மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

பொங்கியெழுந்த பெண்களும்... போய்ச்சேராத பணமும்... பொள்ளாச்சி ரிசல்ட் இப்பவே தெரிஞ்சு போச்சு!

பொங்கியெழுந்த பெண்களும்... போய்ச்சேராத  பணமும்... பொள்ளாச்சி ரிசல்ட் இப்பவே தெரிஞ்சு போச்சு!

எடப்பாடி, கொளத்துார் இந்தத் தொகுதிகளின் ரிசட்ல்டை யாரும் பெரிதாக எதிர்பார்க்க மாட்டார்கள். கமல் நிற்கும் கோவை தெற்கு, ராஜேந்திரபாலாஜி நிற்கும் ராஜபாளையம், தினகரன் நிற்கும் கோவில்பட்டி, எச்.ராஜா நிற்கும் காரைக்குடி, குஷ்பு நிற்கும் ஆயிரம் விளக்கு, எல்.முருகன் நிற்கும் தாராபுரம் என சில தொகுதிகள்தான் தமிழக மக்களாலும் அனைத்து அரசியல் கட்சியினராலும் ஆவலோடு கவனித்துக் கொண்டிருப்பவை. இந்தப் பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது பொள்ளாச்சி.

இந்தத் தொகுதியில் வி.ஐ.பி.,க்கள் மோதவில்லை. அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுகிறார். தமிழகத்தில் அவரும் ஒரு வி.ஐ.பி. என்பதால் மட்டுமல்ல. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அவருடைய மகனின் பெயரும் அடிபட்ட ஒரே காரணத்தாலேயே அத்தொகுதியின் ரிசல்ட் எப்படியிருக்குமென்று எல்லோருக்கும் எதிர்பார்ப்பு எகிறுகிறது.

பொள்ளாச்சி ஜெயராமன் இதே தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். ஒரே ஒரு முறை தோற்றிருக்கிறார். தேர்தல் பணியில் கரை கண்டவர் என்பதால்தான் அவரை கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராக நியமித்தார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயராமனுக்கே இந்தத் தேர்தலில் தண்ணி காட்டி விட்டது தேர்தல் களம். வழக்கமாக தேர்தலில் ஜெயிப்பதற்குத்தான் ஜெயராமன், பலவிதமான யுக்திகளைக் கையாள்வார். கடுமையாக உழைப்பார். ஆனால் இந்த முறை பொள்ளாச்சி தொகுதியில் சீட் வாங்குவதற்கே அவருக்கு பெரும்பாடாகிவிட்டது. கஷ்டப்பட்டு சீட் வாங்கிய பின் களத்தில் இறங்கியபோதுதான் தெரிந்தது, இந்த முறை வெற்றிபெறுவது அத்தனை எளிதான விஷயமில்லை என்று. அத்தனைக்கும் ஒரே காரணம் தான்...பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் இந்த விவகாரம் வெளியில் கசிந்தது. பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர்தான், முதல் முதலாக போலீசில் புகார் கொடுத்தார். அவரை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர்கள் சிலரை, அந்தப் பெண்ணின் சகோதரரும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து புரட்டியெடுத்தபோது, அவர்களிடமிருந்த மொபைல்போன்களில், பல இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து ஆபாசப்படமெடுத்தது தெரியவந்தது. அந்தப் பெண்களிடம் இந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டி, பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று பல வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியில் வந்தன. போலீசார் சிலரை கைது செய்தனர். கைதான சிலர் அதிமுகவில் இருப்பதாகவும், அதிமுக வி.ஐ.பி.,க்களுக்கு இவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு இந்த இளைஞர்களுடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் ரெக்கை கட்டிப்பறந்தன. அதை அப்போதைய பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் மறுத்து பேட்டி கொடுத்தார். பொள்ளாச்சி ஜெயராமனும் அதைப் பகிரங்கமாக அப்போதே மறுத்தார். அன்றிருந்த கோவை எஸ்.பி, பாண்டியராஜன், வாலண்டியராக பேட்டி கொடுத்து, ‘இதில் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை’ என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்று தெரிந்தும் வேண்டுமென்றே அந்தப் பெண்ணின் பெயர், சகோதாரர் பெயரை வெளியில் சொன்னார் பாண்டியராஜன். இதெல்லாம் மக்களின் சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்தது. அதன்பின்பே, போராட்டங்கள் வலுக்கத் துவங்கின.

கல்லுாரி மாணவர்கள், மகளிர் அமைப்பினர் எல்லோரும் போராடிய பின், திமுகவும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தது. பொள்ளாச்சியில் இது போல நுாற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் பரவியது. வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்பு தமிழக அரசால் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அந்த அரசாணையிலும் அந்தப் பெண்ணின் பெயர் இடம் பெற்றிருந்தது. இது பொள்ளாச்சி மக்களிடம் மட்டுமின்றி, தமிழக பெண்கள் அனை வரிடமும் அதிருப்தியை உண்டாக்கியது. அகில இந்திய அளவில் இது பெரும் விவாதமாகக் கிளம்பியது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அந்த நேரத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. தமிழகம் முழுவதும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தாலும், அதிமுக கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொங்கு மண்டலத்திலும் பலத்த அடி வாங்கியது. அதற்கு பொள்ளாச்சி பாலியல் விவகாரம்தான் முக்கியக் காரணமென்றும் கூறப்பட்டது. அதற்குப் பின் ஓராண்டாக வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, இந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது புகைந்து கொண்டிருந்த நெருப்பை மீண்டும் பற்ற வைத்தது. இந்த சூழ்நிலையில்தான் சட்டமன்றத் தேர்தல் வந்தது.

இந்த விவகாரத்தால்தான், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி கிடைத்ததாகக் கூறி, இந்த முறை கூட்டணிக் கட்சிக்கு பொள்ளாச்சி தொகுதியை அதிமுக தள்ளிவிடுமென்று கூறப்பட்டது. ஆனால் பொள்ளாச்சியில் அதிமுக போட்டியிடுமென்று அறிவிக்கப்பட்டது. கண்டிப்பாக பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சீட் தர மாட்டார்கள் என்று பேசப்பட்டது. இதற்கேற்ப, ‘இந்த முறை அவருக்கு சீட் கொடுத்தால் அது பொள்ளாச்சி தொகுதியில் மட்டுமின்றி அருகிலுள்ள மற்ற தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று சிலர், அதிமுக நிர்வாகிகள் பலரும் கட்சித்தலைமையிடம் ‘பிட்’டைப் போட்டனர். மற்றொரு புறத்தில் ‘பொள்ளாச்சி தொகுதி கொங்கு வேளாளர் பெரும்பான்மையாகவுள்ள தொகுதி. இதில் தொடர்ந்து செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயராமனுக்கே நான்காவது முறையாக வாய்ப்பு தரப்படுகிறது. இம்முறையாவது கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு தரவேண்டும்’ என்றும் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் சேர்ந்து முதல்வரிடம் மனு கொடுத்ததாக ஒரு தகவல் பரவியது. இதெல்லாம் போதாதென்று தேர்தலுக்கு முன் கோவை மாவட்டத்தில் மக்கள் கிராமசபை நடத்தியபோது, மீண்டும் பரப்புரைக்கு வந்தபோதும் இந்த விவகாரத்தை விலாவாரியாகப் பேசினார் ஸ்டாலின்.

இந்த காரணங்களை எல்லாம் வைத்து, பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு மாறப்போகிறார் என்றெல்லாம் தகவல் பரவிக் கொண்டிருந்தன. ஆனால் ஜெயராமனே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில், பொள்ளாச்சி அதிமுகவினர் மட்டுமின்றி பொது மக்களே அதிர்ந்து போயினர். ‘‘நான் தொகுதி மாறினால் என் மீதும் என் மகன் மீதும் திமுக கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று கூறிவிடுவார்கள். அதுவே கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொள்ளாச்சியில் சீட் கொடுங்கள். எப்படியாவது ஜெயித்துக் காட்டுகிறேன். தோற்றுவிட்டால் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்’’ என்று முதல்வரிடம் சொல்லி சீட் வாங்கியதாக கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டது. எப்படியாவது ஜெயிப்பதற்காக 30 கோடி ரூபாய் செலவழிக்கவும் தயாராயிருப்பதாகவும் தகவல் பரவியது. இதைப் பற்றி பொள்ளாச்சி ஜெயராமனிடம் ஊடகங்கள் கேட்டபோது, ‘‘அதெல்லாம் பொய்; எல்லோரையும் போலத்தான் நான் செலவழிக்கிறேன். கொரோனா காலத்தில் மக்களுக்கு நான் செய்த உதவிகளே என்னை ஜெயிக்க வைக்கும். அதனால் நான் பணம் கொடுத்துத்தான் ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

ஆனால் அவருடைய பரப்புரையிலும், அன்றாடத் தேர்தல் பணிகளிலும் காசு கரை புரண்டு ஓடியது.

இதெல்லாம் ‘ஒர்க் அவுட்’ ஆகுமா, அவர் கரையேறுவாரா என்று பொள்ளாச்சி அதிமுக நிர்வாகிகள் சிலரிடமும், அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் சிலரிடமும் விசாரித்தோம்...

‘‘களத்தில் இறங்கி தேர்தல் வேலை செய்வதில் பொள்ளாச்சி ஜெயராமன் பி.எச்.டி., முடித்தவர். ஆனால் அவருடைய தேர்தல் யுக்தியும், வியூகமும் இன்றைய காலகட்டத்துக்கு பெரிதாகக் கை கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை. இந்தத் தேர்தலில் சமூக ஊடகங்களை வைத்தே, பொள்ளாச்சி ஜெயராமனை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி...என்ற தேவாவின் கானா பாடலை அப்படியே ‘உல்ட்டா’ செய்து, ‘பொள்ளாச்சி பொள்ளாச்சி’ என்று மாற்றிப்போட்டு, அதை பட்டி தொட்டியெல்லாம் போட்டு மானத்தை வாங்கினார்கள். இதெல்லாம் பெண்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயராமனும், ‘ஸ்டாலின் இப்படிப் பிரசாரம் செய்து, பொள்ளாச்சிப் பெண்களை அவமானப்படுத்துகிறார்’ என்றெல்லாம் பதிலடி கொடுத்தார். அதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. கடைசியாக அவர் எடுத்த அஸ்திரம்தான், பணம்.

அதிமுகவில் எல்லாத் தொகுதிகளின் வேட்பாளர்களுக்கும் தலைமையிடமிருந்து 10 கோடி கொடுத்து, 2 லட்சம் ஓட்டுக்கு 500 வீதம் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இவர் ஏரியாவுக்கு ஏற்றவாறு ஆயிரத்திலிருந்து 2000 வரை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். கட்சிக்காரர்களை நம்பி, பிரித்துக் கொடுத்தார். அவர்களோ அதைப் பிரித்து மேய்ந்து விட்டார்கள். அவர் கொடுத்ததில் பாதிக்குப் பாதி காசுதான் மக்களுக்குப் போய்ச்சேர்ந்திருக்கிறது. ஒரு ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஓட்டுக்கு தலைக்கு 2000 என்று கணக்குப் போட்டு 6 கோடி கொடுக்க, அவர்கள் 500 ஆகக்குறைத்து நாலரை கோடியைச் சுருட்டி விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதே போலத்தான் பல பகுதிகளிலும் நடந்திருக்கிறது. போடிபாளையம் பகுதியில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லி பணம் தரப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள காலனி மக்களிடம் மட்டும் பணத்தைக் கொடுத்துவிட்டு, மற்றதை அமுக்கி விட்டார்கள். தகவல் தெரிந்து, ‘யார் யாருக்குக் கொடுத்தீர்கள். போன் நம்பருடன் பட்டியல் கொடுங்கள்’ என்று கேட்ட பின்பு, இரவோடு இரவாக மீதமுள்ளவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், கோவை மாவட்டத்திலேயே பொள்ளாச்சி தொகுதியில்தான் பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமிருக்கின்றனர். பொள்ளாச்சி தொகுதியிலும் 9307 பெண் வாக்காளர்கள் அதிகமாகவுள்ளனர். ஆனால் மற்ற 9 தொகுதிகளைக் காட்டிலும் பொள்ளாச்சி தொகுதியில்தான் அதிகபட்சமாக 75.10 சதவீதம் பெண்கள் வாக்களித்துள்ளனர். இதுதான் இப்போது ஆளும்கட்சியினரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இவ்வளவு பெண்கள் ஆர்வத்தோடு வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏதோ ஒரு முடிவுடன் வந்துதான் வாக்களித்திருக்க வேண்டும். ஒன்று, பொள்ளாச்சிப் பெண்களை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து ஸ்டாலினின் மீதுள்ள கோபத்தில் திமுகவுக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும். அல்லது அதிமுக நிர்வாகிகளை சிபிஐயே கைது செய்திருப்பதால், கண்டிப்பாக பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்குத் தொடர்பிருப்பதாக நினைத்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும். இரண்டில் இரண்டாவது நடந்திருக்கவே வாய்ப்பு அதிகம். கொடுத்த பணம் போய்ச்சேராதது, பெண்கள் அதிகமாக வாக்களித்திருப்பதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்தத் தேர்தலில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஜெயத்தை விட பயமே அதிகம்!’’ என்று புட்டு வைத்தார்கள்.

–பாலசிங்கம்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

சனி 10 ஏப் 2021