�திருமாவளவன் பின்னால் படித்தவர்கள் இல்லையா? அன்புமணிக்கு எதிராக டிரண்டிங்!

politics

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்குப் பின் நடந்த இரு பட்டியலின இளைஞர்களின் கொலை குறித்து பாமக இளைஞரணிச் செயலாளரும் எம்பியுமான அன்புமணி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி. குறித்து தெரிவித்த கருத்துகள் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.

அரக்கோணம் சம்பவம் பற்றி அன்புமணி நேற்று (ஏப்ரல் 10) பற்றி வெளியிட்ட வீடியோவில்,

“அரக்கோணம் சம்பவம் பற்றி நான் பல தரப்பினரிடமும் விசாரித்தேன். புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி நேரில் சென்று வந்துள்ளார். அவரிடமும் விசாரித்தேன். இரு தரப்பினரும் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது வார்த்தைத் தகராறு ஏற்பட்டு போதையில் அவர்களுக்குள் அடித்துக் கொண்டு அதில் இருவர் இறந்திருக்கிறார்கள். சிலர் காயம் அடைந்திருக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது.

கொலை செய்யப்பட்டவர்கள் ஜெகன் மூர்த்தியின் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர் உடனடியாக அந்த கிராமத்துக்குச் சென்று பலதரப்பினரிடமும் விசாரித்தார். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று அவர் கூறுகிறார்.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக கூட்டணியின் திருமாவளவன் போன்றோர் இது சாதிப் பிரச்சினை, கட்சிப் பிரச்சினை, தேர்தல் பிரச்சினை என்று பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அரக்கோணம் தொகுதியில் பாமக போட்டியிடவில்லை. அந்த இளைஞர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவும் இல்லை.

திருமாவளவன் எங்களைப் பற்றி தரக்குறைவாக பேசியிருக்கிறார். அது அவர் இயல்பு. எங்களை எதிர்த்தால்தான் அவருக்கு அரசியல் பிழைப்பு. அதைத்தான் அவர் இவ்வளவு காலமாக செய்துகொண்டிருக்கிறார். எங்கள் நிலைப்பாடு அப்படி கிடையாது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை நாங்கள் பார்க்கிறோம்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் பலர் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். அவர்கள் மத்தியில் திருமாவளவன் எக்ஸ்போஸ் ஆகிவிட்டார். அதனால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை தூண்டிவிட்டு அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்” என்று அந்த வீடியோவில் அன்புமணி கூறியிருந்தார்.

இதற்கு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் அன்புமணிக்கு எதிரான கருத்துகள் டிரண்டிங் ஆகி வருகின்றன.

பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமல்ல வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் தாங்கள் திருமாவளவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, தாங்கள் படித்த பட்டங்களையும் குறிப்பிட்டு தாங்கள் திருமாவளவனுடன் இருக்கிறோம் என்று கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *