மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

பணம்... பங்கு... பசும்பொன்... பன்னீர்... பழனிசாமி... தேர்தலில் அமைதியாய் அரங்கேறிய உரசல்!

பணம்... பங்கு... பசும்பொன்... பன்னீர்... பழனிசாமி... தேர்தலில் அமைதியாய் அரங்கேறிய உரசல்!

அமைதியாக முடிந்து விட்டது தேர்தல்; ஆட்சியைத் தக்க வைப்போம் அல்லது அசுர பலமுள்ள எதிர்க்கட்சியாக திமுகவைத் திணறடிப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது அதிமுக தலைமை. ஆனால் தேர்தலுக்கு முன் நடந்த பல விஷயங்கள், தேர்தலுக்குப் பின் மெதுவாக வெளிவரத்துவங்கியிருப்பதில், இன்னும் சில நாட்களில் கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்கள் கசியத்துவங்கியுள்ளன. தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, முதல்வர் வேட்பாளர் குறித்து விமர்சனங்கள் எழலாம் அல்லது மோதலாகவும் வெடிக்கலாம் என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் கட்சியின் மீது உண்மையான அக்கறையுள்ள மூத்த நிர்வாகிகள்.

பணம்தான் பிரதான பிரச்சினை. அதிமுகவில் நடக்கும் பல்வேறு பண விவகாரங்களையும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் கட்சியின் மிக முக்கியமான நிர்வாகி ஒருவரிடம் இதைப் பற்றிக் கேட்டோம். தேர்தல் முடிந்து விட்டதால், சற்று தைரியமாகவும் வெளிப்படையாகவும் பல விஷயங்களை நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டார்....

‘‘அதிமுக துவக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையிலும் இந்தத் தேர்தலுக்கு விளம்பரம் கொடுத்ததைப் போல வேறு எந்தத் தேர்தலுக்கும் விளம்பரம் தந்ததில்லை. நாளிதழ்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், டுபாக்கூர் பத்திரிக்கைகள் என யார் வந்து கேட்டாலும் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். காரணம், அது கட்சியின் காசில்லை; கவர்மென்ட் காசு. அதிமுகவின் வெற்றிக்கான வியூகங்களை அமைத்துத் தந்ததில் கட்சிக்கு வேலை பார்த்தவர்களை விட, செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்தவர்கள்தான் அதிகமாக வேலை பார்த்தார்கள். அரசுப் பணம்தான் பல நூறு கோடி ரூபாய் அதற்காக செலவிடப்பட்டது. இது ஆட்சியில் இருந்ததால் நடந்தது. ஆட்சியில் இல்லாமல் இருந்தால், அந்தத் தேர்தலுக்கு இத்தனை கோடியை யார் செலவழிப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.

ஏற்கெனவே இந்தத் தேர்தலுக்கே யார் செலவழிப்பது என்பதில் பல பிரச்சினைகள் உருவாகிவிட்டன. ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்...பசும்பொன் தேவர் கழகத்தின் தலைவரும், முத்துராமலிங்கத் தேவரின் பேரனுமான ஜோதி முத்துராமலிங்கம், எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல தேர்தல்களிலும் அதிமுகவுக்குப் பணியாற்றியவர். ஓ.பன்னீரைச் சந்தித்து அம்மாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டார். கடைசியில் ஒரு வழியாக ஜெயலலிதாவைச் சந்தித்து சீட் கேட்டிருக்கிறார். ஆனால் அப்போது உண்மையிலேயே எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், ‘நீங்கள் சீக்கிரமே வந்திருக்கலாம்; இந்த முறை முடியாது; தேர்தல் முடிந்து நாம் ஆட்சிக்கு வந்ததும் ஒரு நல்ல பொறுப்பாகக் கொடுக்கிறேன்’ என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் ஆட்சியில் தொடர்ந்தும் அவருக்கு ஜெயலலிதாவைப் பார்க்கவோ, பதவியைப் பெறுவதற்கோ சூழல் அமையவில்லை. ஜெயலலிதா மறைந்த பின், அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவும் இல்லை.

