மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தேர்தலை நடத்துவது யார்? மறக்கப்படும் மனிதர்களின் கதை!

தேர்தலை நடத்துவது யார்? மறக்கப்படும் மனிதர்களின் கதை!

ராஜன் குறை

இந்திய மக்களாட்சியின் உயிர்நாடியாகத் தேர்தல்கள் விளங்குகின்றன என்றால் மிகையாகாது. இப்போதெல்லாம் தேர்தலில் பெரும்பான்மை கிடைத்த பிறகு அரசு பெரும்பான்மையின் எதேச்சதிகாரமாக மாறுவது சுலபமாக இருக்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் முக்கியமான முடிவுகள் குறித்துக்கூட விவாதங்கள் நடப்பதில்லை. எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் வெளிநடப்பு செய்கின்றன அல்லது வெளியேற்றப்படுகின்றன.

ஊடகங்கள் மீது கடுமையான அழுத்தம் இருக்கிறது, நீதிமன்றங்களும் சுயேச்சையாகச் செயல்படுகின்றனவா என்று பலரும் கேள்வி எழுப்பும் நிலையில்தான் இருக்கிறது. அரசு சார் அமைப்புகள் எதுவும் சுயேச்சையாகச் செயல்படுவதில்லை; அரசின் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கின்றன என்ற குற்றச்சாட்டை புறமொதுக்க முடியாது.

அதனால் ஒரு பெரும்பான்மை எதேச்சதிகாரத்திலிருந்து தப்ப, ஆட்சியின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த, மக்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு தேர்தலாகத்தான் இருக்கிறது. அதிலும் இ.வி.எம் குறித்தும், பணப்பட்டுவாடா குறித்தும் பல ஐயங்கள் இருந்தாலும் தமிழகத்தில் பெரும்பாலும் தேர்தல் மேற்கு வங்கம்போல பெரிய அளவு வன்முறைகள் இல்லாமல் நடந்தேறுகிறது.

இந்த நிலையில் இவ்வளவு முக்கியமான தேர்தல் எப்படி நடக்கிறது என்பதைப் பரிசீலிக்கும்போது தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது என்பதுடன் பலரும் நிறுத்திக்கொள்கிறார்கள். இந்தப் புரிதலால் இரண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உள்ளபடியே தேர்தல் எப்படி நடக்கிறது என்பதையும், அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் குறித்து பொதுவெளியில், ஊடகங்களில் சிந்திக்கப்படுவதில்லை. அதே நேரம் கட்சி கட்டமைப்பு குறித்தும் போதுமான அளவு கவனம் செலுத்தப்படுவதில்லை. எனவே, உள்ளபடியே தேர்தல் நடத்தும் களமான ‘பூத்’ என ஆங்கிலத்தில் கூறப்படும் வாக்குச்சாவடியில் என்ன நடக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்வதும், சிந்திப்பதும் அவசியமாகும்.

தேர்தல் பணியாளர்கள், கட்சி / வேட்பாளர்களின் முகவர்கள், வாக்குச்சாவடிகள் ஆகிய மூன்று தலைப்புகளில் சில அம்சங்களை விவாதிப்போம்.

தேர்தல் பணியாளர்கள்

நடந்து முடிந்த தமிழக தேர்தலில் நான்கு லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் தேர்தல் பணியாற்றியுள்ளார்கள். இதில் காவல்துறையும் அடக்கம். ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சராசரியாக 1000 பேர் வாக்களிப்பார்கள் என்று கொண்டால். அந்த இயந்திரம் உள்ள வாக்குச்சாவடியை நிர்வகிக்க நான்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மூன்று பேர் Polling Officers எனவும், அவர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் Presiding Officer எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் Zonal officer என்பவருக்கு கீழே பணிபுரிகிறார்கள்.

வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குப்பெட்டிகளை ஒப்படைப்பது, அவற்றை திரும்பப் பெறுவது, இடையில் பிரச்சினை ஏற்பட்டால் தீர்வு கூறுவது எல்லாம் Zonal Officer என்பவர்தான். இவர் பல வாக்குச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருப்பார். இந்த மூன்று வகையினருமே (Polling Officer, Presiding Officer, Zonal Officer) பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசுப் பணியாளர்கள்தான்.

