மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள்: நீதிமன்றம் உத்தரவு!

குடியரசுத் தலைவர், பிரதமர்  படங்கள்: நீதிமன்றம் உத்தரவு!

அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்களை வைப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், “அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா ராஜாஜி, பெரியார், படங்களுடன் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்கலாமென 1978ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 1990ஆம் ஆண்டு அம்பேத்கர் புகைப்படத்தையும், 2006ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சிதம்பரனார், காயிதே மில்லத், இந்திரா காந்தி, முன்னாள் இன்னாள் முதல்வர்கள், மற்றும் தமிழன்னையின் படங்களையும் வைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அரசு அரசாணை பிறப்பித்தும் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களின் புகைப்படங்களை வைக்க உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதும், புகைப்படங்கள் வைத்தாக வேண்டும் என கட்டாயப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப் படாத நிலையில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை வைப்பது குறித்து அந்தந்த அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

சனி 10 ஏப் 2021