மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 நிர்வாகிகள் நீக்கம்!

சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 நிர்வாகிகள் நீக்கம்!

2021 தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பண்ருட்டி பெண் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் உட்பட, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு நிர்வாகிகளை நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது.

தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளுடன் கருத்து வேறுபாடு, மோதல் போக்கு இருந்ததோ இல்லையோ, உட்கட்சிக்குள் நிறையவே காணப்பட்டது என்று சொல்லலாம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் எதிர்த்தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தகவல் வெளியாகின.

இந்தத் தேர்தலில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்துக்கு சீட் மறுக்கப்பட்டது.

அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அரசியல் எதிரியான சத்யா பன்னீர்செல்வத்துக்கு சீட் கிடைக்காமல் செய்வதற்காக... ‘பண்ருட்டியில் திமுக கூட்டணி சார்பில் வேல்முருகன்தான் நிற்பார். வேல்முருகனை நேருக்கு நேர் சந்திக்க நீங்களே நில்லுங்கள்’ என்று பாமகவிடம் கூறி பண்ருட்டி தொகுதியைக் கேட்கவைத்தார். அமைச்சர் திட்டத்தை முறியடிக்க சத்யா பன்னீர்செல்வம் பாமக தலைமையை நேரடியாகத் தொடர்புகொண்டு, “வேல்முருகனை நான் தோற்கடித்துக் காட்டுகிறேன்” என்று பேசி பண்ருட்டி தொகுதியை அதிமுகவுக்கு உறுதிசெய்தார்.

இந்த முயற்சியை அறிந்த அமைச்சர் சம்பத், அதிமுக ஒருங்கிணைப்பாளர் - துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரையும் நேரடியாக சந்தித்து, “சொரத்தூர் இராஜேந்திரனுக்கு பண்ருட்டி தொகுதியைக் கொடுத்தால் நான் வெற்றிபெற வைக்கிறேன்” என்று உறுதி கொடுத்து தொகுதியைப் பெற்றுவிட்டார். இந்தப் பின்னணியில்தான் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அதிமுக மகளிர் அணி மாநில துணைத் தலைவருமான சத்யாவுக்கு சீட் கிடைக்காமல் போனது.

இதனால் அரசியலை விட்டே ஒதுங்குவதாக முடிவெடுத்தனர் சத்யாவும் முன்னாள் பண்ருட்டி நகர மன்றத் தலைவரான அவரது கணவர் பன்னீரும். அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் வேல்முருகனுக்கு அந்த தொகுதியில் பலம் அதிகரித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மின்னம்பலத்தில், பண்ருட்டி: சத்யாவை ஒதுக்கிய அதிமுக தலைமை: ஓங்கும் வேல்முருகன் நிலைமை! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தற்போது வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், சத்யா பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவைச் சேர்ந்த ஆறு பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

''கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டது, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றிய காரணத்தால்

மாநில மகளிர் அணி துணைச் செயலாளர், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம்,

பண்ருட்டி நகர மன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம்,

பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.பெருமாள்,

அண்ணா கிராமம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ்,

நெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் சவுந்தர்,

வீரப்பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராம்குமார்

ஆகியோர் இன்று (நேற்று - ஏப்ரல் 10) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 11 ஏப் 2021