மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

எனக்கு 40; உனக்கு 35... கணக்கு போடும் கட்சிகள்! வாக்குப்பதிவு குறைந்ததால் வலுக்கும் சந்தேகம்!

எனக்கு 40; உனக்கு 35... கணக்கு போடும் கட்சிகள்! வாக்குப்பதிவு குறைந்ததால் வலுக்கும் சந்தேகம்!

சதவிகிதம் குறைந்தால் அரசுக்குச் சாதகம்; கூடினால் எதிர்ப்பு அலை என்று தேர்தல் வாக்குப்பதிவு குறித்து காலம் காலமாக ஒரு கணக்குச் சொல்லப்படுகிறது.

இந்தத் தேர்தலிலும் அதே விவாதங்கள் தொடர்கின்றன. இந்தியாவில் நேற்று பொதுத்தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில், மிகவும் குறைவான வாக்குப்பதிவு நடந்திருப்பது தமிழகத்தில்தான். பயங்கரவாதத் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் நிறைந்த அஸ்ஸாமில் 82.15 சதவிகித வாக்குகளும், கடுமையான கட்சி மோதல்கள் நடந்து வரும் மேற்கு வங்கத்தில் 77.68 சதவிகித வாக்குகளும், அண்டை மாநிலமான கேரளாவில் 73.58 சதவிகித வாக்குகளும், மினி தமிழகமாகக் கருதப்படும் புதுச்சேரியில் 78.03 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் வாக்குப்பதிவு 71.79 சதவிகிதம் மட்டுமே.

இது ஒன்றிரண்டு சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருக்கிறார். இதே அளவு சதவிகிதம் மற்ற மாநிலங்களிலும் அதிகரிக்கும். அப்போதும் மிகக்குறைவான வாக்குப்பதிவு நடந்த மாநிலமாகவே தமிழகம் இருக்கும் என்பதே நிஜம்.

இப்படி வாக்குப்பதிவு சதவிகிதம் ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து கொண்டே போவதற்கு பல காரணங்களை அலசுகிறார்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், அரசியல் விமர்சகர்களும். நேற்று நடந்த தேர்தலில் வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் வாக்குப்பதிவு அதிகரிக்கவில்லை. கடைசி ஒரு மணி நேரத்தை நீட்டித்தது, கொரோனா நோயாளிகளுக்காக என்று கூறியது தேர்தல் ஆணையம். ஆனால் நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 9 லட்சத்து 7,124 பேர், கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையிலும், இவர்களில் 10 சதவிகிதம் பேர் கூட நேற்று வாக்குகளைப் பதிவு செய்ய வரவில்லை. இதனால் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி பலனற்றுப் போனதாக தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் கூறினர். இவ்வாறு ஒரு மணி நேரத்தை நீட்டித்ததற்குப் பதிலாக அவர்களுக்கு தபால் வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்புகளை எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கலாம் என்றும் பல தரப்பிலும் பேசப்பட்டது.

வழக்கமாகவே வரிசையில் நின்று வாக்களிப்பதைக் கெளரவக் குறைச்சலாககக் கருதும் படித்த மேல் தட்டு மக்கள் வசிக்கும் நகர்ப்பகுதிகளில் வாக்குப்பதிவு குறையும். இந்த ஆண்டில் கொரோனா அச்சம் காரணமாக அந்த வகுப்புகளைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர், வாக்குச்சாவடிப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைந்து இருப்பது இந்தத் தகவல்களை கொஞ்சம் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இது மட்டுமே காரணமென்று சொல்லிவிட முடியவில்லை. ஏனெனில் இந்த ஆண்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் பல மடங்கு அதிகரித்திருந்தது. இதனால் எங்குமே பெரிய வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் யாருக்கும் எழவில்லை. கிராமங்களில் மட்டுமே வரிசைகளை நேற்று காணமுடிந்தது.

இந்தத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான கடும்போட்டி காரணமாக, தேர்தல் பரப்புரையின் போது மிக மோசமான வழிமுறைகளில் எதிரெதிர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் எங்கும் நேரடி மோதல்களோ, சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளோ எழவில்லை. அப்படி நடந்திருந்தால், அதன் காரணமாக வாக்குச்சாவடிக்கு மக்கள் வர அஞ்சுகிறார்கள் என்று கருதுவதற்கு வாய்ப்புண்டு. பரப்புரை நடந்த வரையிலும் மட்டுமின்றி, பணப்பட்டுவாடாவிலும், நேற்றைய வாக்குப்பதிவின்போதும் கூட எங்குமே இரண்டு கட்சியினருக்கும் இடையில் எங்குமே மோதல்கள் நிகழவில்லை. தொண்டாமுத்துார் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியின் காரைத் தாக்கி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதேபோல துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும், தேனி தொகுதி எம்.பி.,யுமான ரவீந்திரநாத்தின் காரும் தாக்கப்பட்டது. இவற்றைத் தவிர்த்து, வேறு எங்கும் பெரிதாக வன்முறையோ, பெரிய அளவிலான அசம்பாவிதங்களோ நடக்கவில்லை; பெரிய புகார்களும் எழவில்லை.

