மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

உர விலை உயர்வு : ஸ்டாலின், வைகோ கண்டனம்!

உர விலை உயர்வு : ஸ்டாலின், வைகோ கண்டனம்!

இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ, உரத்தின் விலையை, 46% முதல் 58.33% வரை உயர்த்தியிருக்கிறது.

இதனால், கடந்த பிப்ரவரி மாதம் ரூ 1200க்கு விற்பனையான 50 கிலோ எடையுள்ள டிஏபி உர மூட்டை தற்போது ரூ.700 விலை உயர்ந்து ரூ 1900க்கு விற்கப்படுகிறது.

ரூ.1160க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம், தற்போது ரூ.615 உயர்ந்து ரூ1775க்கு விற்பனை ஆகின்றது. 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.950 ல் இருந்து ரூ.400 உயர்ந்து, தற்போது ரூ.1350க்கு விற்கப்படுகின்றது.

பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய கூட்டு உரங்களின் விலையை, உர உற்பத்தி நிறுவனங்கள் திடீரென உயர்த்தியது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

திமுக தலைவர் ஸ்டாலின், “போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்குக் கூட மனமில்லாத - மார்க்கம் தெரியாத - மனிதாபிமானமற்ற மத்திய பாஜக அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வைத் தொடர்ந்து விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து - இன்றைக்கு நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது” என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பு மத்திய பாஜக அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு.

ஏற்கனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டு - பிறகு திரும்பப் பெற்றது இந்த அரசு. இப்போது உர விலையை உயர்த்தி விட்டு “இப்போது அமல்படுத்தமாட்டோம்” என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உர மானியத்திற்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.79 லட்சத்து 530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. உர மானியத்தில் ரூ.54 ஆயிரத்து 417 கோடி குறைக்கப்பட்டதால்தான், ரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு உரம் விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. உடனடியாக டிஏபி, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, “உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதில் தற்போதைக்கு உரங்களின் விலை உயர்வை நிறுத்தி வைப்பதென முடிவு செய்யப்பட்டது” என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 10 ஏப் 2021