மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

தேர்தல் ரிசல்ட்! கவலை - பதற்றம் - மகிழ்ச்சி: ஸ்டாலினை சுற்றி!

தேர்தல் ரிசல்ட்! கவலை - பதற்றம் - மகிழ்ச்சி: ஸ்டாலினை சுற்றி!

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து முழுதாக இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. ஆனால் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதில் வாக்கு சதவிகிதக் கணக்குகளில் தொடங்கி பற்பல கணக்குகள் தமிழகத்தின் இரு முக்கிய அரசியல் கூடாரங்களிலும் அலசப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் டென்ஷன்

திமுக கூட்டணியின் தலைவரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கள் கூட்டணி ஜெயிக்கும் என்றே தொடர்ந்து சொல்லி வந்தார். தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி காலை வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் ஐபேக் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கே திமுகவின் தேர்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் மற்றும் தேர்தல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐபேக் முக்கிய அலுவலர்கள், ஊழியர்களும் இருந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளே வந்ததும், ‘ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப் போறாரு’ என்ற பாடல் ஒலிக்க அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

ஆனாலும் ஸ்டாலின் முகத்தில் லேசான டென்ஷன் படர்ந்திருந்தது. வாக்குப் பதிவு தொடங்கியது முதல் மெல்ல மெல்ல சீராக வாக்கு சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால், நண்பகலில் வாக்கு சதவிகிதத்தில் முன்னேற்றம் எதுவுமில்லை என்று வந்த தகவல்களால்தான் ஸ்டாலின் முகத்தில் சின்ன டென்ஷன். இதனால் திமுகவின் வெற்றியில் தாக்கம் ஏற்படுமோ என்று கருதியிருக்கிறார் ஸ்டாலின்.

பிகே கொடுத்த டேட்டா

ஐபேக் அலுவலகத்தில் பிரசாந்த் கிஷோர், சபரீசன் உள்ளிட்டோருடன் இதுபற்றியே ஆலோசித்திருக்கிறார். ‘இல்லை... வழக்கமான வாக்குப் பதிவு விகிதம்தான் இது. நகர்ப்புறங்களில் குறைவாகவும், கிராமப்புறங்களில் அதிகமாகவும் இருக்கிறது. மேலும் கொரோனா தொற்றால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. எனவே தொடக்கத்தில் சதவிகிதக் கணக்கு இப்படித்தான் இருக்கும். மதியத்துக்கு மேல் மெல்ல மெல்ல இந்த விகிதம் சமனாகும். இதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று பிரசாந்த் கிஷோர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்தும் அவருக்கு டேட்டாக்கள் வந்துகொண்டே இருந்தன.

அதாவது ஐபேக் தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் நாளன்று ஆய்வு செய்வதற்காக சட்டமன்றத் தொகுதி வாரியாக பயிற்சி அளிக்கப்பட்ட நபர்களை அமர்த்தியிருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கிட்டத்தட்ட அனைத்து வாக்குச் சாவடிகளையும் வலம்வந்த இந்த ஐபேக் பணியாளர்கள், தங்களுக்கென எக்சிட்போல் போல ஒரு சர்வேயை மேற்கொண்டனர். தேர்தல் உத்தி வகுப்பு என்றால், தேர்தலுக்கு முன்பே முடிந்து விடுவதில்லை... தேர்தலன்றும் தங்கள் பணி தொடரும் என்பதுதான் ஐபேக் பாணி.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் ஐபேக் குழுவினர் வாக்குச் சாவடியில் இருந்து சேகரித்து அனுப்பிய தகவல்கள் பிரசாந்த் கிஷோரின் கைகளுக்கு வந்துகொண்டிருந்தன. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடி வாசலிலும் வாக்காளர்கள் உள்ளே செல்லும்போது சிற்சில அறிகுறிகளை விட்டுச் செல்வார்கள். திமுக அபிமான வாக்காளர்களாக இருந்தால் பூத்துக்கு செல்லும் வழியில் இருக்கும் திமுகவின் அலுவலகத்தில் சிலிப் வாங்கிச் செல்வார்கள். அதிமுக அபிமானிகள் என்றால் அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பாக பூத் சிலிப் வழங்கப்படும் இடத்துக்குச் சென்று அங்கே சிலிப் பெறுவார்கள். இது ஓர் அறிகுறி. அவர்கள் வாக்கு செலுத்திவிட்டு வெளியே வந்ததும்... நேராக அவர்களிடம் போய், ‘என்ன சார்... எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போட்டீர்கள்?’ என்று யாரும் நேரடியாகக் கேட்கவும் போவதில்லை, அப்படிக் கேட்டாலும் பதில் வரப் போவதில்லை.

