மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

ஸ்டாலின் -தினகரன் -கமல்-சீமான்: எடப்பாடி சொல்லும் மெஜாரிட்டி ஸ்கெட்ச்!

ஸ்டாலின் -தினகரன் -கமல்-சீமான்:  எடப்பாடி சொல்லும் மெஜாரிட்டி ஸ்கெட்ச்!

தேர்தல் முடிந்ததும் வாக்குப் பதிவு நிலவரங்கள் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்ற தகவல்கள் போலவே அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கும் பல தகவல்கள், கணக்குகள் நிலவரங்களாக சென்றுள்ளன.

தேர்தல் முடிந்ததிலிருந்து சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டிலேயே இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 10) காலை சேலத்தில் இருந்து தேனி புறப்படுகிறார். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மாமியார் காலமாகிவிட்டார். அது தொடர்பாக துக்கம் விசாரிப்பதற்காக சேலத்தில் இருந்து தேனிக்கு செல்கிறார் முதல்வர்.

எடப்பாடிக்கு 2016ம் 2021ம்

எடப்பாடி பழனிசாமிக்கு 2021 தேர்தல் மிக வித்தியாசமான தேர்தல் மட்டுமல்ல, மிகப் புதிய தேர்தலும் கூட. சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையிலும், சேலம் மாவட்ட அமைச்சர் என்ற அடிப்படையிலும்தான் இதுவரை அவர் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் வரை, சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றி அம்மாவின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அவரது உச்சபட்ச அரசியல் நோக்கம்.

ஆனால் இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிசாமியின் கைகளில் புதிய பொறுப்புகளையும், அவரது தோள்களில் புதிய சுமைகளையும் ஏற்றி வைத்திருக்கிறது. முதல்வராக இந்த தேர்தலை சந்தித்து அதிமுக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஏப்ரல் 6ஆம் தேதி காலை தனது பேரனைத் தூக்கிச் சென்று வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட்டு திரும்பிய முதல்வர் தனது வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் தன்னைச் சந்தித்த லோக்கல் அதிமுக புள்ளிகளை எல்லாம் தொகுதி ரவுண்டுக்கு அனுப்பிவிட்டார். தனது தொகுதி மட்டுமல்ல தமிழகம் முழுதும் வாக்குப் பதிவு சதவிகிதம் பற்றி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் முதல்வருக்கு தகவல்கள் சென்றுகொண்டிருந்தன. வாக்குப் பதிவு நடந்து முடிந்த சில மணி நேரத்தில், எடப்பாடி தொகுதியில் 85 சதவிகிதம் வாக்குப் பதிவானதில் முதல்வருக்கு பெரிய மகிழ்ச்சி.

அன்று இரவு 9.45 வரை சிலுவம்பாளையம் வீட்டில் இருந்தவர் தனது தொகுதியைச் சேர்ந்த அதிமுக, பாமக பிரமுகர்களை எல்லாம் பார்த்துப் பேசிவிட்டு எல்லாருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டுக்குச் சென்றார். இரவு நெடுநேரம் தமிழகம் முழுவதிலும் இருந்தும் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் முதல்வரிடம் பேசினார்கள்.

ஏப்ரல் 6ஆம் தேதி இரவிலிருந்து சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில்தான் இருக்கிறார் முதல்வர். தமிழகம் முழுவதிலும் இருந்தும் அமைச்சர்கள், மாசெக்கள் சேலத்தில் முதல்வரை சந்தித்தார்கள்.

டாக்டர் கொடுத்த தெம்பு

வீட்டில் இருந்த எடப்பாடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார். வட மாவட்ட நிலவரங்களை எல்லாம் இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது ராமதாஸ், ‘பாமக போட்டிபோட்ட 23 தொகுதியில 12 சீட் உறுதியா ஜெயிக்கிறோம். மீத தொகுதிகள்ல டைட்டா இருக்கு. ஆனாலும் நாமதான் ஜெயிப்போம். வட மாவட்டத்துல நம்ம கூட்டணி நல்லாவே இருக்கு. ரெண்டு கட்சிக்காரங்களுக்கு இடையிலும் நல்ல டிரான்ஸ்பர்மேஷன் நடந்திருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்.

