மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

கருத்து மோதல்களைத் தேர்தலோடு மறந்துவிட வேண்டும்: ஸ்டாலின்

கருத்து மோதல்களைத் தேர்தலோடு மறந்துவிட வேண்டும்: ஸ்டாலின்

அரக்கோணம் அருகே தேர்தல் மோதல், இருவரது கொலையில் முடிந்திருப்பது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோதத் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். தேர்தல் முடிந்து ஒரு சில நாட்களில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அஜித், மதன் ஆகிய இருவர் நேற்று கைதான நிலையில், தற்போது புலி என்ற சவுந்தர், நந்தகுமார், கார்த்தி, சத்யா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 6 பேர் கைதாகியுள்ள நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கொலை செய்யப்பட்ட உறவினர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இருவரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்ததால் அவர்களுடன், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோன்று, இந்த கொலை, தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி சங்கர் அறிவித்துள்ளார்

இந்நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில்அர்ஜூனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அதில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறுவதும், ஆக்கப்பூர்வமான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதும் மட்டுமே ஜனநாயகத்திற்கும், பொது அமைதிக்கும் வலு சேர்க்கும்.

இந்த நிகழ்வைப் பொறுத்தமட்டில், தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், இப்போது இருவர் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது. கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்கும் யாராலும் பொது அமைதிக்குப் பங்கம் விளைந்து, பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது.

எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்திலிருந்தாலும், தேர்தலோடு அவற்றை மறந்து விட்டு, தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக, சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

எனவே, தமிழகக் காவல்துறைத் தலைவர் உடனடியாகத் தலையிட்டு, மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் அவரவர் பகுதிகளில் சட்டம், ஒழுங்குப் பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என்றும், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும்" எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 9 ஏப் 2021