இந்த முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன் கூட்டியே, துணை முதல்வர் பன்னீர் செல்வத்தைப் பார்த்து, ‘கண்டிப்பாக சீட் வாங்கிக்கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார் ஜோதி. அவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூப்பிட்டுப் போய் அறிமுகப்படுத்தி, பழைய கதைகளைச் சொல்லி, அவருக்கு சீட் கேட்டிருக்கிறார். பழனிசாமியும் உடனே ஒப்புக்கொண்டு, மதுரை மத்திய தொகுதியில் அவருக்கு சீட் கொடுத்து விட்டார். ஜோதியும் சந்தோஷமாகத்தான் களம் இறங்கினார். ஆனால் அங்கே போன பின்புதான் களம் மிகவும் கடுமையாக இருந்திருக்கிறது. அந்தத் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.,பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து வெல்வது அவ்வளவு சுலபமில்லை என்பதும், செலவு நிறையச் செய்தால் மட்டும்தான் ஜெயிக்க முடியுமென்பதும் அவருக்குத் தெரியவந்திருக்கிறது.

அந்த நேரத்தில்தான், அதிமுக வேட்பாளர்கள் பலருக்கும் தொகுதிக்கு 10 கோடி வீதம் தலைமையிடமிருந்து வந்ததாக அவருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. தனக்கும் வருமென்று நினைத்தார். வரவில்லை.

முதல்வர் பழனிசாமி, மதுரைக்குப் பரப்புரைக்குச் சென்றிருந்தபோது, அவரைச் சந்தித்து உதவி கேட்டிருக்கிறார். அப்போது அமைச்சர்கள் உதயகுமாரும், செல்லுார் ராஜூவும் முதல்வருடன் இருந்திருக்கிறார்கள். ஜோதி சொன்னதைக் கேட்ட முதல்வர் பழனிசாமி, ‘தம்பி! நான் வேட்பாளர்களுக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்து விட்டேன். வேறு எதுவும் உதவி செய்கிற நிலையில் இல்லை!’ என்று பட்டென்று கையை விரித்திருக்கிறார். ஜோதி விரக்தியோடு கிளம்பும்போது, பின்னால் வந்த உதயகுமார், ‘‘முதல்வர் சொல்லியிருக்கிறார். நான் கொஞ்சம் உதவி செய்கிறேன். ’’ என்று சொல்லியிருக்கிறார்.

அப்புறம்தான் பன்னீரைப் போய்ப் பார்த்திருக்கிறார் ஜோதி. அவரும் பழனிசாமியின் டயலாக்கை கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கிறார். ‘தம்பி! நான் கட்சிக்குக் கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்துட்டேன். ஆனால் என்னுடைய ரெக்கமண்டேஷனில் சீட் தரப்பட்டவர்கள் யாருக்கும் கட்சியிலிருந்து பணம் கொடுக்கவே இல்லை.’’ என்று பதிலுக்குப் புலம்பித் திருப்பி அனுப்பிவிட்டார்.

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் தியாகராஜன் பணம் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் ஜோதி, ஓட்டுக்கு 300 ரூபாய் வீதம் கொடுத்திருக்கிறார். இது கடைசி நேரத்தில், முதல்வர் தந்த பணம் என்கிறார்கள்.

பழனிசாமி, பன்னீர் இருவருமே ‘கட்சிக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டேன்’ என்று சொன்னாலும் உண்மையில் நடந்தது வேறு. தேர்தல் நிதி என்று ஒரு பெரும்தொகையைத் திரட்டியபோது, அதில் பெரும் பங்கைப் போடும் பொறுப்பை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர்தான் ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பன்னீர் தரப்பிலிருந்து எதுவும் வரவில்லையாம். அதற்குப் பிறகுதான், அவருடைய பங்கையும் முதல்வரும், இரண்டு மணிகளும் சேர்ந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவைப் பொறுத்து, அதிமுகவில் பல அதிரடிகள் அடுத்தடுத்து அணிவகுப்பதற்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது!’’ என்றார்.

பழனிசாமியும் பன்னீரும் இரட்டை இலையின் இரு இலைகளா...இணைய மறுக்கும் இரட்டைத்தலைகளா?

-பாலசிங்கம்

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

வியாழன் 8 ஏப் 2021