மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

அப்பாவிகளை சுட்டுக்கொல்வதா அச்சே தின்? - மோடிக்கு மம்தா கேள்வி

அப்பாவிகளை சுட்டுக்கொல்வதா அச்சே தின்? - மோடிக்கு மம்தா கேள்வி

எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் மேற்குவங்கத்தில் நேற்று நான்காம் கட்டமாக, 44 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கூச்பிகார் மாவட்டத்தில் தனித்தனி சம்பவங்களில் 5 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஹௌரா, ஹூக்ளி, தெற்கு 24பர்கானா, அலிப்புர்துவார், கூச்பிகார் ஆகிய மாவட்டங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

கூச்பிகார் மாவட்டத்தில், சிதால்குச்சி பகுதியின் 126ஆவது வாக்குச்சாவடி அமைந்திருந்த ஜோர்பட்கியில், வாக்களிக்கவந்தவர்களுக்கும் மத்திய போலீஸ் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. காலை 9.45 மணியளவில் ஜோர்பட்கி கிராமத்தின் அம்டாலி வாக்குச்சாவடியில் மாணிக் முகமது என்கிற குழந்தை கீழே விழுந்துவிட்டான். அதைவைத்துதான் மோதல் தொடங்கியிருக்கிறது. அந்தச் சிறுவனை மத்திய படையினர் அடித்ததாலேயே அவன் கீழே விழுந்தான் என்றும் உடனே அங்கிருந்தவர்கள் மத்திய படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; பின்னர் அங்கிருந்தவர்கள், தகவலறிந்து அங்கு திரண்ட ஊர்மக்கள் மத்திய படையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் என்றும் சம்பவ இட சாட்சிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் மத்திய படையினர் துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். அதில் 23 வயது சால்மு மியா, 20 வயது நமீது மியா, 28 வயது அம்சான் குசைன், 20 வயது ஜோபென் அலி ஆகியோர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்று வாக்குப்பதிவு அலுவலர்கள், ஊர்க்காவல் படையினர் ஒருவர் உள்பட மற்ற ஏழு பேரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.

ஆனால், தொகுதியின் தேர்தல் பார்வையாளரும் போலீஸ் சிறப்புப் பார்வையாளரும் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில், வேறுமாதிரி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சிறுவன் கீழே விழுந்துவிட்டான்; சில பெண்கள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தனர் என்றும், அப்போது, அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், அவனை மருத்துவமனைக்கு அனுப்பவேண்டுமா எனக் கேட்டதாகவும் அதைப் பார்த்த சில உள்ளூர்க்காரர்கள் அவர்கள் அந்தப் பையனை அடித்துவிட்டதாகத் தவறாக நினைத்துக்கொண்டதாகவும் தகவலறிந்து 300-350 ஊர்க்காரர்கள் அங்கு திரண்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் ஒன்றுசேர்ந்து மத்திய படையினரைத் தாக்கியதாகவும் சிலர் அவர்களின் துப்பாக்கிகளைப் பறிக்கமுயன்றதாகவும் சாவடிக்குள் பணியாளர்களைத் தாக்க முயன்றதாகவும் அதனால் அவர்கள் கூடுதல் படையினரை அங்கு வரவழைத்ததாகவும் அவர்களையும் பொதுமக்கள் தாக்கியதாகவும் அதையடுத்தே மத்திய படையினர் தங்களின் பாதுகாப்புக்காகவும் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட தேர்தல் சாதனங்களைப் பாதுகாக்கவும் துப்பாக்கியால் சுட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

ஆனால், இந்த நிகழ்வை நேரடியாக செய்தியாக்கிய பல ஊடகங்களிலும் மத்திய படையினரை மக்கள் தாக்கியதாக எந்த ஒரு காட்சியும் இடம்பெறவில்லை.

இதே சிதால்குச்சி பகுதியில், கொலனாவாடி ஊராட்சிக்கு உள்பட்ட பதண்டுலி எனும் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த் பர்மன் என்பவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 18 வயதே ஆன இவர், முதல் முறையாக தன் வாக்கைச் செலுத்திவிட்டு வெளியே வந்த பின்னர், இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. வாக்குச்சாவடியைவிட்டு 150 மீட்டர் தொலைவுக்குள் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுடப்பட்டவுடனே உள்ளூர் சுகாதார மையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த இளைஞரின் தாயாரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தின்போது மாநில போலீசாரோ மத்திய படையினரோ அந்த இடத்தில் இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிதால்குச்சி துப்பாக்கிச்சூட்டைத் தவிர, பல இடங்களில் வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்கவிடாமல் மத்திய போலீஸ் படையினர் தடுத்தனர் என்றும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.

