மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

புதுச்சேரி: முதல்வர் பதவி யாருக்கு? மூன்று வியூகங்கள்!

புதுச்சேரி: முதல்வர் பதவி யாருக்கு? மூன்று வியூகங்கள்!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டமன்றமும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தலைச் சந்தித்து விட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தில் அதிரடியாகப் பல மாற்றங்கள் அரங்கேறின.

திமுக காங்கிரஸ் கூட்டணியாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக திடீரென பொங்கியது திமுக. தற்போதைய அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் புதுச்சேரிக்கு வந்து திமுகவின் ஆட்சி அமைப்போம் என்று நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்திப் பேசினார்.

இந்த நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார் முதல்வர் நாராயணசாமி.

இந்த அதிரடிகள் அரங்கேறிய நிலையில்தான் புதுச்சேரியில் தேர்தல் வந்தது.

காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் உருவாகாமல் தடுப்பதோடு பாஜக ஆட்சியை எப்படியாவது புதுச்சேரியில் நிறுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக வேலை செய்கிறது பாஜக.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த நமச்சிவாயம் பாஜகவுக்குச் சென்றார். மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் பாஜகவுக்குத் தாவினார்கள்.

ஒருவழியாக அதிமுக - பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து புதுச்சேரியில் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தன. என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் பாஜக 9 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணியில் இருக்கும் பாமக முதலில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிறகு வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

திமுக கூட்டணியில் திமுக 14 தொகுதிகள், காங்கிரஸ் 14 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தலா ஒரு தொகுதி என மொத்தம் 30 தொகுதிகளில் போட்டியிட்டனர்.

ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் முகாமிட்டிருக்கிறார். புதுச்சேரி பாஜகவின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும்

சரன்லால் குரானா, மத்திய அமைச்சர் மெக்வால் ஆகியோரும் புதுச்சேரியிலேயே இருந்து தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்கிற தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.

பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, தேர்தல் முடிந்த பிறகு மத்திய அரசும் பாஜகவும் நடத்திய ஆய்வுகளின் முடிவில் தங்கள் அணிக்கு சாதகமான முடிவுகளே வரும் என பாஜக நம்பிக்கையாக இருக்கிறது.

அதாவது என்.ஆர்.காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக - பாஜக ஆகிய கட்சிகளும் ஓரளவு வெற்றி பெறும் என்பதுதான் பாஜக மேலிடத்துக்குக் கிடைத்த அதிகாரபூர்வக் கணிப்பு. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களும் அதிமுகவுக்கு 4 இடங்களும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் கிடைக்கும் என்பது புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்கள் நடத்திய பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்குக் கிடைத்துள்ள முடிவு.

இதனால் நம்பிக்கையோடு இருக்கும் பாஜக, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தில் தற்போது தீவிரமாகிவிட்டது.

கூட்டணியின் அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடுவதால் ஏற்கனவே முதல்வராகவும் இருந்திருப்பதால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தன் தலைமையில்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தில் இருக்கிறார். இதுபற்றி அவர் பாஜக தலைவர்களுடனும் பேசிவருகிறார்.

தேர்தலுக்கு முன் காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பிரச்சாரக் கூட்டத்தில் '2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது நமச்சிவாயம் தலைமையில்தான் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால், நாராயணசாமி டெல்லி சென்று, காந்தி குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் பதவியைத் தனக்குக் குறுக்குவழிகள் மூலம் பெற்றுவிட்டார்' என்று பேசினார். இதன் மூலம் பாஜக அப்போதே நமச்சிவாயத்துக்குத்தான் முதல்வர் பதவி தருவோம் எனக் குறிப்பாக தெரிவித்ததை என்.ரங்கசாமி உணர்ந்துகொண்டார்.

தேர்தலுக்கு முன்னர் ரங்கசாமியைப் பலவழிகளிலும் பேசி கூட்டணியில் நீடிக்க வைத்தது பாஜக.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய இந்த ஒரு மாதக் காலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முதல்வராக ஆவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். நமச்சிவாயத்தின் சின்ன மாமனார்தான் ரங்கசாமி. இந்த அடிப்படையில் நமச்சிவாயம் குடும்பத்தினரோடு ரங்கசாமி குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் பேசி முதல்வர் பதவியை டேர்ம் வைத்து பகிர்ந்துகொள்ளலாமா என்பது வரைக்கும் ஆலோசனை நடத்தி உள்ளார்கள்.

ஆனால் அமித் ஷாவிடமிருந்து புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்களுக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு என்னவெனில் பாஜக எவ்வளவு குறைவான இடங்களைப் பெற்றிருந்தாலும் புதுச்சேரியில் பாஜக முதல்வர்தான் இருக்க வேண்டும் என்பதுதான். இதனடிப்படையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் தன்னுடைய கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறது பாஜக. அவர்களுக்கான தேர்தல் செலவையும் பாஜகதான் ஏற்றிருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்து ரங்கசாமி முதல்வராக உரிமை கோரும் பட்சத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை அதிகபட்சமாக பாஜகவுக்கு இழுத்து ரங்கசாமிக்கு நெருக்கடியை உண்டாக்கி பாஜகவைச் சேர்ந்தவரையே முதல்வராக உட்கார வைப்பது என்பதுதான் அமித் ஷாவின் திட்டம்.

அதுமட்டுமல்ல... இந்தத் தேர்தலில் புதுச்சேரி திமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் பாஜகவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலும் திமுக எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் இழுப்பது என்ற ஏற்பாடுகளுக்கும் தயாராகி வருகிறார்கள் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்கள்.

இன்னொரு பக்கம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வேறுவிதமான திட்டங்கள் தயாராக இருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்ற கணிப்பு பரவலாக புதுச்சேரியில் இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படலாம் என திமுக - காங்கிரஸார் ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அதாவது தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால்... அக்காட்சியை பாஜகவின் நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் வகையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் ரங்கசாமிக்கு ஆதரவளித்து அவரை பாஜகவின் ஆதரவு தேவை இல்லாமல் முதல்வர் ஆக்குவது... இதன்மூலம் புதுச்சேரி அரசியலில் இருந்து பாஜகவை விரட்டுவது என்ற திட்டத்தில் திமுக - காங்கிரஸ் பிரமுகர்களிடம் ஒரு ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய ஆட்சி கையில் இருக்கும் தைரியத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் பாஜக எந்தக் கட்சியை வேண்டுமானாலும் துண்டாடலாம் என்ற நிலை ஏற்பட சாத்தியம் அதிகம் உள்ளது. இதைத் தடுப்பதற்கு தேர்தலுக்கு முன் இருந்த அரசியல் சூழலுக்கு எதிராக... தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணிகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் புதுச்சேரி அரசியலில் ஏற்பட்டுள்ளது.

வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

புதன் 14 ஏப் 2021