மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

வேட்பாளர்கள் மீது தாக்குதல் - வங்கத்தில் வன்முறைகள்; அசாமில் அமைதி!

வேட்பாளர்கள் மீது தாக்குதல் - வங்கத்தில் வன்முறைகள்; அசாமில் அமைதி!

மேற்குவங்க மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக 31 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற ஹௌரா, ஹூக்லி, தெற்கு 24 பர்கானாக்கள் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே புகார்கள் எழுந்தபடி இருந்தன. வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள், எதிர்ப்புப் போராட்டங்கள், வாக்குப்பதிவு மோசடி, வாக்காளர்களுக்கு மிரட்டல் என வாக்குப்பதிவு முடியும்வரை சம்பவங்கள் தொடர்ந்தன.

உலுபெரியா தொகுதியில் தேர்தல் அதிகாரியான தபன் சர்க்கார் என்பவர் தன் உறவினரான மம்தா கட்சி நிர்வாகியின் வீட்டில் இரவு தங்கினார். அப்போது மூன்று வாக்கு எந்திரங்களையும் இரண்டு வாக்குரசீது எந்திரங்களையும் அவர் கையோடு எடுத்துச்சென்றிருந்தார். அது பெரும் பிரச்னையாகி, அந்த எந்திரங்கள் கைப்பற்றப்பட்டு, பொதுப் பார்வையாளரின் கட்டுப்பாட்டில் தனியறையில் வைக்கப்பட்டன. அவர் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அலட்சியமாக இருந்த காரணத்தால் அவரோடு சேர்த்து மேலும் ஆறு பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆரம்பாக் தொகுதியில் பாஜகவினருக்கும் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குப்பதிவில் மோசடி செய்ததாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டனர்.

பாஜக எம்.பி.யான சௌமித்ரா கானின் முன்னாள் மனைவியும் திரிணமூல் கட்சியின் வேட்பாளருமான சுஜாதா கான் மொண்டலை பாஜகவினர் மூங்கில் தடியால் தாக்கியதில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டது. ஆரண்டி எனும் கிராமத்தில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் தங்கள் மீதான குற்றச்சாட்டை பாஜகவினர் மறுத்தனர்.

தங்கள் கட்சியின் முகவர்களை வாக்குச்சாவடிகளுக்குள் விடாமல் பாஜக குண்டர்கள் தடுத்தனர் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பிரச்னை எழுப்பினர். பதிலுக்கு பாஜக தரப்பிலோ, திரிணமூல் கட்சியின் குண்டர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் வாக்காளர்களை மிரட்டியதாகக் குற்றம்சாட்டினர்.

தெற்கு உலுபெரியா தொகுதியின் பாஜக வேட்பாளர் பப்பியா அதிகாரி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு தொண்டரைப் பார்க்கச்சென்றார். அப்போது, பாதுகாப்புப் படையினர் அவரையும் அவருடைய பாதுகாவலர்களையும் தாக்கியதாக பப்பியா குற்றம்சாட்டினார். விஷமிகள் சிலர் அவரை முற்றுகையிட்டு கழுத்துப் பகுதியில் தாக்கினர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வடக்கு உலுபெரியா தொகுதியில், திரிணமூல் கட்சியின் வேட்பாளர் நிர்மல் மாஜி என்பவர் மீதும் அவருடைய வாகனத்தின் மீது பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். பிரச்னை தொடர்ந்ததால் போலீசார் வந்து அவருக்கு தலைக்கவசம் அணியவைத்து அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பிவைத்துள்ளனர்.

கனாக்குல் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் நஜ்மல் கரிம் வாக்குச்சாவடிகளைப் பார்வையிடச் சென்றபோது, சுற்றிநின்று சத்தமிட்ட பாஜகவினர், அவரைத் தாக்கியுள்ளனர். மத்திய பாதுகாப்புப் படைகள் வந்து அவரை மீட்டுள்ளனர்.

பாஜக வேட்பாளர்கள் ஸ்வபந்தாஸ் குப்தா, தனுஸ்ரீ சக்ரவர்த்தி ஆகியோரும் இதேபோன்ற பிரச்னையை எதிர்கொண்டனர்.

பால்டா தொகுதியின் பாஜக வேட்பாளரின் வாகனம் அடித்துநொறுக்கப்பட்டது.

வேட்பாளர்களைத் தாக்கிய மூன்று தனித்தனியான சம்பவங்கள் தொடர்பாக, 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்; ஆரம்பாக்கில் திரிணமூல் வேட்பாளரைத் தாக்கிய 5 பேரும், கனாக்குலில் திரிணமூல் வேட்பாளரைத் தாக்கிய 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்; தெற்கு உலுபெரியாவில் பாஜக வேட்பாளரைத் தாக்கிய 2 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஆரிச் அப்டாப் கூறினார்.

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கண்டி கங்குலி போட்டியிடும் ரைடிகி தொகுதியில், முந்தைய நாளிலேயே வன்முறைகளும் பிரச்னைகளும் தொடங்கிவிட்டதாகவும் வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் செய்ததாகவும் அக்கட்சியினர் கூறினர்.

கிழக்கு கானிங் தொகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில், ஒருவர் காயமடைந்தார். மதபோதகர் அப்பாஸ் சித்திக்கியின் ஐ.எஸ்.எப். கட்சியினரே இதில் ஈடுபட்டதாக திரிணமூல் கட்சி வேட்பாளர் சௌகத் மொல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

தனேகாலி தொகுதியில் வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் பாஜக குண்டர்கள் தடுத்தனர் என்றும் மத்திய பாதுகாப்புப் படைகள் கையைக்கட்டிக்கொண்டு அதை வேடிக்கபார்த்ததாகவும் மாநில அமைச்சர் அசிமா பத்ரா குற்றம்சாட்டினார்.

அசாமில் அமைதி

மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக அசாமில் 12 மாவட்டங்களுக்கு உள்பட்ட 40 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. ஆங்காங்கே ஏற்பட்ட சிறுசிறு பிரச்னைகளைத் தவிர்த்து, அங்கு வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்துமுடிந்தது.

மேற்கு பிலாசிபாரா தொகுதியில் பாதுகாப்புப் படையினர் முகக்கவசங்களை விநியோகித்தபோது அவர்களை ஒரு கும்பல் தாக்கியதாகவும் பதிலுக்கு அவர்கள் தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. போங்கைகோவான் எனும் இடத்திலும் பெரும் கூட்டம் வாக்களிக்க வந்தபோது தள்ளுமுள்ளு ஏற்படவே தடியடி நடத்தப்பட்டது. திகால்ட்டரி எனும் இடத்தில் இரண்டு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது; அங்கும் தடியடி நடத்தப்பட்டது. அசாமில் முதலிரண்டு கட்டங்களைப் போலவே வாக்காளர்கள் தனி நபர் இடைவெளிவிட்டு வாக்களித்தனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் முறை வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளும் மூத்த குடிமக்களுக்கு அசாமின் பாரம்பரிய தலைப்பாகைகளும் வழங்கப்பட்டன.

இளமுருகு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 7 ஏப் 2021