மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

டெல்லியில் நான்காவது அலை மோசமாக உள்ளது!

டெல்லியில் நான்காவது அலை மோசமாக உள்ளது!

டெல்லியில், நான்காம் கட்ட கொரோனா பரவல் மிகவும் அபாயகரமாக உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து இன்று(ஏப்ரல் 11) முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தலைநகரில் கடந்த 10-15 நாட்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். டெல்லியில், தற்போது கொரோனாவின் "நான்காவது அலை" மிக மோசமாக உள்ளது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தயவுசெய்து மக்கள் பின்பற்ற வேண்டும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தீர்வு இல்லை. இருந்தாலும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் பொதுமுடக்கம் விதிக்கப்படலாம். டெல்லியில் எந்த மருத்துவமனையில் படுக்கைகள் உள்ளன என்பதை கொரோனா செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். தேவைப்படும் பட்சத்தில்படுக்கைகள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை நேரடியாக அழைத்துச் செல்லுங்கள். அரசு மருத்துவமனைகளிலே நல்ல சிகிச்சை மற்றும் ஏற்பாடுகள் இருக்கின்ற வேளையில், மக்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி செல்ல வேண்டாம்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வயது வரம்புகளை நீக்குவது தொடர்பாக, மத்திய அரசிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து வீடு வீடாக பிரசாரம் செய்ய, டெல்லி அரசு தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை விட தடுப்பூசியின் வேகம் அதிகமாக இருக்க வேண்டும்.

தேவையில்லாத பட்சத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். டெல்லியில் 65 சதவீதம் பேர் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும். கொரோனா காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இது அரசியல் செய்வதற்கும், மற்றவர்களை குற்றம் சாட்டுவதற்கும் நேரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ், சலுகை ஒன்றை அறிவித்தார். அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால், அவர்களின் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 30 வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

திருமணத்தில் 50 பேரும், இறப்பில் 20 பேரும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

திரையரங்குகள், பார்கள், மால்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.

பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன.

அரசு அலுவலகங்களில் 50% பேர் மட்டுமே வேலை செய்ய அனுமதி.

இருப்பினும், சுகாதாரத் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

ஞாயிறு 11 ஏப் 2021