மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

அமைச்சர் மண்டை உடைப்பு: வங்கத்தில் தோற்கும் ஜனநாயகம்!

அமைச்சர் மண்டை உடைப்பு: வங்கத்தில் தோற்கும் ஜனநாயகம்!

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று ஆறு வேட்பாளர்கள் மீது மேற்கு வங்கத்தில் தாக்குதலும், தாக்குதல் முயற்சிகளும் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து நேற்று அந்த மாநில அமைச்சர் ஒருவரையே தாக்கியுள்ளனர், எதிர்க்கட்சியினர் தரப்பில்.

மேற்கு வங்க மாநிலத்தின் சிறுபான்மை சமூகங்கள் துறையின் அமைச்சர் ஜியாசுதீன் மொல்லா. தெற்கு 24பர்கானா மாவட்டத்தில் உள்ள மேற்கு மக்ராஹட் தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார். இந்தத் தொகுதிக்கும் சேர்த்துதான் கடந்த செவ்வாயன்று தேர்தல் நடைபெற்றது.

அடுத்து நான்காம் கட்டத் தேர்தலின் பிரச்சாரத்துக்காக, இவர் தன் ஆதரவாளர்களுடன் டைமண்ட் ஹார்பரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். நேற்று 6.30 மணியளவில் மாலையில் உஸ்தி எனும் இடத்தில் இவர்களின் வாகன வரிசை மீது ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டது.

தாக்குதலில் அமைச்சர் ஜியாசுதீனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள ராஜர்ஹட் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், அமைச்சரின் காரை அடித்து நொறுக்கியது. அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் அவர்கள் கடுமையாகத் தாக்கினர். அவர்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்துக்காகப் போய்க்கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தேறியது.

தாக்குதலைக் கண்டித்து திரிணமூல் கட்சியினர் உடனே ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கும் 117ஆவது தேசிய நெடுஞ்சாலையானது அவர்களின் போராட்டத்தால் முடங்கிப்போனது. சிராக்கோல் பிரிவு எனும் இடத்தில் பேருந்து ஒன்றுக்கு அவர்கள் தீவைக்கவும் செய்தனர். பல வாகனங்களை சிதறடித்து வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தினர்.

நெரிசல் நேரத்தில் ரயில் போக்குவரத்தையும் திரிணமூல் கட்சியினர் சீர்குலைத்தனர். தெற்கு சீல்தா பகுதியின் பல இடங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

அது மட்டுமின்றி, உஸ்தி, மக்ராஹட் ஆகிய பகுதிகளில் பாஜகவினர் திரிணமூல் கட்சியினரால் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கூடுதலான போலீஸ் படையினரும் துணை ராணுவப்படையினரும் வரவழைக்கப்பட்டு, களேபரப் பகுதிகளில் அமைதி நிலை கொண்டுவரப்பட்டது.

” பாஜகவின் திட்டமிட்ட தாக்குதல் இது.. ஜியாசுதீனைக் கொலைசெய்யவே குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவருடைய பாதுகாப்பு அணியினரும் உள்ளூர் வாசிகளும் தாக்குதல் நடத்திய குண்டர்களிடமிருந்து பாதுகாப்பாக அவரை விடுவித்தனர்.” என்று திரிணமூல் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

ஆனால், அமைச்சரின் குடும்பத்தினர் இன்னொரு சந்தேகத்தையும் கூறியுள்ளனர். காங்கிரஸ்+இடதுசாரி அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள முஸ்லிம் மதபோதகர் அப்பாஸ் சித்திக்கியின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியினரும் இதில் ஈடுபட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அவரின் குடும்பத்தார்.

பாஜக தரப்பிலோ, அமைச்சர் மீதான தாக்குதல் உள்கட்சி மோதல் விவகாரம் என அடியோடு மறுக்கின்றனர்.

எதிர்த்தரப்பிலும் பாஜகவின் மாநிலத் தலைவர் திலிப் கோசின் வாகன வரிசை மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திரிணமூல் கட்சியினரே இதில் ஈடுபட்டதாக கூச்பிகார் மாவட்ட பாஜகவினர் குற்றம்சாட்டினர். அந்த மாவட்டத்தின் சிட்டல்கச்சி எனும் பகுதிக்குப் புதன் மாலையில் சென்றபோது திலிப்பின் தரப்பு தாக்குதலுக்கு ஆளானது.

அதில் அவருக்கு இடதுகையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மம்தாவின் திரிணமூல் கட்சியினர் மீதே அவர் குற்றம்சாட்டியுள்ளார். இரும்புக்கம்பி, செங்கற்கள், கற்களைக் கொண்டு அவர்கள் தங்களைத் தாக்கியதாக திலிப் கூறினார்.

இந்தத் தாக்குதலை அடுத்து பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்தனர். கொல்கத்தாவில் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூச்பிகாரில் இன்றுதான் பிரச்சாரத்துக்குக் கடைசி நாள் என்றபோதும் அனைத்து போலீஸ்நிலையங்கள் முன்பாக பாஜகவினர் இன்று போராட்டம் நடத்தினர். தங்கள் மீதான குற்றச்சாட்டை திரிணமூல் கட்சியினரும் மறுத்துள்ளனர்.

தாக்கியது யாராக இருந்தாலும் தாக்கப்பட்டது ஓர் அமைச்சரும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவரும் என்பது அவ்வளவு சாதாரணமா, என்ன?

மேற்குவங்கத்தின் மோதல் போக்கு கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டு இருக்கிறது. இன்னும் ஐந்து கட்டத் தேர்தல்கள் நடைபெறவேண்டி இருக்கும் நிலையில், என்னென்ன நடக்குமோ என பதைபதைப்பில் இருக்கிறார்கள், வங்கத்து வாக்காளர்கள்!

- இளமுருகு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 8 ஏப் 2021