‘இங்க இவங்கதான் வருவாங்க போல இருக்கு’ என்று கூறினால்... வாக்காளர்களிடம் இருந்து வரும் பதிலைப் பொறுத்து அவர்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடியும். இதுபோன்ற சில பிரத்யேக கேள்விகள் மூலம் திரட்டப்பட்ட பதில்களையும், தரவுகளையும் ஐபேக் பணியாளர்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடி வாரியாக அனுப்பிக்கொண்டே இருக்க அவற்றை, அவ்வப்போது ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றபடியிருந்தார் பிரசாந்த் கிஷோர். சட்டமன்றத் தொகுதிகள் முழுவதும் களமிறக்கப்பட்டு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த ஆய்வுகளை நடத்த பெரிய பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறது ஐபேக்.

கிட்டத்தட்ட மாலை நேரத்தில் தனக்குக் கிடைத்த ஒட்டுமொத்த தரவுகளின் அடிப்படையிலும் ஐபேக் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகளின் அடிப்படையிலும் திமுகவுக்கு மட்டுமே 150 இடங்கள் கிடைக்கும் என்று பிரசாந்த் கிஷோர் உறுதியாக ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டதும்தான் ஸ்டாலின் முகத்தில் டென்ஷன் ரேகைகள் மறைந்து மகிழ்ச்சி பூக்கத் தொடங்கியது. தனது குடும்பத்தினரிடமும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் ஸ்டாலின்.

பணம் பாதிக்குமா?

ஒருபக்கம் ஐபேக் ரிப்போர்ட் தனக்கு நம்பகமான மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு பக்கம் திமுக தலைவர் என்ற முறையில், பல்வேறு மாவட்டச் செயலாளர்களிடமும் தொடர்புகொண்டு, வாக்குப் பதிவு நிலவரங்களை விசாரித்து அறிந்துகொண்டார் ஸ்டாலின்.

அதிமுக சார்பில் பெரும்பாலான தொகுதிகளில் பணம் அதிக அளவு கொடுக்கப்பட்டதும், திமுக தரப்பில் அதிமுக அளவுக்குக் கொடுக்கப்படாததும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின். ‘திமுக தரப்பில் ஒன்றுமே கொடுக்காமல் இருந்தால்தான் கவலைப்பட வேண்டும். ஆனால், நாம் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில்கூட குறைந்தபட்ச அளவாகக் கொடுத்திருக்கிறோம். அதிமுகவில் பல இடங்களில் பணத்தை ஒன்றிய அளவில் பலர் அமுக்கிவிட்டனர். அவர்கள் கொடுத்த பணம் மக்களுக்கு இம்முறை பல இடங்களில் முழுதாகச் சென்று சேரவில்லை. எனவே பணம் இந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள் மாவட்டப் பொறுப்பாளர்கள்.

மேலும் தற்போது பணியில் இருக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் கொடுத்திருக்கும் ரிப்போர்ட்டும் ஸ்டாலினைச் சென்று சேர்ந்திருக்கிறது. ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலரும் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். அவர்களில் பலர், திமுக மட்டுமே 150 முதல் 160 இடங்களில் வெற்றிபெறுமென்று ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்கள்.

பார்டர் பாஸ் போதாது

இந்தத் தேர்தலில் 130 இடங்கள், 125 இடங்கள் என்று பெரும்பான்மைக் கோட்டினை தாண்டுவது மட்டுமே வெற்றியல்ல என்று தனது நெருங்கிய நண்பர்களிடமும் திமுக நிர்வாகிகளிடமும் ஸ்டாலின் ஏற்கனவே சொல்லிக் கொண்டிருந்தார். பிரச்சாரத்தில்கூட இதைக் குறிப்பிட்டார் ஸ்டாலின்.