வேலுமணியின் வியூகம்

பல அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் நெடுஞ்சாலை நகர் இல்லத்துக்கு சென்று முதல்வரை சந்தித்துப் பேசி வருகின்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சேலம் வந்து முதல்வரை சந்தித்துள்ளார். அப்போது, ‘நிச்சயமா நம்மதாண்ணே மறுபடியும் ஆட்சி அமைக்கிறோம். போன எம்பி தேர்தல்ல திமுக ஜெயிச்சாங்க. ஆனா அதோடு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்கள்ல நாம ஜெயிச்சோம். அப்ப நம்ம ஆட்சியை தக்க வைக்க சட்டமன்றத் தொகுதிகள் முக்கியம்குறதால நாம சட்டமன்ற இடைத்தேர்தல்லதான் நாம முழு கவனம் செலுத்தினோம்.அதனால எம்பி தேர்தல்ல தோத்தாலும் சட்டமன்ற இடைத்தேர்தல்ல அதிக தொகுதிகள்ல ஜெயிச்சு ஆட்சியை தக்க வைச்சுக்கிட்டோம். அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தல்ல திமுகவும் நாமளும் பாதிக்குப் பாதி ஜெயிச்சோம். கடந்த ரெண்டு வருஷமா உங்க இமேஜ் கிராம மக்கள் வரை நல்லா உயர்ந்திருக்குண்ணே. பத்து வருஷமா அதிமுக ஆட்சியில இருந்தாலும் நீங்க நாலு வருஷமாதான் இருக்கீங்க. நீங்க முதல்வரான நாலு வருஷத்துல மக்கள்கிட்ட நமக்கு பெரிய எதிர்ப்பு இல்ல. இன்னும் சொல்லப் போனா உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு வரவர உங்களுக்கு நல்ல பேருதான்ணே கூடியிருக்கு. மேற்கு வழக்கம்போல நமக்கு வந்துடும். மத்த மண்டலங்கள்லயும் பேசினதுல நமக்குதாண்ணே வெற்றி’ என்று முதல்வரிடம் உறுதியாக சொல்லியிருக்கிறார் வேலுமணி.

ராமதாஸிடம் பேசிவிட்டு வட மாவட்ட நிலவரம் பற்றி அமைச்சர் சி.வி.சண்முகத்திடமும் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரும் வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின் போடும் அவுட் சைடு கோல்

அமைச்சர்களிடம் பேசிய அதேநேரம் முதல்வர் தனக்கு நெருக்கமான சில அதிகாரிகளிடமும் வாக்குப் பதிவு பற்றி விரிவாகப் பேசியுள்ளார். தலைமைச் செயலகத்திலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேச்சிருப்பது பற்றியும் அந்த அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார் முதல்வர். அப்போது முதல்வரிடம் பேசிய அவருக்கு நெருக்கமான அதிகாரி,

“இப்படித்தாங்க 2016 இலும் வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு இடையிலான நாட்கள்ல, அடுத்து ஆட்சி நாமதான் அமைக்கப் போறோம்னு ஸ்டாலின்கிட்ட சில அதிகாரிகள் போய் நம்பிக்கையா பேசினாங்க. அடுத்து வர்ற திமுக ஆட்சியில தங்களுக்கு வளமான துறைகள் வேணும்னும் ஸ்டாலின்கிட்ட கோரிக்கை வச்சாங்க. இதையெல்லாம் நம்பின ஸ்டாலினும், கலைஞர்கிட்டயும் போய் அடுத்து நாமதான் ஆட்சி அமைக்கிறோம்னு சொல்லியிருக்காரு. அப்ப ஒருவர் ஸ்டாலின்கிட்ட போய், ‘சார். கிடைக்குற தகவல வச்சுப் பாத்தா மறுபடியும் மயிரிழையில அதிமுக ஆட்சிதான் வர்ற மாதிரி இருக்கு’னு சொன்னதுக்கு அந்த அதிகாரிய திட்டி அனுப்பிட்டாரு ஸ்டாலின். அவருக்கு தேர்தல்ல நல்லா உழைக்கத் தெரியும். ஆனா தேர்தல் முடிவுகளை கணிக்குறதுல தப்பு பண்ணிடுவாரு அப்படித்தான் இப்பவும் பண்ணிக்கிட்டிருக்காரு. அவுட் சைடு கோல் போட்டுக்கிட்டிருக்காரு”என்று முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்.

