மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

கன்னி வாக்காளர்களை கவர்ந்த சீமான், கமல்- ஏன்?

கன்னி வாக்காளர்களை கவர்ந்த சீமான், கமல்- ஏன்?

தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கிற கன்னிவாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 என்கிறது தேர்தல் ஆணையத்தின் கணக்கு. அதாவது 18-19 வயதை உடைய புதிய வாக்காளர்கள் ஆண்கள் 4,80,953 பேரும், பெண்கள் 4,16,423 பேரும் ஆவார்கள்.

வாக்குப் பதிவு முடிந்த நேற்று ஏப்ரல் 6 ஆம் தேதி மாலைக்குப் பிறகு தமிழகம் முழுதும் நாம் பரவலாக பேசிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பூத் ஏஜெண்ட்டுகளும் சரி, சில தேர்தல் அலுவலர்களும் சரி,.. “இந்த முதல் முறை வாக்காளர்கள்ல பெரும்பாலானோர் சீமானுக்கும், கமலுக்கும்தான் சார் போட்டிருக்காங்க” என்ற ஒரு அப்சர்வேஷனை நம்மிடம் தெரிவித்தனர்.

முதல் முறை வாக்களிக்கும் ஆண்களில் பலர் சீமானுக்கும், பெண்களில் கணிசமானோர் கமல்ஹாசனுக்கும் வாக்களித்திருப்பதாகவும் அதற்குள் இன்னொரு அப்சர்வேஷனும் பல்வேறு தரப்புகளில் பேசியபோது நமக்குக் கிடைத்தது.

இதுகுறித்து நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களிடம் பேசினோம்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், அம்பத்தூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளருமான அன்பு தென்னரசுவிடம் பேசினோம்.

“ முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆண், பெண் இருபாலருமே சீமானுக்குதான் வாக்களித்திருக்கிறார்கள். காரணம் சீமானின் பிரச்சாரத்தில் உண்மை இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளில் திமுக, அதிமுக இரு கட்சிகளுமே.... திமுகவின் தவறுகளை அதிமுகவும், அதிமுகவின் தவறுகளை திமுகவும் சொல்லித்தான் வாக்குகள் கேட்டன. ஆக இருவருமே இருவரும் செய்த தவறுகளை குற்றங்களை பிழைகளை பொதுவெளியில் வைத்துவிட்டார்கள். இத்தனை ஆண்டுகாலம் தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி இரு கட்சிகளுமே ஓட்டு கேட்கவில்லை. ஆக இருவரும் திருடர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இதை முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

நான் போட்டியிட்ட அம்பத்தூர் தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்கும் ஓர் இளைஞன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருக்கும் தன் தந்தையிடமும், தாயிடமும், ‘நீங்க இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில்தான் ஓட்டளிக்க வேண்டும்’என்று கேட்டிருக்கிறார். அதற்கான விளக்கம் சொல்லி தன் தாய் தந்தை இருவரையும் சீமானுக்கு வாக்களிக்க வைத்திருக்கிறார் அந்த இளைஞர். இது நான் கண்ணால் கண்ட உண்மை. அப்பா அம்மா சொல்லி பிள்ளைகள் வாக்களித்தது திராவிட கட்சிகளின் காலம். இப்போது பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி வாக்களிக்க வைப்பது நாம் தமிழரின் காலம்.

மற்ற கட்சிகளின் பிரச்சாரத்தில் ஒரு லாப நோக்கும் வர்த்தக வாடையும் அடிக்கும் நேரத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் அண்ணன் சீமானின் பரப்புரை ஒரு பல்கலைக் கழக பேராசிரியரைப் போல இளைஞர்களின் உள்ளங்களை ஈர்த்திருக்கின்றன. விவசாயத்தின் தேவை, விவசாயிகளின் நிலைமை, உணவில் நஞ்சு கலக்கும் இப்போதைய நிலைமை, சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அவசியம், இயற்கை வளங்களைக் காக்க வேண்டிய தேவை ஆகியவை பற்றி அண்ணன் சீமானின் பரப்புரை ஒவ்வொரு இளைஞரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. இதுதான் பெருவாரியான முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களை சீமானை நோக்கி ஈர்க்க வைத்திருக்கிறது. தனி நபர் வழிபாட்டில் சிக்கிக் கிடந்த அரசியலை தமிழ், தமிழ் தேசியம் என்ற தத்துவத்தை நோக்கி ஈர்க்க வைத்திருக்கிறார் சீமான். அதனால்தான் தமிழ்நாடெங்கும் முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் சீமானைத் தேடியிருக்கிறார்கள்”என்கிறார் அன்பு தென்னரசு.

இதேபோல முதல் தலைமுறை வாக்காளர்களில் கணிசமானோர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தாலூம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலும் தமிழகம் முழுவதிலும் இருந்தும் பரவலாக நமக்கு கிடைத்ததன் அடிப்படையில்...இதுகுறித்து திருச்சி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரும் வழக்கறிஞருமான கிஷோரிடம் பேசினோம்.

“2011, 2016 தேர்தல்களில் இளைஞர்கள், யாருக்கும் ஓட்டுப்போட வேண்டாமென்று நோட்டாவை நாடிய ஒரு போக்கு இருந்தது. ஆனால் இந்த 2021 தேர்தலில் நோட்டாவை தேடும் போக்கு குறைந்துவிட்டது. காரணம் திமுக, அதிமுகவுக்கு மாற்றான ஒரு அரசியலை கமல் முன்னெடுக்கிறார் என்பதால்தான்.

அந்தந்த பகுதிகளில் சமூக தன்னார்வலர்களாக செயல்பட்டு வந்தவர்களை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஆக்கியிருக்கிறது. அடிப்படை அறம் மிக்க வேட்பாளர்கள் மக்கள் நீதி மய்யத்தால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் சினிமாவில் நேர்மையாக வரி கட்டியவர். அதனால்தான் தன் சொத்து மதிப்பையும் அவரால் வெளிப்படையாக காட்டி நேர்மை என்ற முழக்கத்தை உரத்து முன் வைக்க முடிந்தது.

மேலும் கமல்ஹாசனின் தொலை நோக்குடன் கூடிய தேர்தல் அறிக்கைகள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக சென்றடைந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் மாற்றத்தை விரும்பும் அரசியலுக்காக மக்கள் நீதி மய்யத்தை நோக்கி வந்திருக்கிறார்கள். மாணவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்பதில் கமல் ஆரம்பத்தில் இருந்தே முனைப்பாக இருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்தே கல்லூரிகளுக்கு சென்று கமல் மாணவர்களை சந்திக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அரசே கமலின் கல்லூரி பயணங்களைத் தடை செய்தது. ஆனபோதும் கமல் கல்லூரி மாணவர்களை நோக்கி வேகமாக சென்று சேர்ந்திருக்கிறார் என்பது இந்த தேர்தலில் முதல் வாக்காளர்களில் பலர் மாற்ற வெளிச்சத்தை நோக்கி டார்ச் விளக்கை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதில் இருந்து தெரிகிறது” என்கிறார் கிஷோர்.

இளைஞர்கள் யார் பக்கம் என்பது மே 2 ஆம் தேதி முழுதாய் தெரிந்துவிடும்.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 7 ஏப் 2021