அதற்கு முக்கியக் காரணமும் இருந்தது. இதுமாதிரி பார்டரில் பாஸ் ஆகி ஆட்சி அமைத்தாலும் மற்ற மாநிலங்களைப் போல பிஜேபி தமிழகத்திலும் திமுகவுக்குள் புகுந்து சடுகுடு ஆடி கொத்துக் கொத்தாக எம்.எல்.ஏ.க்களைத் தூக்கிவிடுவார்கள். அதன் மூலம் ஸ்திரமற்ற அரசியல் சூழல் தமிழகத்தில் உண்டாகிவிடும் என்ற சந்தேகமும் எச்சரிக்கை உணர்வும் ஸ்டாலினுக்கு இருந்தது. அதனால்தான் பெரும்பான்மை பெறுவதல்ல இந்தத் தேர்தலின் வெற்றி என்று அவர் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு வந்தார். இந்த எச்சரிக்கை உணர்வு சில மாதங்களாகவே ஸ்டாலினிடம் இருந்தது.

கூட்டணிக் கட்சியினருடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியபோதே எ.வ.வேலு இதை வெளிப்படையாக சொல்லித்தான் அவர்களைக் குறைவான இடங்களில் போட்டியிடுவதற்கு கன்வின்ஸ் செய்தார்.

‘இதப் பாருங்க உங்களுக்கு சீட் கொடுக்குறதுல எங்களுக்கு தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை. நாளைக்கு 125,130ன்னு திமுக ஜெயிச்சு அதுல குழப்பம் ஏற்படுத்த பிஜேபி முயற்சி பண்ணினா நம்ம ஒட்டுமொத்த நோக்கமும் சிதைஞ்சு போகும். அதனாலதான் திமுக அதிக இடங்களில் நின்னு சாலிட் ஆன வெற்றியைப் பெறணும்னு நினைக்கிறோம். இதுக்குக் காரணம் வேற எதுவுமில்லை. மத்த மாநிலங்களைப் போல இல்லாம தமிழ்நாட்டில் பிஜேபி தலையீடு இல்லாத ஆட்சி நடக்கணும்னு நினைச்சுதான் இப்படி செய்யுறோம். அதனால கொஞ்சம் விட்டுக் கொடுங்க. எல்லாம் நல்லாவே நடக்கும்’ என்று பேசிதான் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரைக் குறைவான இடங்களில் போட்டியிடுவதற்கு ஒப்புக்கொள்ள வைத்தார் எ.வ.வேலு.

கூட்டணிக் கட்சிகளுடன் நடந்த இடப் பகிர்வின்போது ஸ்டாலினுக்கு ஏற்பட்ட சந்தேகமும் எச்சரிக்கை உணர்வும் தேர்தல் நாளன்றும் இருந்தது. ஆனால், ஐபேக் - சிட்டிங் அதிகாரிகள் - ஓய்வுபெற்ற அதிகாரிகள் - மாவட்டச் செயலாளர்கள் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கிடைத்த தகவல்களும், ‘150 ஐத் தாண்டுவோம்’ என்று இருந்ததால் பெரிதும் ரிலாக்ஸ் ஆனார் ஸ்டாலின்.

திமுகவைக் கரையேற்றும் சமூக ரசவாதம்

அடுத்த நாளான ஏப்ரல் 7ஆம் தேதி தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் பிரத்யேக ரிப்போர்ட் ஸ்டாலினுக்குக் கிடைத்தது.

அதன்படி வடக்கு மண்டலத்தில் பாமகவின் ஓட்டுகள் அதிமுகவுக்கும், அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்கும் டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறது. ஆனால் அதிமுகவுக்கு என்று இருக்கும் பட்டியலின ஓட்டு வங்கியில் இம்முறை பலத்த சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. பாமகவோடு அதிமுக காட்டிய இணக்கம், கடைசி நாளில் சட்டமன்றத்தில் 10.5% உள் இட ஒதுக்கீடு பெரிதாக பாமகவால் பிரச்சாரத்தில் எடுத்து வைக்கப்பட்டது போன்றவற்றால் அதிமுக பட்டியலின வாக்கு வங்கியில் இழப்பைச் சந்தித்திருக்கிறது. அந்த வாக்குகள் இம்முறை திமுகவுக்கு வந்திருக்கிறது.

