மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கக் கூடாதா?

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கக் கூடாதா?

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டிருந்ததாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையாளர் சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.

ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை என்ற புகார் குரல் தேர்தல் முடிந்த நிலையில் எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுவாமிநாதன் ராஜகோபால், சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதியின் வாக்காளர். மாற்றுத் திறனாளியான இவர் தான் வாக்களித்த வாக்குச் சாவடியில் செங்குத்தான உயரத்தில் ஏறமுடியவில்லை என்று சாகுவிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ராஜகோபால் ஐ.ஏ.என்.எஸ். செய்தி இணைய தளத்திடம் பேசியபோது, "வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படும் என்று அறிவிப்புகள் இருந்தன. ஆனால் உண்மை அவர்கள் சொன்னதற்கு முற்றிலும் மாறுபட்டது. நான் வாக்களிக்கச் சென்ற ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் செங்குத்தான படிகளில் ஏற மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு எனது வாக்குரிமையை செலுத்தினேன். நான் கஷ்டப்படுவதை பார்த்த சில கட்சியினர்தான் எனக்கு அங்கே உதவினார்கள் " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருந்தபோதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான வசதிகளை வழங்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக இதுபோன்ற சம்பவங்களின் மூலம் தெரிகிறது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான கூட்டணி, சென்னையில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஏற்கனவே மனு அளித்துள்ளது.

ராஜேஷ் ராமகிருஷ்ணன் என்ற சமூக செயற்பாட்டாளர் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம், "தமிழ்நாட்டின் வாக்குச் சாவடிகளில் உள்ள நிலையை பார்க்கும்போது மாற்றுத்திறனாளிகள் தேர்தல் அதிகாரிகளால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வையே தருகிறது. பார்வையற்ற வாக்காளர்களுக்குக் கூட பல வாக்குச் சாவடிகள் சரியான உதவிகள் செய்யப்படவில்லை”என்று கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வரும்போது வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தால் உறுதியளிக்கப் பட்டிருந்தாலும், பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் இந்த வசதிகள் இல்லை என்பதே சுடும் உண்மை.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வாக்குச் சாவடி நுழைவாயிலிலிருந்து வாக்களிக்கும் இடம் வரை சக்கரநாற்காலி உதவி அளிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நம்பி பலரும் தவித்துப் போய்விட்டார்கள். சில இடங்களில் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தபின் குடும்ப உறுப்பினர்களாலும், காவல்துறையினராலும் கைகளால் தூக்கிச் செல்லப்பட்டனர்.

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டக்கரம்மாள்புரம் செக்போஸ்டுக்கு அருகிலுள்ள சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி வாக்குச் சாவடிக்கு காலை 8 மணிக்கே ஒரு முதியவர் வாக்களிக்க வந்தார். வாக்குச் சாவடி வாசல் வரை காரில் அவரை அழைத்து வந்தார் அவரது மகன். ஆனால் வாக்களிக்கும் இடத்துக்கு செல்ல வீல் சேர் தேடியபோது இல்லை என்ற பதிலே கிடைத்தது. பின் அவரது மகனும், வரிசையில் நின்ற இன்னொரு வாக்காளரும் அந்த முதியவரை வாக்களிக்கும் இடம் வரை தூக்கிச்சென்று வாக்களிக்க வைத்தனர். (என்று தி இந்து செய்தி கூறுகிறது)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதியில் உள்ள பணகுடி வாக்குச் சாவடியில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், சுமார் நூறு மீட்டர் தூரம் ஊர்ந்து சென்று வாக்களித்த காட்சி வாக்காளர்களை வேதனை அடைய வைத்தது. காரணம் அந்த வாக்குச் சாவடியிலும் சக்கர நாற்காலி வசதி இல்லை.

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வரக் கூடாதா என்று மனம் புழுங்குவதோடு, தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சரியான தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கிறார்கள். இனி வரும் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உட்கட்டமைப்பினை கட்டாயமாக்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 8 ஏப் 2021