மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

புது இயக்கம் தொடங்குகிறார் ராமதாஸ்

புது இயக்கம் தொடங்குகிறார் ராமதாஸ்

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்குப் பின் நடந்த மோதலில் இரு பட்டியலின இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த விவகாரம் அரசியல் களத்தில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கடுமையான கண்டனங்களையும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர், ஒருபடி மேலே போய் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஏப்ரல்10 ஆம் தேதி இந்த கொலைகளைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தியதோடு, கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் குடும்பத்துக்கும் நேரடியாக சென்று ஆறுதல் கூறினார்.

மேலும் இந்தக் கொலை திட்டமிட்ட சாதிய தாக்குதல் என்றும் பாமகதான் இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டினார் திருமாவளவன். இதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்த பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி, “திருமாவளவன் பட்டியலின இளைஞர்களிடம் எக்ஸ்போஸ் ஆகிவிட்டார். அவர் பின்னால் படித்த இளைஞர்கள் இல்லை” என்று சாடினார். இதற்கு எதிர்வினையாக சமூக தளங்களில் திருமாவளவனுக்கு பெரும் ஆதரவு ஹேஷ்டாக் டிரண்டிங் ஆனது. ’மைலீடர் திருமா’என்றும், ‘ஐ சப்போர்ட் திருமா’ என்றும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் திருமாவளவனுக்கு ஆதரவுப் பதிவுகள் சமூக தளங்களில் பகிரப்பட்டன.

எப்போதுமே சமூக தளங்களிலும், தகவல் தொழில் நுட்பத்திலும் ஆர்வமாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸிடம் இந்தத் தகவல் எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து பாமகவின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய ராமதாஸ், தங்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளை எதிர்கொள்ள தனி பரப்புரை இயக்கம் தொடங்க முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஏப்ரல் 12) ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பில்,

“ உண்மைகள் உறங்கும் போது பொய்கள் கூத்தாடும் என்பதைப் போல அரக்கோணம் சோகனூர் இரட்டைக் கொலை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மீதும், வன்னியர் சமுதாயத்தின் மீதும் அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன. அடிப்படையற்ற அவதூறுகளை சில அரசியல்கட்சித் தலைவர்களும், ஊடக அறத்தை மதிக்காத சில ஊடகங்களும் ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் ஒன்றியம் சோகனூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையும் மிகவும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் உண்மைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்ட சில சக்திகள், இந்த விஷயத்தில் வன்னியர்கள் மீதும், பா.ம.க. மீதும் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கின்றன. உண்மையின் அடிப்படையில் இந்த விஷயத்தை எதிர்கொள்ள வேண்டிய திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சாதியமும், தேர்தல் பகையும் தான் இந்தப் படுகொலைகளுக்கு காரணம் என்று பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியவை என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும், தவிர்த்திருக்கப்பட வேண்டிய இந்த படுகொலைகளுக்கு சாதி சாயமும், அரசியல் சாயமும் பூசி அரசியல் லாபம் தேட முயல்வதும், முற்போக்கு சக்திகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள் அதற்கு துணை நிற்பதும் மலத்தில் அரிசி பொறுக்குவதை விட மோசமான செயல். இது அரசியல் நாகரிகமல்ல.

அரக்கோணம் அருகே இருவர் படுகொலை செய்யப்பட்டது உண்மை. அவர்கள் பட்டியலினத்தவர் என்பதும் உண்மை. இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிலர் வன்னியர் என்பதும் உண்மை. ஆனால், இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ அரசியலோ இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. கொலையானவர்களும், கொலை செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தவர்கள். கொலை நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தான் இந்தக் கொலை நிகழ்வு நடந்திருக்கிறது. இது தான் மறுக்க முடியாத உண்மை. இது குடிபோதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதல். இதில் சாதி எங்கிருந்து வந்தது?”என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராமதாஸ்.

மேலும், “ கொல்லப்பட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அல்ல. கொலை செய்ததாக கூறப்படுபவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரும் அல்ல. இன்னும் கேட்டால் கொல்லப்பட்ட இருவரும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மோதலின் பின்னணியில் அரசியல் இல்லை என்றும் அந்தக் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறியிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது இதில் அரசியல் எங்கிருந்து வந்தது?

அரக்கோணம் கொலைகளை கண்டிக்கும் உரிமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. அது அவர்களின் கடமையும் கூட. ஆனால், அரசியல் காரணங்களாலும், சாதி வெறியாலும் தான் இந்தக் கொலைகள் நடந்ததாக அவதூறு பரப்பும் அதிகாரத்தை திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு யார் கொடுத்தது? எந்த ஒரு விஷயம் குறித்தும் கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக அது குறித்து நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பது தான் அரசியலில் அடிப்படை ஆகும். மாறாக, பகுத்தறிவை அடகு வைத்து விட்டு ஒரு சமுதாயத்தின் மீது பழி சுமத்துவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. யாரோ தெருவில் செல்பவர்கள் பழி சுமத்துவதைப் போல அரசியல் தலைவர்களும் பழி சுமத்தக் கூடாது; அதன் மூலம் அரசியலில் தங்களின் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.

வட மாவட்டங்களில் நடந்த பல குற்றங்களுக்கு வன்னியர்கள் மீதும், பா.ம.க. மீது பழி சுமத்திய திமுக ஆதரவு கட்சிகளும், ஊடகங்களும், அவர்கள் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, தங்களின் தவறை ஒப்புக்கொள்ளவில்லை; அதற்காக வருந்தவில்லை. இத்தகைய போக்கு இதே நிலையில் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது.

வன்னியர்கள் கல்வியிலும், சமூக நிலையிலும் மிக மிக பின்தங்கியவர்கள். அவர்களின் உயர்வுக்கு துணை நிற்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கடமை ஆகும். ஆனால், வன்னியர் சமூகத்தை திமுக ஆதரவு கட்சிகளும், ஊடகங்களும் எதிரியாகப் பார்த்து, அவதூறு அம்புகளை வீசி வீழ்த்த முனைவது நியாயமல்ல. அது மிகப்பெரிய அநீதியாகவே அமையும்.

இனி வரும் காலங்களில் வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னிய மக்களைக் காக்கவும் அறிவுசார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள வன்னியர் இன மான, உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம் தொடங்கப்படுகிறது. 22 வயது முதல் 30 வயது வரையுள்ள பட்டதாரி இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த இயக்கத்தில் சேரலாம். இந்த இயக்கத்தில் சேர விரும்புபவர்கள் www.bit.ly/HateFreeTN என்ற இணைப்பில் சென்று தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இயக்கத்தின் நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்”என்று அறிவித்துள்ளார் ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த இயக்கத்தின் ஆலோசகர்களாக இருந்து வழிநடத்துவார்கள் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன் பின்னால் இவ்வளவு படித்த இளைஞர்கள் இருக்கிறோம் என்று சமூக தளங்களில் கடந்த சில தினங்களாக பதிவுகள் டிரண்டிங் ஆகிவரும் நிலையில்... ராமதாஸும் பட்டதாரிகள் மீது கண் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

திங்கள் 12 ஏப் 2021