இதில் அரசு ஊதியம் பெறும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் அடங்குவர். அரசுப் பணியாளர்கள் என்பதால் அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், கடமை தவறினால் அவர்கள் துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் காரணம்.

வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் இவர்களைத்தான் சந்திக்கிறார்கள். பெயரை, அடையாளத்தைச் சரிபார்த்து விரலில் மை வைத்து, அவர்கள் வாக்குப்பதிவு செய்ய இயந்திரத்தை முடுக்குவது இந்த அலுவலர்கள்தான். அவர்கள் பணியை மேற்பார்வையிட வேட்பாளர்கள் / கட்சிகளின் சார்பில் முகவர்கள் இருப்பார்கள். அலுவலர்களும், முகவர்களும் சேர்ந்துதான் வாக்காளர்களின் ஐயங்களுக்கு விடைசொல்லி, அவர்கள் அடையாளத்தை உறுதிசெய்து வாக்களிக்க வகை செய்கிறார்கள்.

அதாவது தேர்தல் என்பதே இவர்களால்தான் நிகழ்கிறது. Zonal Officer-ஓ, வேறு தேர்தல் பொறுப்பாளர்களோ, வேட்பாளர்களோ சில வாக்குச்சாவடிகளுக்குச் சென்று சரிவர எல்லாம் நிகழ்கிறதா பார்ப்பார்கள். பல வாக்குச்சாவடிகளுக்கு யாரும் செல்ல மாட்டார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்பவர்களைப் பணியில் அமர்த்துவது, பயிற்றுவிப்பது போன்றவை சரிவர முறைப்படுத்தப்படாமல்தான் நடக்கிறது. சில துறைகள், நிறுவனங்கள் ஊழியர்கள் பெயரை தாமாகவே தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புகின்றன. சிலவற்றில் பணியாளரின் விருப்பத்தைக் கேட்கிறார்கள். சிலர் விருப்பம் தெரிவிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். சில அலுவலகங்கள், கல்லூரி துறைகளில் யாரையுமே பணிக்குப் பரிந்துரைப்பதில்லை. சில அறுபது வயதானவர்களைக்கூட பணிக்கு அனுப்புகின்றன. (மத்திய பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெறும் வயது 65 என்பதால் 63 வயது பெண்ணை பணிக்கு அனுப்பியிருக்கிறார்கள்; அவர் அடைந்த இன்னல்கள் சொல்லி மாளாது.) சிலர் பணிச்சுமையால் ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துள்ளனர். எல்லா அரசு அமைப்புகளுக்கும் தேர்தலுக்கு பணியாளர்களை எப்படித் தேர்வு செய்து அனுப்பவேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுவாக்கி தேர்தல் ஆணையம் தனது வலைத்தளத்திலும் வெளியிட வேண்டும்.

ஒரு கல்லூரியில் ஆறு மாத கைக்குழந்தை உள்ள பெண்ணை தேர்தல் பணிக்கு துறைத்தலைவர் கட்டாயப்படுத்தி அனுப்பியுள்ளார். ஆனால் அதே கல்லூரியில் வேறொரு துறையில் யாருமே பணிக்கு அனுப்பப்படவில்லை. பிரச்சினை இப்படித் தொடங்குகிறது.

பின்னர் பயிற்சி மையங்களை அமைப்பது, பயிற்சி தருவது ஆகியவையும் ஒன்றுபோல் இருப்பதில்லை. பல இடங்களில் ஏனோதானோவென்று செயல்படுகிறார்கள். சில மையங்கள் மூன்று முறை பயிற்சிக்கு வர வேண்டும் எனக் கட்டாயமாகச் சொல்கிறார்கள். வராவிட்டால் விளக்கம் கேட்கிறார்கள். சில மையங்களில் கண்டுகொள்வதில்லை. வந்தால் வா, வராவிட்டால் போ என்று இருக்கிறார்கள். பலருக்குத் தேர்தல் தினத்தன்று செய்ய வேண்டிய பணிகள் சரிவரத் தெரிவதில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டு ஏதோ செய்கிறார்கள்.

