மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

எடப்பாடி கோட்டைக்கு வரலாமா?

எடப்பாடி கோட்டைக்கு வரலாமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஏப்ரல் 12) தலைமைச் செயலகத்தில் கொரோனா தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நாளை பகல் 12 மணிக்கு கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பதாகவும், இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டத்துக்குப் பிறகு சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கோட்டை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதிதான் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இப்போதைய தமிழக அமைச்சரவை காபந்து அமைச்சரவையாகவே கருதப்படுகிறது. இந்த அமைச்சரவையால் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்க முடியாது. அதனாலேயே சில நாட்களுக்கு முன் பிரதமர் தலைமையில் நடந்த, கொரோனா தடுப்பு தொடர்பான மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை அதிகாரிகளே பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் கொரோனா தடுப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்புகளை தற்சமயம் தலைமைச் செயலாளரே அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் நாளை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தலாமா, அது சரியாக இருக்குமா என்று அரசியல் வட்டாரத்திலும் அதிகாரிகள் வட்டாரத்திலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

தேர்தல் முடிந்ததில் இருந்து சேலத்திலேயே இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏப்ரல் 12 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் கோட்டையில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வது மரபு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தவறானது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் அதிமுக தரப்பிலோ, “முதல்வர் தேர்தல் முடிந்த நான்கு நாட்கள் முழுமையான ஆலோசனையில் ஈடுபட்டு அதிமுக மீண்டும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அதன் அடிப்படையிலேயே நாளை கோட்டைக்கு வருகிறார். கொரோனா ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் இருக்காது” என்கிறார்கள்.

நாம் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் சில அதிகாரிகளிடம் பேசினோம்.

“பொதுவாகவே தேர்தல் நடந்து முடிந்து அதன் முடிவு வெளிவருவதற்குள் முதல்வர்கள் கோட்டைக்கு வருவதில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டும் இதேபோலத்தான் ஏப்ரல் 13 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து மே 13 ஆம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இடைப்பட்ட ஒரு மாத காலம் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி ஒரு நாள் மே 5 ஆம் தேதி புதிய தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.

காரணம், 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக எம்.எஸ். தோனி தலைமையிலான கிரிக்கெட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வென்று உலகக் கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினும் இடம்பெற்றிருந்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான தமிழக முதல்வர் கருணாநிதி உடனடியாக இந்திய அணிக்கு 3 கோடி பரிசுத் தொகையும், தமிழக வீரர் அஸ்வினுக்கு ஒரு கோடி ரூபாய் சிறப்புப் பரிசும் அறிவித்தார்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடக்க இருந்த அந்த இடைவெளியில் மே 5 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா , அஸ்வின் ஆகியோர் சென்னையில் இருந்ததால் பரிசுத் தொகையை முதல்வர் கருணாநிதி தலைமையில் வழங்கத் திட்டமிடப்பட்டது.

இதற்காக அப்போதைய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் தமிழக அரசு சார்பில் பரிசுகளை முதல்வர் வழங்க அனுமதி கேட்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பின் மே 5 ஆம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தோனி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் ஆகியோருக்கு புதிய தலைமைச் செயலகத்தில் (இப்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை) நடந்த எளிய விழாவில் பரிசுத் தொகை வழங்கினார். மீதி வீரர்களுக்கான பரிசுத் தொகையை இதே விழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கௌரவச் செயலாளர் என்.சீனிவாசனிடம் அணியின் ஏனைய வீரர்களுக்கான காசோலைகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடுதான் அப்போது தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் கருணாநிதி வந்து இந்த விழாவில் கலந்துகொண்டார். அதேபோல இப்போது முதல்வராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருக்கலாம்” என்கிறார்கள்.

இப்படியாக எடப்பாடி கோட்டைக்கு வரலாமா என்ற விவாதம் தொடர்கிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

ஞாயிறு 11 ஏப் 2021