தெற்கு 24பர்கானா மாவட்டத்தில் மகேஷ்தலா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஆதார் அட்டையைக் கொண்டுசென்றவர்களை வாக்களிக்கவிடாமல் மத்திய படையினர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே பாதுகாப்புப் படையினர் இதைப்போல வாக்காளர் அடையாள அட்டையை சோதிக்கும் வேலையில் ஈடுபடக்கூடாது; அதை ஆணையம் ஒழுங்குபடுத்தவேண்டும் என திரிணமூல் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி கூறியிருந்தார். ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டது. முதல் வாக்குப்பதிவு அலுவலர் மட்டுமே வாக்காளரின் அடையாள அட்டையை உறுதிப்படுத்தவேண்டும்; தேவைப்பட்டால் மட்டும் அவர் பாதுகாப்புப் படையின் துணையை நாடலாம் என தேர்தல் ஆணையம் தனி அறிவிப்பையும் வெளியிட்டது. ஆனாலும் வங்கத்தில் இந்த விவகாரம் தொடர்ந்துவருகிறது.

ஹௌரா மாவட்டத்திலும் பல வாக்குச்சாவடிகளில் இதே பிரச்னை எழுந்தது.

கூச்பிகார் மாவட்டத்தின் தின்கட்டா தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகளில் முதிய வாக்காளர்களிடம் பயத்தை உண்டாக்கும்படியாக மத்திய படையினர் அராஜகமாக நடந்துகொண்டனர் என்று திரிணமூல் கட்சியினர் குற்றம்சாட்டினர். முதியவர்களை இப்படி அலைக்கழித்தால் அவர்கள் வாக்களிக்கவரமாட்டார்கள்; அது தங்களுக்கு சாதகமாக இருக்குமென பாஜக நினைக்கிறது என்பது திரிணமூல் கட்சியினரின் குற்றச்சாட்டு.

ஹூக்ளி மாவட்டத்தின் சின்சுரா, சந்தர்னகூர், பாலாகார், சண்டிதலா, பண்டுவா, சீரம்பூர் ஆகிய இடங்களிலும் மத்திய படையினர் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.

சந்தர்னகூரில் வாக்காளர்களுக்கு மத்திய படையினர் இடையூறு செய்ததாகவும் அதனால் 119ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு மந்தமானதாகவும் திரிணமூல் கட்சி புகார் கூறியுள்ளது.

மேலும், சின்சுராவில் 332ஆவது வாக்குச்சாவடியில் தங்கள் முகவர்களை சாவடிக்கு உள்ளேயே மத்திய படையினர் அனுமதிக்கவில்லை என்றும் திரிணமூல் கட்சியினர் புகார் கூறுகின்றனர்.

பண்டுலாவில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் , சீரம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கூறினர் என்றும் திரிணமூல் கட்சியினர் புகார்கூறியுள்ளனர்.

கூச்பிகாரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளை அடுத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்கூறப் போவதாக முதலமைச்சர் மம்தா அறிவித்தார்.

நடந்தது ஈவிரக்கமில்லாத படுகொலை எனச் சாடிய அவர், அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையான இந்த சம்பவத்தின் உண்மைகளை மாநில சிஐடி போலீஸ் மூலம் தோண்டியெடுத்து வெளியில்கொண்டுவருவோம் என்றும் கூறினார்.

சம்பவப் பகுதிக்குச் செல்வதாக அவர் கூறியதை அடுத்து, அந்தப் பகுதியையும் உள்ளடக்கிய மொத்த கூச்பிகார் மாவட்டத்துக்கு உள்ளே எந்த அரசியல் தலைவர்களும் அடுத்த 3 நாள்கள் நுழையக்கூடாது என தேர்தல் ஆணையம் திடீரென உத்தரவிட்டது.

முன்னதாக வடக்கு 24பர்கானா மாவட்டத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா, சம்பவம் நிகழ்ந்தபோது சிலிகுரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

“ நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஆட்சி மூலம் நல்ல காலம் வந்துவிட்டதாகக் கூறுகிறார், நரேந்திர மோடி. தேர்தல் ஒரு திருவிழாவாக நடைபெறும் இந்த நாட்டில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் அப்பாவி மக்களை சுட்டுக்கொல்வதுதான் இதற்கு உதாரணமா? தேர்தல் ஆணையமானது பாஜக சொல்கிறபடி அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அமைதியாக தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் அப்பட்டமாக தோல்வியடைந்திருக்கிறது. இந்தப் பகுதிகளுக்கும் மக்களுக்கும் பரிச்சயமில்லாத அலுவலர்களை வைத்து தேர்தலை நடத்துகின்றனர். என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களை நீக்கிவிட்ட தேர்தல் ஆணையம், (கூச்பிகார் சிறப்பு தேர்தல் பார்வையாளரான) விவேக் துபேவைப் போன்ற ஓய்வுபெற்றவர்களை நியமனம் செய்திருப்பது எப்படி? எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து பேசவேண்டும். “ என்றும் மம்தா கூறியுள்ளார்.

-இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

ஞாயிறு 11 ஏப் 2021