பயிற்சி மையத்தை அலுவல் இடத்துக்கு 40, 50 கிலோமீட்டருக்கு அப்பால் போடுகிறார்கள். இந்தப் பயிற்சிகளைத் தாராளமாக ஆன்லைன் வகுப்புகளிலேயே நடத்தலாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி இயக்குவது, எந்தெந்த படிவங்களை எப்படி நிரப்ப வேண்டும் போன்றவற்றை சொல்வதற்காக வார இறுதி விடுமுறை நாட்களிலோ, வேலை நாட்களிலோ அலைக்கழிக்க வேண்டிய தேவை இல்லை. இவற்றையெல்லாம் அழகாக வீடியோ எடுத்து ஒவ்வொரு பணியாளருக்கும் கடவு எண் கொடுத்து, கணினியிலோ, அலைபேசியிலோ லாக் இன் செய்து பார்க்கச் சொல்லலாம். கடவு எண்ணைப் பயன்படுத்துவதால் அவர்கள் பார்த்தார்களா, இல்லையா என்பதை சுலபத்தில் உறுதி செய்துகொள்ளலாம்.

அடுத்து எந்த வாக்குச்சாவடிக்கு யாரை அனுப்புகிறார்கள் என்பதிலும் எந்த முறையும் பின்பற்றப்படுவதில்லை. உடல்நலக் குறைவு உள்ளவர்களை, முதிய பெண்களைத் தொலைதூர வாக்குச்சாவடிகளுக்குப் போடுகிறார்கள். ஆரோக்கியமான சிறுவயது ஆண்களை நகர்ப்பகுதிகளில் போடுகிறார்கள். இதையெல்லாம் யார் எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள் என்பது தெரிவதில்லை. இந்தத் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை.

தேர்தல் அன்று முன்தினம் காலையில் பயிற்சி வகுப்புக்கு வரச்சொல்லி எந்த வாக்குச்சாவடிக்குச் செல்லவேண்டும் என்று கூறுகிறார்கள். போக்குவரத்து வசதிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை. அவரவர்களாக வழியை விசாரித்து வசதிக்கேற்றபடி பயணம் செய்து வாக்குச்சாவடியைச் சென்று அடைய வேண்டும். மதியம் அங்கே சென்றதிலிருந்து மறுநாள் பின்னிரவில் அல்லது நள்ளிரவில் வாக்குப்பெட்டிகளை ஒப்படைப்பதுவரை வாக்குச்சாவடிகளில்தான் தங்க வேண்டும்.

பெரும்பாலும் இவை பள்ளி வகுப்பறைகளாக இருக்கும். தேர்தலுக்கு முதல் நாள் இரவும் நள்ளிரவு வரை தயாரிப்பு பணிகள் இருக்கும். ஆனால் இந்த பணியாளர்களுக்கான உணவை ஏற்பாடு செய்து தருவதில்லை. அவர்கள் வாக்குப்பெட்டி வந்த பிறகு வெளியிலும் செல்ல முடியாது. இவர்களுக்கான உணவு, தேநீர் போன்றவற்றை தருவது மாவட்ட நிர்வாகத்தின், வி.ஏ.ஓ போன்றவர்கள் பொறுப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கட்சிக்காரர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிடுகிறார்கள்.

தேர்தல் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தேர்தல் பணியாளர்கள் உண்டார்களா, உறங்கினார்களா, அவர்களுக்குக் கழிப்பிட வசதிகள் இருந்ததா, அவர்களால் குளிக்க முடிந்ததா என்றெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. கொத்தடிமைக் கூட்டம் போல அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இதெல்லாம் இடத்துக்கு இடம் மாறுபடலாம் என்றாலும் இது எதுவுமே முறைப்படுத்தப்படுவதில்லை என்பதுதான் அவலம். யார், எதற்கு பொறுப்பு என்பதே கூட தெளிவுபடுத்தப்படுவதில்லை.

ஒரு வழியாக எல்லா படிவங்களையும் நிரப்பி, சரி பார்த்து, வாக்குப்பெட்டிகளை சீல் வைத்து மண்டல அதிகாரியிடம் கொடுக்கும்போது இரவு பன்னிரண்டு மணி. காலை இரண்டு மணி என்றாகிவிடுகிறது. அதற்குப் பிறகு வீடு திரும்ப போக்குவரத்து வசதிகள் எதுவும் இருப்பதில்லை. மறுநாள் காலைதான் கிளம்ப முடிகிறது. ஆனால் இரண்டு இரவுகள் பெரும்பகுதி விழித்திருந்து வேலை பார்த்த இவர்களுக்குத் தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்கப்படுவதில்லை.