இதேபோல திமுகவை நோக்கி இன்னுமொரு பெரிய வாக்குப் பரிமாற்றமும் நடந்திருக்கிறது. அதாவது விடுதலைச் சிறுத்தைகள் இருப்பதால் ஆங்காங்கே அடர்த்தியாக இருக்கும் மற்ற சிறு சிறு சமூகங்களின் ஓட்டு திமுகவுக்கு வருவதில் சிக்கல் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் இம்முறை வன்னியர்களுக்கு 10.5% என்ற வெளிச்சம் அதிகமாக பிரச்சாரத்தில் தென்பட்டதால் இந்த சிறு சிறு அடர்த்திச் சமூகத்தினர் சிறுத்தைகளை மையமாக வைத்து செயல்படாமல் பாமகவை மையமாக வைத்து எதிர்வினையாற்றி திமுகவை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள்.

வடக்கே இப்படியென்றால் தேவேந்திர குல வேளாளர்களுக்கு பொதுப் பெயர் கொடுத்த விவகாரத்தில் அதிருப்தியாகியிருந்த வெள்ளாளர்கள் தமிழகம் முழுதும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக பக்கம் மௌனமாகத் திரும்பியிருக்கிறார்கள்.

இதைத் தாண்டி டெல்டா, மற்றும் மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அதிமுகவின் வழக்கமான அரசியல் மற்றும் சமூக அடிப்படையிலான வாக்குகளை அமமுக பெரிய அளவில் பிரித்து வேட்டையாடிவிட்டது. இது அதிமுகவின் இயல்பான பலத்தை இழக்கச் செய்துவிட்டது.

அதிமுக பெரிதும் எதிர்பார்த்திருந்த மேற்கு மண்டலத்தில்கூட கவுண்டர்களைத் தாண்டிய அருந்ததியர், முதலியார் உள்ளிட்ட பிற சமூகத்தினர் திமுக பக்கம் முழுமையாக சாய்ந்திருக்கிறார்கள். கவுண்டர் சமுதாயம்கூட முழுமையாக அதிமுக பக்கம் இந்த முறை இல்லை. காரணம், பாஜகவால் ஏற்பட்ட தொழில் இழப்புகளால் அவர்கள் அதிமுக பாஜக கூட்டணியை ரசிக்கவில்லை.

இப்படிப்பட்ட ‘சமூக’ ரச வாதங்களால் திமுகவின் வெற்றி உறுதியாகியிருக்கிறது என்று தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி ரிப்போர்ட் சென்றடைந்திருக்கிறது.

இப்படி ஐபேக் மட்டுமல்லாமல் திமுகவின் பல்வேறு விசாரணைகள் மூலமாகவும் கிடைத்த தரவுகள், ‘மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் திமுக மட்டுமே 150 - 160 இடங்கள் வரை பெறும்’ என்ற தகவலை வெறும் தகவலாக மட்டும் இல்லாமல் உரிய காரண காரியங்களோடு நிறுவியிருப்பதால் உள்ளபடியே பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார் ஸ்டாலின்.

ஆட்சி அமைக்கும் உறுதி

இந்த நம்பிக்கையின் உறுதி எந்த அளவுக்கு இருக்கிறது என்றால்... அடுத்து அமையப் போகும் ஆட்சியில் முக்கியமான உயரதிகாரிகள் யார் யார் என்ற விவாதமும், திமுக ஆட்சியின் அமைச்சர்கள் யார் யார் என்ற விவாதமும் ஸ்டாலினைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் நேற்றே (ஏப்ரல் 8) தொடங்கிவிட்டது.

திமுக வட்டாரத்தில் இப்படி அரசு அமைக்க ஆயத்தங்களில் உறுதியான நம்பிக்கையோடு இறங்கிவிட்ட நிலையில் அதிமுக தரப்பில் என்ன நடக்கிறது? அரசு இயந்திரத்தைக் கையில் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தல் முடிவுகள் பற்றி கிடைத்துள்ள தரவுகள், தகவல்கள் என்ன?

-வேந்தன்

(நாளை காலை 7 மணிக்கு)

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

வெள்ளி 9 ஏப் 2021