செக் மோசடி வழக்கில் அரசியல் சூழ்ச்சியா?: சரத்குமார்

செக் மோசடி வழக்கில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்ற கேள்விக்குச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பதிலளித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் காசோலை திரும்பிய வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சரத்குமார் தரப்பில் கோரப்பட்டதால் சிறை தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதே சமயம் நீதிமன்றத்தில் இன்று ராதிகா ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இவ்வழக்குத் தொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், “ஓராண்டு சிறை தண்டனை என்பதை எதிர்பார்க்கவில்லை. வழக்கு தள்ளுபடி ஆகும் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஜூன் 2019ல் தான் ஒப்பந்தமே முடிகிறது, எழுதித் தந்த தேதிக்கு முன்பே செக் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 2 கோடிக்கு வங்கி உத்தரவாதம் மற்றும் 4.5 கோடி மதிப்பிலான எனது சொத்து பத்திரத்தையும் உத்தரவாதமாகக் கொடுத்துள்ளேன். அதனால் எங்கள் தரப்பு நியாயங்களை நாங்கள் எடுத்துரைப்போம். மேலும் தண்டனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.
அதிமுகவிலிருந்து விலகியதால் இதில் அரசியல் சூழ்ச்சி எதுவும் கிடையாது. இதிலிருந்து நழுவ விரும்பவில்லை. பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது. இரு நாட்களுக்கு முன்பு ராதிகா கொரோனா தடுப்பூசி போட்டதால் அவருக்கு லேசான தலைவலி, காய்ச்சல் உள்ளது. அதனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை” என்று தெரிவித்தார்.
-பிரியா