மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

மத்திய படைகளின் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி: மேற்கு வங்க தேர்தலில் நடந்தது என்ன?

மத்திய படைகளின் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி:  மேற்கு வங்க தேர்தலில் நடந்தது என்ன?

மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று (ஏப்ரல் 10) நடந்த நான்காவது கட்ட சட்டமன்றத் தேர்தலில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் குண்டு காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று தேர்தலை சந்தித்த கூச் பெஹார் மாவட்டத்தில் சிதல்குச்சி தொகுதியில் ஜொர்பட்கி என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 950 வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில், ‘நம்மூர் சிறுவனை மத்திய (தொழில் பாதுகாப்பு) படையினர் அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று ஊருக்குள் ஒரு தகவல் பரவ கிராம மக்கள் சுமார் 300 பேர் கையில் கம்பும், கத்தியுமாக பள்ளியை நோக்கித் திரண்டனர். அவர்களில் சிலர் பள்ளி மைதானத்துக்குள் நுழைந்து வாக்குச் சாவடிக்குள்ளும் நுழைய முற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் அவர்களை வெளியேற்றுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். .இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஜொர்பட்கி கிராமத்தைச் சேர்ந்த ஹமீதுல் மியான் (31), மோனிருஜ்ஜமான் மியான் (28), நூர் ஆலம் மியான் (20), சாமியுல் ஹக் (18) ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்களில் முதல் மூன்று பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நான்காவது நபர் பக்கத்து கிராமத்தில் சைபர் கஃபேயில் பணிபுரிந்து வந்த இளைஞர். மேலும் குண்டு காயத்துடன் ஒருவர் உட்பட மேலும் 4 பேர் மாதபங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதல்குச்சியில் பாஜகவுக்கும் திருணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே நடந்த இன்னொரு மோதலில் பதந்தூலி வாக்குச் சாவடியில் முதல் முறையாக வாக்களிக்க வந்த ஆனந்த் பர்மன் என்ற 18 வயது இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் ஜொர்பட்கி சாவடியில் வாக்குப் பதிவை நிறுத்தி, அனைத்து அரசியல் தலைவர்களும் அடுத்த 72 மணி நேரம் கூச் பெஹார் மாவட்டத்திற்குள் நுழைவதற்குத் தடை விதித்து அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை இனி மாநில மக்கள் எங்கு பார்த்தாலும் கெரோ செய்ய வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது அரசாங்கம் தனி சிஐடி விசாரணையை மேற்கொள்ளும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

சிலிகுரியில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடியும் இந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வேதனை தெரிவித்தார். “ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையை தூண்டியது மம்தாதான். அது அவரை தோல்வியில் இருந்து காப்பாற்றாது”என்றும் கூறினார் மோடி

கூச் பெஹார் எஸ்.பி. டெபாசிஷ் தார் இந்த சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், “காலை 9.30 மணி வரை எல்லாம் நன்றாக இருந்தது. உள்ளூர் சிறுவர்களில் ஒருவர் வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்தார்.. ஆனால் சி.ஐ.எஸ்.எஃப் சிறுவனை அடித்து உதைத்ததாக ஒரு வதந்தி பரவியது. பின்னர் பெண்கள் உட்பட 300-350 கிராம மக்கள் வாக்குச்சாவடியைத் தாக்கினர். அவர்களிடம் கையால் செய்யப்பட்ட ஆயுதங்கள் இருந்தன. துப்பாக்கிகளைப் பறிக்கும் முயற்சி இருந்தது. ” சாவடியில் உள்ள சிஐஎஸ்எஃப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக அருகே இருந்து படைகள் அழைக்கப்பட்டனர். துப்பாக்கிகளைப் பறித்து சாவடிக்குள் நுழைய முயற்சி நடந்ததையடுத்துதான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை. துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது,”என்று கூறினார்.

அந்த பகுதிக்குரிய டிஐஜி அண்ணப்பா , ”துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக செய்யப்பட்டது என்று தெரிகிறது. முகமது மினல் ஹக் என்ற 13 அல்லது 14 வயது சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் தரையில் மயங்கி விழுந்தான். பாதுகாப்புப் பணியாளர்கள் விசாரிக்க அவரிடம் சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் மத்திய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வாக்குச் சாவடியை நோக்கி திரண்டனர்”என்ற டிஜிஜியிடம், “முதலில் எச்சரிக்கை செய்வதற்காக வானத்தை நோக்கி சுடப்பட்டதா?” என்ற கேள்வி கேட்கப்பட, “நாங்கள் அதுகுறித்து விசாரிப்போம்” என்று மழுப்பியிருக்கிறார்.

அம்தாலி பள்ளியில் நடந்தததைப் பார்த்த சோபியுடின் மியான் என்ற கிராமவாசி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தபோது, “மத்திய படைகளின் குழு ஒரு சிறுவனை அடிப்பதை நாங்கள் கேள்விப்பட்டோம். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கோபம் வந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் வாக்குச்சாவடியில் திரண்டார்கள். பெரிய அளவு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஓட்டுப் போட வந்த நான் பள்ளி மைதானத்திலிருந்து வெளியே ஓடினேன், பின்னர் துப்பாக்கிச் சத்தம் கேட்டது”என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையம் 324 வது பிரிவின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளின் நுழைவுக்கும் தடை விதித்துள்ளது.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 11 ஏப் 2021