மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

மத்தியப் படைகள் மீண்டும் சுடும்: மேற்கு வங்காள பாஜக தலைவர் எச்சரிக்கை!

மத்தியப் படைகள் மீண்டும் சுடும்: மேற்கு வங்காள பாஜக தலைவர் எச்சரிக்கை!

மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த நான்காம்கட்ட சட்டமன்றத் தேர்தலில், கூச் பெஹார் மாவட்டம் சிதல்குச்சி தொகுதியில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கிராம மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் நால்வரும் இஸ்லாமிய இளைஞர்கள். புலம்பெயர் தொழிலாளர்களாக இருந்த அவர்கள் வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தார்கள்.

இந்த நிலையில், ‘கெட்ட பசங்கள்’ திருந்தவில்லை என்றால் மத்தியப் படைகள் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் மேலும் தொடரும் என்று மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் ஏப்ரல் 11ஆம் தேதி கூறியிருக்கிறார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் இன்னும் நான்குகட்ட தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் பாஜக தலைவரின் இந்தக்கூற்று சர்ச்சையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நான்கு இளைஞர்களின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிதல்குச்சியில் உள்ள ஜார்பட்கி கிராம வாக்குச்சாவடி மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டன. சுமார் ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி வடக்கு 24 பர்கானா மாவட்டம் பராநகரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பேசுகையில்,

“அந்த கெட்ட பையன்கள் (சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள்) எங்கிருந்து வந்தார்கள்? சிதல்குச்சியில் நேற்று துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிரிழந்த அந்தக் கெட்ட சிறுவர்கள் இனி வங்காளத்தில் இருக்க மாட்டார்கள். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. மத்திய தொழில் பாதுகாப்புப் படை சும்மா வேடிக்கைக்காக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டிருக்கிறது என்று தவறாக யாரும் நினைக்க வேண்டாம். யாராவது சட்டத்தை தனது கைகளில் எடுத்துக் கொண்டால், அவர்களுக்குப் பொருத்தமான பதில் கிடைக்கும்.

மேற்கு வங்காளத்தின் வாக்குச்சாவடிகளில் மேலும் மேலும் மத்திய படைகள் நிறுத்தப்படும். அவர்களை அச்சுறுத்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேவைப்பட்டால் பல இடங்களில் சிதல்குச்சி போன்ற சம்பவங்கள் அதிகமாக இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்று பகிரங்கமாக எச்சரித்துப் பேசியுள்ளார் திலீப் கோஷ்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று மேற்கு வங்காள மாநிலத்துக்கு மேலும் 71 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை அனுப்ப உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. ஒரு கம்பெனி என்றால் சுமார் 120 முதல் 130 படையினர் இருப்பார்கள்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மேற்கு வங்காளத்தில் கூடுதலாகக் குவிக்கப்படுவதும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடரும் என்று பாஜக மாநிலத் தலைவர் பேசியதும் அம்மாநிலத்தில் பதற்றத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 12 ஏப் 2021