மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

தமிழகத்துக்கு வாஜ்பாய் கொடுத்ததைப் பறித்த மோடி

தமிழகத்துக்கு  வாஜ்பாய் கொடுத்ததைப் பறித்த மோடி

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இப்போது இருக்கும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி மத்திய அரசு தமிழகம் தொடர்பான முக்கிய முடிவுகளை வரிசையாக எடுத்து வருகிறது.

பல்கலைக் கழக துணை வேந்தர்களை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டிய ஆளுநர் இப்போது, தானே துணை வேந்தர்களை நியமிக்கிறார். இந்நிலையில் இன்று சென்னையில் இந்தியத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்பட 9 முக்கியத் தீர்ப்பாயங்களை அவசர சட்டத்தின் மூலமாக கலைத்து விட்ட மத்திய பா.ஜ.க. அரசு, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று விட்டது.

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் இது தொடர்பான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“ இந்தியாவின் அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (Intellectural Property Appeals Board - IPAB) தலைமையகம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-இல் சென்னையில் அமைக்கப்பட்டது. அப்போதைய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் முயற்சியால் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஒப்புதலுடன் ஐ.பி.ஏ.பி. தலைமையகம் சென்னையில் திறக்கப்பட்டது.

வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் பணியை ‘அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்’ மேற்கொண்டு வருகிறது.

இதனை வேறு மாநிலத்திற்கு மாற்றும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வந்தபோது நான் மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினேன். அதற்கு பிப்ரவரி 4, 2020 இல் பதில் அளித்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், ‘ஐ.பி.ஏ.பி. தலைமையிடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’ என்று தெரிவித்தார்.

வணிகச் சின்னம், காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு மற்றும் உரிமை மீறல் போன்ற அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வழக்குகளை நீதித்துறை உறுப்பினர்களுடன் தொழில்நுட்ப உறுப்பினர்களும் இணைந்து விசாரித்து தீர்ப்பளிப்பர் என்பதால் சர்வதேச அளவில் இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது”என்று குறிப்பிட்டுள்ள வைகோ மேலும்,

“இதைப் போன்றே சினிமாட்டோகிராப் சட்டம் 1952-இன்படி அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், வருமான வரிச் சட்டம் 1961-இன்படி அமைக்கப்பட்ட அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையகம், இந்திய விமான நிலைய ஆணையகச் சட்டம்-1994-இன்படி அமைக்கப்பட்ட விமான நிலைய மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், தாவர வகை மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001-இன்படி அமைக்கப்பட்ட தாவர வகைப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்பாயங்கள் தற்போது கலைக்கப்பட்டு உள்ளன.

இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை இனி அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களே விசாரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. இதனால் உயர் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளால் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய வழக்குகள் மேலும் பல ஆண்டுகளுக்கு விசாரணைக்காகக் காத்திருக்கும் அவல நிலை உருவாகும்.

எனவே, மத்திய அரசு பிறப்பித்துள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைக்கும் அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சென்னையில் வாஜ்பாய் அரசால் திறக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமையகம் தொடர்ந்து இயங்கிட அனுமதிக்க வேண்டும்”என்று வலியுறுத்தியுள்ளார்.

-வேந்தன்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

சனி 10 ஏப் 2021