பெரும்பாலான பணியிடங்களில் இவர்களை வேலைக்கு வரச்சொல்கிறார்கள். பலர் வாக்குச்சாவடியிலிருந்தே குளித்துவிட்டோ, குளிக்காமலோ அப்படியே பணிக்குச் செல்கிறார்கள். சிலர் சொந்தப் பொறுப்பில் விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் அரக்கப் பரக்க இல்லம் சென்று குளித்து உடைமாற்றி பணியிடத்துக்கு ஓடுகிறார்கள். பெரும்பாலோர் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.

தேர்தலில் எத்தனை சதவிகிதம் வாக்குப்பதிவு, மாபெரும் மக்களாட்சி திருவிழா என்றெல்லாம் ஊடகங்களில் பேசுபவர்கள் உண்மையில் தேர்தலை நட த்துபவர்கள் அனுபவிக்கும் இன்னல்களைக் குறித்து சிறிதும் கவலையின்றி இருக்கிறார்கள். மூன்று பயிற்சி வகுப்புகள், இரு தினங்கள் வாக்குச்சாவடி பணி எல்லாம் சேர்த்து Polling Officer-க்கு 1,300 ரூபாயும், Presiding Officer-க்கு 1,700 ரூபாயும் படியாகக் கொடுக்கிறார்கள்.

நான் விசாரித்த சிலருக்கு 4,000 ரூபாய் வரை செலவாகியுள்ளது. இந்தப் பணத்துக்குப் பதில் அவர்களுக்குச் சத்தான எளிய உணவு கிடைப்பதை உறுதி செய்யலாம். தேர்தல் பணி முடிந்ததும் நள்ளிரவில் இல்லம் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்யலாம்.

கட்சி முகவர்கள்

ஒரு தொகுதியில் சராசரியாக இரண்டு லட்சம் வாக்குகள், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குச் சராசரியாக 1,000 வாக்குகள் என்று கொண்டால் ஒரு தொகுதிக்குக் குறைந்தது 200 வாக்குச்சாவடிகள் இருக்கும். எல்லா வாக்குச்சாவடிகளிலும் முகவர்களை நியமிக்கும் ஆற்றல் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. மூன்றாவது தேர்வு, நான்காவது தேர்வு என்றெல்லாம் ஊடகங்களில் கூறப்படும் ஒற்றைத் தலைவரை அடையாளமாகக்கொண்ட நாம் தமிழர், மக்கள் நீதி மையம் ஆகியவற்றுக்குப் பல வாக்குச்சாவடிகளில் முகவர்களே இருப்பதில்லை. அதனால் என்ன என்று கேட்கலாம்.

அரைகுறைப் பயிற்சியுடன் எங்கிருந்தோ வரும் தேர்தல் பணியாளர்களுக்கும், உள்ளூர் வாக்காளர்களுக்கும் பாலமாக இருந்து வாக்குப்பதிவைச் சரிபார்ப்பது, முறைப்படுத்துவது கட்சி முகவர்கள்தான். ஒரு வாக்காளர் வந்து பெயரைச்சொன்னால் அவர் பெயர் வாக்குப்பட்டியலில் இருப்பதைத் தேர்தல் அலுவலருடன் சேர்ந்து சரிபார்ப்பது கட்சி முகவர்தான். வாக்காளர் வாக்குச்சாவடி மாறி வந்துவிட்டால். அல்லது அவர் பெயர் இடம்பெறவில்லை, அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை என்பது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் வாக்காளருக்குத் தக்க ஆலோசனை கூறி தீர்வு காண்பதில் கட்சி முகவர்களின் பங்கு முக்கியமானது.

