மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்: முதல்வர்!

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்: முதல்வர்!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை உலக அளவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் நாளொன்றுக்கு 55,000அதிகமாகவும், உத்தரப் பிரதேசத்தில் 12,000 அதிகமாகவும் நோய்த் தொற்று பதிவாகி வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், மாநிலத்தில் நோய்த் தொற்று ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டது. மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 500 நபர்களுக்கு கீழாக கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த 30 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது 4.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இச்சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 12) மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இன்று நடத்தப்பட்ட ஆலோசனையின் படி கீழ்க்கண்ட உத்தரவு மற்றும் அறிவுரைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.

“பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர வேண்டும்.

நாளொன்றுக்கு 90,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளுக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்

நோய் தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபர்களை விரைவாகக் கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் தேவையான அளவில் காய்ச்சல் முகாம்கள் அமைத்துச் சளி, மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நாள் வரை 8,92,682 முகாம்கள் அமைக்கப்பட்டு, காய்ச்சல் உள்ள 14,47,069 நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவைக்கு அதிகமாகப் படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

மேலும் காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‘108’ அவசரக்கால ஊர்திகள் செயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.

கோவிட் தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட வேண்டும்.

மேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்குச் சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும். 10.4.2021 வரை கொரோனா தடுப்பு விதிமீறலுக்காக தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம், 1939-ன் கீழ் ரூபாய் 17,92,56,700/- அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் கூடும் இடங்களாகிய சந்தை, வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த திருவிழாக்களில் கோவிட் நிலையான வழிபாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றப்படுவதைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடையே இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி 11.04.21 அன்று வரை சுகாதார ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் என மொத்தம் 37,80,070 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அந்தந்த தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதன் மூலம் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட இயலும். குறிப்பாக, களப்பணி ஆற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும், அடுத்த இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.

சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்.. வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை (6 அடி இடைவெளி) கடைப்பிடிக்க வேண்டும். முறையாக சோப்பு போட்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல், வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

திரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய இடங்களில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 12 ஏப் 2021