சுனில் என்ன சொல்கிறார்?

இந்த சந்திப்புகளிடையே அதிமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்ட சுனிலிடமும் பேசியிருக்கிறார் முதல்வர். வாக்குப் பதிவு தினத்தன்று அதிமுகவுக்காக ஒரு எக்சிட் போல் ஆய்வும் செய்திருக்கிறார்கள் சுனில் குழுவினர். அதன் அடிப்படையில் முதல்வரிடம் பேசிய சுனில், ‘நாம் நடத்திய ஆய்வின்படி அதிமுகவுக்கு 105 இடங்கள் மிக உறுதியாக கிடைத்துவிடும். சுமார் 20 இடங்களில் நமக்கும் திமுகவுக்கும் இப்படியா அப்படியா என கடுமையான போட்டி இருக்கிறது. ஆனால் அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் நாம் கடைசி நேரத்தில் செய்த வேலைகள் முழுதாய் நடந்திருக்கிறது. அதனால் அதில் 15 தொகுதிகள் நமக்கு உறுதியாக வர்றதுக்குத்தான் அதிக வாய்ப்பிருக்கு’என்று சுனில் சொல்லியிருக்கிறார்.

பாஜகவைச் சேர்ந்த சிலரிடமும் முதல்வர் தேர்தல் குறித்துப் பேசியுள்ளார். அவர்கள், ‘மத்திய உளவுத்துறை நடத்திய சர்வேயில் குளோஸ் ஃபைட்டில் அதிமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும்’என்று முதல்வரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மாநில உளவுத்துறை முதல்வருக்கு அனுப்பிய குறிப்பில், ‘நாங்கள் இன்னும் ஆய்வை முடிக்கவில்லை. சில தொகுதிகள் டஃப் ஆக இருக்கு. அதை ஆய்வு செஞ்சுட்டு முழு விவரங்களையும் தருகிறோம்’என்று முதல்வருக்கு சொல்லியிருக்கிறார்கள்.

கமல்-சீமான் பிரித்தது யார் வாக்கு?

பெண்கள், முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் வாக்குகள் தேர்தலில் முக்கியத்துவமானவை. இவை யாருக்கு போயிருக்கிறது என்றும் எடப்பாடி பிரத்யேகமாக விசாரித்திருக்கிறார். அவருக்கு கிடைத்த தகவல்களின்படி, “ முதல் முறை வாக்களித்தவர்களில் நகரப் பகுதிகளில் கமல்ஹாசனுக்கும், கிராமப் பகுதிகளில் சீமானுக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆக அந்த ஓட்டுகள் திமுகவுக்கு பெரும்பாலும் போகவில்லை. குறிப்பாக திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 40 ஆயிரம் வாக்குகள் பெறுவார் என்று தெரிகிறது. அதில் சுமார் பத்தாயிரம் வாக்குகள் திமுகவுக்கு போக வேண்டிய வாக்குகள்தான். எனவே கமல்ஹாசன், சீமானால் பாதிப்பு திமுகவுக்குத்தான். அதன் அடிப்படையில் வெற்றி விகிதம் அதிமுகவுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பெண்களின் ஓட்டுகள் அதிகமான தொகுதிகளில் எல்லாம் அதிமுகவுக்கே நல்ல வாய்ப்பிருக்கிறது. இயல்பாகவே பெண்கள் அதிமுக வாக்காளர்கள். அம்மா அரசு என்ற சென்டிமென்ட், இரட்டை இலை மீதான பற்று, திமுக மீதான ரவுடியிச இமேஜ் ஆகியவை எல்லாம் சேர்த்து பெண்கள் ஓட்டுகள் அதிமுகவுக்கே அதிகமாக விழுந்திருக்கிறது” என்று சொல்லப்பட்டிருக்கின்றன.

