மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

ஒட்டப்பிடார ரிசல்ட்: நிர்வாகிகளை நீக்கிய கிருஷ்ணசாமி

ஒட்டப்பிடார ரிசல்ட்: நிர்வாகிகளை நீக்கிய கிருஷ்ணசாமி

கடந்த சில வருடங்களாகவே பாஜக, அதிமுக ஆதரவு நிலைப்பாட்டோடு அரசியல் செய்து வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேர்தல் நெருக்கத்தில் திடீரென மாறுபட்ட நிலைப்பாடு எடுத்து, தனித்துப் போட்டியிட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.

ஏற்கனவே 1996 தேர்தலில் புதிய தமிழகம் சார்பில் தனித்து நின்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமி, தேர்தலுக்கு முன் நடத்திய மாவட்ட தேர்தல் மாநாட்டில், ‘96 போல மீண்டும் நாம் ஒட்டப்பிடாரத்தில் வெல்ல வேண்டும்’ என்றெல்லாம் பேசினார்.

இந்நிலையில், “ தூத்துக்குடி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் செ.பா.குபேந்திரன், கருங்குளம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சண்முகம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கக்கிரம்பட்டி S.P.கண்ணன் ஆகியோர் பலமுறை எச்சரித்த பின்னரும் கட்சியின் நலனுக்கு எதிராகவும் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டதால், இன்று முதல் புதிய தமிழகம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். அவர்களுடன் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் எவரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”என்று ஏப்ரல் 13 ஆம் தேதி அறிவித்திருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

தான் போட்டியிட்ட ஓட்டப்பிடாரம் பற்றிய தகவல்கள் தெரியவந்த நிலையில்தான் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்

இதுபற்றி புதிய தமிழகம் வட்டாரத்திலேயே விசாரித்தோம்.

“புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இருக்கும் என்றுதான் பல நிர்வாகிகளும் தொண்டர்களும் நம்பியிருந்தனர். ஆனால் டாக்டரோ திடீரென தனித்துப் போட்டி என்று தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு முடிவெடுத்தார். இது கட்சியில் பல நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுபற்றி பலரும் டாக்டரிடம் பேசினாலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவும், திமுகவும், அமமுக கூட்டணியில் தேமுதிகவும் போட்டியிட்டன. திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, அதிமுக சார்பில் மோகன், தேமுதிக சார்பில் ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

தேர்தலுக்குப் பின் தூத்துக்குடியிலேயே தங்கியிருக்கத் திட்டமிட்ட கிருஷ்ணசாமி, சில நாட்களிலேயே தனக்குக் கிடைத்த தகவல்களால் அதிருப்தியாகி சென்னைக்குப் புறப்பட்டார்.

‘இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை தொடங்கக்கூடாது. நடந்தது மக்களால் சுதந்திரமாக, உண்மையாக வாக்களிக்கப்பட்ட தேர்தல் அல்ல! உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கமிட்டி தமிழகத்தில் பணப்பட்டுவாடா குறித்து ஆய்வு செய்த பின்னரே புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். நடந்து முடிந்தது தேர்தல் அல்ல, ஜனநாயகப் படுகொலை.! தோல்வி தான் தோல்வியடையும், எனக்கு தோல்வியே கிடையாது.!

தீவிரவாதத்தை விட மிகவும் பயங்கரமானது வாக்காளர்களை மிரட்டி பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவது தான்.! தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏப்ரல்-22 தேதி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும்”என்றெல்லாம் அறிவித்தார்.

கூட்டணி சார்பில் போட்டியிட்டால் தேர்தல் செலவுக்கு பிரச்சினையில்லை என்று புதிய தமிழகம் நிர்வாகிகள் கருதினார்கள். ஆனால் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிட்டதால் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அன்றாட செலவுக்குக் கூட நிர்வாகிகள் கஷ்டப்பட்டனர். இந்த சூழலைப் பயன்படுத்தி திமுக, அதிமுகவினர் புதிய தமிழகம் நிர்வாகிகளை சரியாக கவனித்துவிட்டனர். அதனால் பல நிர்வாகிகள் டாக்டருக்கே வேலை பார்க்கவில்லை. இதனால் ஒட்டப்பிடாரத்தில் மூன்றாவது அல்லது நான்காவது இடம்தான் கிடைக்கும் என்று கிருஷ்ணசாமிக்கு அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் அனுப்பிவைத்துள்ளனர்.

இதையடுத்தே மாவட்டச் செயலாளர் உட்பட முக்கிய நிர்வாகிகளை நீக்கியிருக்கிறார். ஒட்டப்பிடாரத்தில் மட்டுமல்ல பிற தொகுதிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார் டாக்டர்” என்கிறார்கள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 13 ஏப் 2021