.15 மணிக்கு தமிழக அரசு தலைமை செயலாளா் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசு உள்துறை செயலாளா் பிரபாகா் ஆகியோர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தேர்தல் முடிந்த சிற்சில தினங்களிலேயே தமிழகத்தின் தலைமை அதிகார பீடங்கள் திடீரென டெல்லிக்குச் சென்றதன் பின்னால் பல்வேறு காரணங்கள் பரபரப்பாக பேசப்பட்டன.

தமிழகத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்று தெரிந்துவிட்ட காரணத்தால், உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோரை டெல்லிக்கு அழைத்திருக்கிறார். இதில் வேறு என்ன செய்யலாம் என்று உள்துறை ஆலோசித்துக் கொண்டிருக்கிறது என்று ஒருபக்கம் தேர்தல் படபடப்பு இறக்கை கட்டிப் பறந்தது. டிஜிபி திரிபாதி சில நாட்கள் ஓய்வுபெற இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய டிஜிபி யார் என்பதை புதிய அரசு பதவியேற்கும் முன்பே முடிவெடுத்துவிடுவது என்ற அஜெண்டாவுக்காகவும் உயர் அதிகாரிகள் டெல்லி பறந்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் சமூக தளங்களில் பரவின. துறை ரீதியான பயணம் என்றும், ஆனாலும் இந்த கொரோனா காலத்தில் நேரடியாக அழைத்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் விவாதங்கள் வெடித்துக் கொண்டிருந்தன.

இந்த பின்னணியில் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் டெல்லிக்குச் சென்றதன் நிஜப் பின்னணி என்ன?

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உறுதி தொடர்பாக ஆண்டு தோறும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சார்பில் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.

இந்நிலையில் இந்தக் கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி நடப்பதற்கு தமிழகத்தில் இருந்து ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. சிறப்புக் காரணம் என்பதை விட காரணமே தமிழ்நாடுதான்.

தற்போது எஸ்டிஎஃப் படையில் பணிபுரியும் எஸ்பி மூர்த்தி (இவர் ஏற்கனவே கோவை மாவட்ட எஸ்பியாக பணியாற்றியவர்), தற்போது நெல்லை மாவட்ட எஸ்பியாக இருக்கும் மணிவண்ணன் ஆகியோர் தங்களது பதவி உறுதி தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவ்விருவருக்கும் சாதகமான தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால் இவ்விருவரின் பதவி உறுதி குறித்து முடிவெடுக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வேண்டியது அவசியமானது. தமிழகத்துக்கான அதிகாரிகள் பற்றி முடிவெடுக்க வேண்டியிருப்பதால் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயமானது. இதனாலேயே எஸ்பி மணிவண்ணன், எஸ்பிமூர்த்தி ஆகியோரின் பதவி உறுதி தொடர்பாக விவாதிக்கவே மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் உயரதிகாரிகள் அவசரமாக டெல்லி செல்ல காரணம் மோடி, அமித் ஷா ஆகிய இருவர்தான் என்ற பரபரப்புகளுக்கு மத்தியிலே.... இவர்கள் டெல்லி செல்ல காரணம் மூர்த்தி, மணிவண்ணன் ஆகிய இருவர்தான் என்பதே பரபரப்புக்குப் பின்னால் அமைதியாக இருக்கும் உண்மை.

ராஜ்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

புதன் 14 ஏப் 2021