மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

பெரியார் பெயரை நீக்குவதா?: தலைவர்கள் கண்டனம்!

பெரியார் பெயரை நீக்குவதா?: தலைவர்கள் கண்டனம்!

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் ரிப்பன் மாளிகையில் தொடங்கி, எழும்பூர், கீழ்ப்பாக்கம் வழியாகச் செல்லும் 14 கிலோ மீட்டர் சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்பதற்குப் பதிலாக கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோன்று மாநில நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே பதிவிடப்பட்டுள்ளது. இந்த திடீர் பெயர்மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அல்லது மாநில நெடுஞ்சாலைத் துறை தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், ஈ.வெ.ரா.சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979ல் பெயர் சூட்டினார். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?

எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2க்குப் பிறகு அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது.

ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூகத்தின்படி, மோடி பிறப்பித்த ஆணையை, எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார்.

ஏற்கனவே, சென்னை விமான நிலையத்திலிருந்து, காமராசர் அண்ணா பெயரை நீக்கியதையும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்து இருக்கின்றது.

தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடி பழனிசாமி, தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ ஈ.வெ.ரா.சாலையை நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் - ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

உடனடியாக அதை இணைய தளத்திலிருந்து நீக்கி, ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

செவ்வாய் 13 ஏப் 2021