பெரும்பாலும் முகவர்கள் அந்த வாக்குச்சாவடி பகுதியிலேயே இருப்பதால் அவர்களுக்கு வாக்காளர்களை அல்லது அவர்கள் வசிக்கும் தெருவைத் தெரிந்திருக்கும். அதனால் தக்க ஆலோசனைகள் சொல்ல முடியும். அந்த வகையில் நா.த.க, ம.நீ.ம ஆகியவற்றிற்கு விழும் வாக்குகளுக்கும் உதவி புரிவது தி.மு.க, அ.இ.அ.தி.மு.க முகவர்களே. இந்தக் கட்சிகளிலும் கூட கட்சிப் பற்றுடன் வேலை செய்பவர்களுடன், ஊதியத்துக்காகப் பணியில் அமர்த்தப்படும் முகவர்களும் இப்போதெல்லாம் வாக்குச்சாவடிகளில் இருப்பதாகத் தெரிகிறது.

இப்படியாக ஒரு வாக்குச்சாவடியில் அமரும் நான்கு அரசு ஊழியர்களான தேர்தல் அலுவலர்களும், கட்சிகளின் அத்தாட்சி பெற்ற முகவர்களும்தான் வாக்குப்பதிவைச் சாத்தியப்படுத்துகிறார்கள். தேர்தல் ஆணையம் என்று எதுவும் அங்கிருப்பதில்லை என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். மிகப்பெரிய ஒழுங்கீனங்கள், பிரச்சினைகள் நடந்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிடும்.

வாக்குச்சாவடிகள்

கிராமப்பகுதிகளில் வாக்குச்சாவடி என்பது தெளிவாக இருக்கும். சிறு நகரங்களில், நகரங்களில் ஒரு வாக்காளர் தன்னுடைய வாக்குச்சாவடி எது என்று அறிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேடி அறிந்துகொள்வது சாத்தியமல்ல. அதில் தேடினால் பதில் கிடைக்காமல் மென்பொருள் நின்றுவிடுகிறது (Hanging). மேலும் வாக்குச்சாவடியின் எண், விலாசமெல்லாம் மிகவும் தெளிவற்று இருக்கிறது. இதனால் முன்பு எல்லாம் கட்சிக்காரர்கள் ‘பூத் சிலிப்’ என்ற வாக்குச்சாவடி சீட்டை ஒவ்வொரு வாக்காளருக்கும் தயாரித்து வீடு வீடாகச் சென்று கொடுப்பார்கள்.

நான் இரண்டு பெரிய கட்சிக்காரர்கள் கொடுத்த பூத் சிலிப்பும் வாங்கியிருக்கிறேன். கட்சிகள் இந்த பூத் சிலிப்பில் சின்னங்களை அச்சிடுவதால், அவர்கள் பூத் சிலிப் கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. மாவட்ட நிர்வாகமே பூத் சிலிப் கொடுக்கும் என்றார்கள். அப்படி எதுவும் நடப்பதில்லை. வாக்காளர் பெயர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படுவதில்லை. இடம்பெயர்ந்தவர் பெயர்களும் நீக்கப்படுவதில்லை. அடிக்கடி இடம்பெயரும் வாக்காளர் மூன்று வாக்காளர் அட்டைகளைக்கூட வைத்துள்ளார். தேர்தல் ஆணையத்துக்காக கணினியில் வாக்காளர் பெயர்களை உள்ளீடு செய்பவர்கள் ஏராளமான தவறுகளைச் செய்கிறார்கள். ஒருவரது வாக்காளர் அட்டையில் எந்த பிழையும் இல்லாமல் அமைவது பேரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவு பிரமாண்டமான ஆறரை கோடி வாக்காளர்களை கொண்ட தேர்தலை நடத்துவது என்பது சுலபமல்ல. இந்தியத் தேர்தல் ஆணையத்தை பாராட்டுவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதேநேரம் அரசு இயந்திரத்துடன், மாவட்ட நிர்வாகத்துடன் உள்ள Interface மேம்பட வேண்டும். கணினி மென்பொருள் நிர்வாகமும், உள்ளீடு செய்யும் பணி மேற்பார்வையும் மேம்பட வேண்டும். தேர்தல் அலுவலர்களை பணியில் அமர்த்துவது, பயிற்சியளிப்பது, பணியிட போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் அக்கறை செலுத்தப்பட வேண்டும். ஆர்வத்துடன் இந்தப் பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களை அக்கறையின்மையால் பெரும் அவதிக்கு உள்ளாக்குவது அரசுக்கு அழகல்ல.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

புதன் 14 ஏப் 2021