இப்படி கடந்த மூன்று நாட்களாய் பல்வேறு தரப்புகளிடமும் விரிவாக ஆலோசனை நடத்திய முதல்வர் தன்னை சந்தித்த மூத்த அமைச்சர்களிடம், ‘என்னோட தேர்தல் அனுபவத்துல நமக்கு இந்த தேர்தல்ல பெரிய அளவு எதிர்ப்பு இல்லை, மக்கள் என்னை ஒரு சாதாரண மனுசனா எளிமையான மனுஷனா பார்த்தாங்க. எனக்கு கிடைச்ச ரிப்போர்ட்படி 130 சீட்டு நமக்கு மட்டும் வந்திடும்’என்று நம்பிக்கையாக சொல்லியிருக்கிறார்.

தினகரன் பிரிப்பாரா?

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம் பேசும்போது தென் மாவட்ட நிலவரம் பற்றி இருவரும் நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள். தென் மாவட்டங்கள் பற்றி தனக்கு கிடைத்த விவரங்களையும் அப்போது பன்னீரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் எடப்பாடி. ‘தினகரன் தென் மாவட்டத்துல நம்ம ஓட்டை அதிக அளவு பிரிப்பார்னு சில பேர் சொன்னாங்க. ஆனா அதெல்லாம் நடக்கல.

ரெட்டை இலைக்கு ஓட்டுப் போட்டவங்கதான் தென் மாவட்டங்கள்ல அதிகம். அவரோட சின்னத்துகெல்லாம் பெரிய அளவு ஓட்டெல்லாம் விழலை. தொகுதிக்கு ஆயிரத்துலேர்ந்து 2 ஆயிரம் ஓட்டுதான் அவர் வாங்கியிருக்க முடியும். லீடிங் வித்தியாசத்தை வேணும்னா அவங்க கொஞ்சம் குறைக்கலாமே தவிர நம்ம வெற்றிய பாதிக்க முடியாது. ரெட்டை இலை தோக்கக் கூடாதுனுதான் அவங்களே நினைச்சிருக்காங்க. அதனால பெரிய அளவு கவலைப்பட எதுவுமில்லை”என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்.

பேச்சு அப்படியே தேவேந்திர குல வேளாளர் ஓட்டு விவகாரம் பற்றியும் திரும்பியிருக்கிறது. “மத்திய அரசு அவங்களுக்கு பொது பெயர் அறிவிச்சது. ஆனா கிருஷ்ணசாமி இது பத்தாதுனு சொல்லி தனியா போயிட்டாரு. இருந்தாலும் தேவேந்திர குல வேளாளர் ஓட்டுல 60% ஓட்டு நமக்கு வந்திருக்கு. அதனால அதுபத்தியும் கவலைப்பட வேணாம். நம்ம ஏரியாவுல (மேற்கு) ரொம்ப நல்லா இருக்குண்ணே. நமக்கு கொஞ்சம் டஃப்பா இருக்குதுனா அது காவேரி டெல்டாதான். அத வைச்சிதான் நான் 130 சீட்டுன்னு சொல்றேன்”என்று ஒவ்வொரு ஏரியா பற்றியும் விலாவாரியாக விளக்கியிருக்கிறார் முதல்வர்.

தேர்தலன்று இரு தனியார் நிறுவனங்கள் மூலம் அதிமுக எக்சிட் போல் சர்வே எடுத்திருக்கிறது. அந்த தனியார் நிறுவனங்கள் இரு தினங்களில் தங்கள் ரிப்போர்ட்டை எடப்பாடியிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்கள், ‘அதிமுக 100 இடங்கள் உறுதியாக பெறும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

சுனில் தரப்பு, தனியார் நிறுவனங்களின் எக்சிட் போல் ஆய்வு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் என்று பல தரப்பினரிடமும் பேசிய வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ என் அரசியல் அனுபவத்தில் நான் சொல்கிறேன், அதிமுகவுக்கு வரும் தேர்தலில் 130 சீட்டுகள் வரை கிடைக்கும்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடத்தில் ஒரு ஸ்கெட்ச் போட்டுக் காட்டியிருக்கிறார்.

எடப்பாடியின் ஏப்ரல் ஸ்கெட்ச் எப்படி என்பது மே 2 ஆம் தேதி தெரிந்துவிடும்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 10 ஏப் 2021