மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

தொழிற்சங்க அழுத்தம்: டாஸ்மாக் கடைகள் நேரம் குறைப்பு?

தொழிற்சங்க அழுத்தம்: டாஸ்மாக் கடைகள் நேரம் குறைப்பு?

தமிழ்நாட்டில் கொரோன பரவல் மீண்டும் அதிகமாவதைத் தொடர்ந்து தமிழக அரசு இன்று (ஏப்ரல் 10) முதல் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்யக் கூடாது, கடைகளில் 50% வாடிக்கையாளர்கள்தான் இருக்க வேண்டும், கோயம்பேட்டில் சில்லரைக் காய்கறிக் கடைகளுக்கு தடை, கோவில் திருவிழாக்களுக்கு தடை என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு கொரோனா தொற்றின் மையமாக விளங்கக் கூடிய டாஸ்மாக் மதுக் கடைகளையும், மது பார்களையும் மட்டும் கண்டுகொள்ளவே இல்லை.

சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கேள்விகள் எழுப்பிவரும் நிலையில், டாஸ்மாக் தொழிற்சங்கமே இதுகுறித்த கோரிக்கையை தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளது.

சிஐடியு தொழிற்சங்கமான டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வன் இன்று (ஏப்ரல் 10) தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்... டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களால் நோய் பரவல் ஆபத்து உள்ளது என்றும் அதனால் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் 2வது அலை வீச தொடங்கியுள்ளதையொட்டி நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில், பயணங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020ம்ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி காலத்தில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மக்கள் அதிகளவில் கூடுகிற இடமாக இருந்த மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டன.

அதன் பிறகு நீதிமன்றத்தின் நிபந்தனைகள் படி சமூக இடைவெளி பின்பற்றி டோக்கன் வினியோகித்து வரிசை ஏற்படுத்தப்பட்டு காவல்துறையின் உதவியுடன் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் நீதிமன்ற நிபந்தனைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

இதனால் 10க்கும் மேற்பட்ட மதுபான கடை ஊழியர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். அது போன்ற ஆபத்தான நிலைமை ஏற்படாத நிலையை உருவாக்க தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்”என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், “ அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் விற்பனை நேரத்தை நண் பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என குறைத்திட வேண்டும். அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்புகள், வரிசைப்படுத்தலை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே இப்பணிகளை மேற்கொண்டபோது ஏற்பட்ட செலவினங்களுக்கான நிதி முறையாக வழங்கப்படவில்லை. தற்போது அதற்கான ஏற்பாடுகளை நிர்வாக ஏற்பாட்டில் செய்திட வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் காவல்துறையினை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

நோய் தொற்றினால் உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்திற்கு ரூ,25 லட்சம் நிவாரணமும், ஊழியரது வாரிசுக்கு வேலையும் வழங்க வேண்டும். நோய் பரவக்கூடும் அபாயகரமான இடங்களாக உள்ள அனைத்து மதுக்கூடங்களை மூடிட வேண்டும்.

எனவே, தாங்கள் இத்தகைய அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் போர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தொழிற்சங்கத்தினர் தயாராகிறார்கள். இதன் அடிப்படையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அடிப்படையாக வைத்து முதல் கட்டமாக மதுக் கடைகளின் நேரத்தைக் குறைக்கலாமா என்ற ஆலோசனை அதிகாரிகள் மத்தியில் நடந்து வருவதாக தொழிற்சங்கத்தினர் கூறுகிறார்கள்.

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

சனி 10 ஏப் 2021