மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

மம்தா தர்ணா: பாஜக வேட்பாளர் பிரச்சாரத்துக்கும் தடை!

மம்தா தர்ணா: பாஜக வேட்பாளர் பிரச்சாரத்துக்கும் தடை!

திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு, பிரச்சாரத்துக்குத் தடை, எதிர்க்கட்சியினர் மீது விமர்சனம் எனத் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்தது.

தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த அன்றே, ‘மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக நடைபெறுகிறது’ என்று அம்மாநில முதல்வர் மம்தா கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமர் மோடிக்கும், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக விமர்சித்திருந்தார். மேலும் பாஜகவினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

அதுபோன்று, இந்த தேர்தலிலாவது மேற்கு வங்கத்தில், ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில், பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்தையே சுற்றிச் சுற்றி வருகின்றனர்.

இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, மத, இன ரீதியாக பேசி வாக்குகளை ஈர்க்க முயற்சி செய்ததாகவும், முஸ்லீம் வாக்காளர்களிடம் பாஜகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று கூறியதாகவும், மத்திய ஆயுதப்படையினரின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் பேசியதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாகப் பதில் அளிக்குமாறு கடந்த 7ஆம் தேதி மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு பதிலளித்த மம்தா, தான் மத ரீதியாகப் பிளவு படுத்தும் வகையில் எப்போதுமே பேசவில்லை, மத்திய ஆயுத படையினரை மிரட்டும் வகையிலோ அச்சுறுத்தும் வகையிலோ பேசவில்லை என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

மம்தாவின் பதிலைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி உரிய விளக்கம் கொடுக்கவில்லை என்று கூறி அவரை நேற்று இரவு முதல் இன்று இரவு 8 மணி வரை 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், நான் பரப்புரை மேற்கொள்ளத் தடைவிதித்திருப்பது அரசியல் சட்ட விதிகளுக்கு மாறானது. இந்த தடையை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள காந்தி மூர்த்தியில் இன்று நண்பகல் 12 மணிக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.

அதுபோன்று மதியம் 12 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

மம்தாவை தொடர்ந்து, ஹப்ரா தொகுதி பாஜக வேட்பாளர் ராகுல் சின்காவிற்கு 2 நாள் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் சிஐஎஸ்எப் ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பேசிய அவர், குறைந்தது 8 பேர் மீதாவது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 15) மதியம் 12 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மம்தா பானர்ஜி மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், “நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை, சுதந்திரமான, நியாயமான தேர்தலில்தான் உள்ளது. அனைத்து கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். ஒரு சார்பின்மை, நடுநிலை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

செவ்வாய் 13 ஏப் 2021