மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

கொரோனா: இன்று முதல் தடுப்பூசித் திருவிழா!

கொரோனா: இன்று முதல் தடுப்பூசித் திருவிழா!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 839 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை(ஏப்ரல் 8) அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, நாடு முழுவதும் இன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

இதையொட்டி, பிரதமர் மோடி ட்விட்டரில், தேவைப்படுவோருக்கு தடுப்பூசி போடவும், கொரோனா சிகிச்சைக்கு உதவும்படியும் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். ”தடுப்பூசி கிடைப்பதற்கான வசதிகள் இல்லாதவர்களுக்கு மருந்து கிடைக்க உதவ வேண்டும். தடுப்பூசி குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும். முகக்கவசம் அணிவதுடன் மற்றவர்களையும் அணியும்படி ஊக்கப்படுத்த வேண்டும். நான்கு நாள் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசியை வீணாக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. தடுப்பூசி திருவிழா காலத்தில், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் நிலையில், நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,1900 மினி கிளினிக்குகள், அனுமதி பெறப்பட்ட தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி முகாம்களை சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து நடத்தி வருகின்றன. தேவைகேற்ப தடுப்பூசி முகாம்கள் அதிகமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 45,05,800 கோவிஷீல்டு தடுப்பூசியும் 7,67,520 கோவாக்சின் தடுப்பூசியும் வந்துள்ளன. தற்போது, 18 லட்சம் டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் இதுவரை 37,32,000 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் நாளொன்றுக்கு போடப்படும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை சராசரியாக 38 லட்சத்துக்கு மேல் சென்றிருக்கிறது.

இந்தியாவில் நேற்று வரை 10 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. உலகளவில் மிக வேகமாக இந்த எண்ணிக்கையை அடைந்த நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா இந்த எண்ணிக்கையை 89 நாட்களிலும், . சீனா 102 நாட்களிலும் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நான்கு நாள் தடுப்பூசி திருவிழா மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

ஞாயிறு 11 ஏப் 2021