அப்படியிருந்தும் இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது. வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் அளவிற்கு, இறந்தவர்கள், இடம் மாறிச் சென்றவர்களின் பெயர்களை நீக்காத காரணத்தால், வாக்காளர் பட்டியலில் எண்ணிக்கை கூடியிருப்பதாகவும், அவர்கள் வாக்களிக்க வராததால்தான் வாக்குப்பதிவு குறைவாகக் காண்பிப்பதாகவும் அரசியல் கட்சியினர் ஒரு காரணத்தைக் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் பலரும் அதை மறுக்கின்றனர். இது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இருக்குமே தவிர, பெரும்பாலான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் ஆண்டுதோறும் திருத்தப்படுகின்றன என்று சொல்கிறார்கள் அவர்கள். இந்தத் தேர்தலில் எதிர்ப்பு அலை, ஆதரவு அலை என இரண்டுமே இல்லாமல் இயல்பான தேர்தலாக நடந்ததும் ஒரு காரணமென்று சொல்கிறார் பத்திரிகையாளர் கோலாகல சீனிவாஸ்.

பல தொகுதிகளில் அதிமுக மட்டுமே பணம் கொடுத்தது; திமுக தரவில்லை. அதிமுகவினரிடம் பணம் வாங்கிய பலரும் வாக்களிக்க வராததாலும் வாக்குப்பதிவு குறைந்திருப்பதாக அக்கட்சியினர் சொல்கின்றனர். இப்படியாக புதுசு புதுசாகவும், விதவிதமாகவும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

வாக்குப்பதிவு சதவிகிதத்தை வைத்து எப்போதுமே எல்லாக் கட்சியினரும் ஒரு கணக்குப் போட்டு, தங்களுக்கான சாதக, பாதகங்களை அலசுவது வாடிக்கையாகவுள்ளது. அதேபோல இப்போதும் மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும், நகர்ப்புறம், கிராமப்புறம் என்றும், ஆண்களின் வாக்குகள், பெண்களின் வாக்குகள் என்று பிரித்து மேய்ந்து ஒரு கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படிக் கணக்குப் போடுவது மே முதல் தேதி வரை தொடருமென்பது நிச்சயம்.

அதிமுக மாநில நிர்வாகியும் வேட்பாளருமான ஒருவர், ‘‘கடந்த தேர்தலில் பதிவான அதே அளவு வாக்குகள்தான் ஏறத்தாழ இந்த தேர்தலிலும் பதிவாகியிருக்கின்றன. அப்போது 70 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டதால் ஆளும்கட்சிக்கு எதிராக தேர்தல் முடிவு இருக்கும் என்று சொன்னார்கள். நாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தோம். இப்போதும் அதையே சொல்கிறார்கள். அதேபோல நாங்கள் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைப்போம். உண்மையைச் சொல்வதானால், அதிமுக சார்பில்தான் குறைந்தபட்சம் ஓட்டுக்கு 500, அதிகபட்சம் 4,000 ரூபாய் வரை மக்களுக்கு வாரி வழங்கப்பட்டிருக்கிறது. வாங்கியவர்கள் எல்லோரும் நிச்சயமாக அதிமுகவுக்கு வாக்களித்திருப்பார்கள். அதனால் இப்போது பதிவான வாக்குகளில் எங்கள் கட்சி வாக்கு வங்கியுடன் பணம் வாங்கியவர்களின் வாக்குகளும் சேர்ந்து, எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்புகிறோம்!’’ என்றார்.

திமுக தலைமைக்கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ள தகவல்கள், திமுக ஆட்சிக்கு வருவதை உறுதி செய்திருக்கின்றன. ஏதோ வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்ததால் ஆளும்கட்சிக்குச் சாதகமாக தேர்தல் முடிவுகள் வரும் என்பது போன்ற செய்தியைப் பரப்புவதில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர். அதிமுகவினர் மட்டும் பணம் கொடுத்தனர், திமுகவினர் பணத்தை அமுக்கிவிட்டனர் அல்லது குறைவாகக் கொடுத்தனர் என்று பல காரணங்களைச் சொல்லி, திமுக வெற்றிபெறாது என்று திட்டமிட்டுத் தகவல்களைப் பரப்புகின்றனர். ஒரு வேளை இப்படித் தகவல்களைப் பரப்பிவிட்டு, வேறு ஏதாவது முறைகேடான வழிமுறைகளில் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்களோ அல்லது செய்யப்போகிறார்களோ என்று யோசனை எழுகிறது. எங்களுக்குத் தெரிய, எத்தனை சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தாலும் அதில் பெரும்பான்மை வாக்குகள் திமுகவுக்கே விழுந்திருக்கும் என்பதுதான் எங்கள் நம்பிக்கை.’’ என்று கட்டை விரலைக் காட்டினார்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆயிரம் கணக்குப் போடலாம்... மக்களின் கணக்கு என்னவோ?

-பாலசிங்கம்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 7 ஏப் 2021