மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

புதுச்சேரி தேர்தல்: ஒரு பார்வை!

புதுச்சேரி தேர்தல்:  ஒரு பார்வை!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 81.64 சதவிகித வாக்குப்பதிவைக் கொடுத்து, மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையைச் சிறப்பாகச் செலுத்தியுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பீடும்போது இந்த ஆண்டு வாக்கு சதவிகிதம் 2.44 குறைந்துள்ளது.

தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று ஒரே கட்டமாகவும், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மூன்றாம் கட்டமாகவும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 10.04 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண்கள் 5.31 லட்சம் பேரும், ஆண்கள் 4.72 லட்சம் பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 116. இதில் 11,915 பேர் மாற்றுத்திறனாளிகள். 80 வயதுக்கு மேல் 17,041பேரும், புதிய வாக்காளர்கள் 31,864 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

தேர்தலுக்காக 30 தொகுதிகளில் 635 இடங்களில் 1,558 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், 23 வாக்குச்சாவடி மையங்கள் மகளிர் மட்டுமே அதிகாரிகளாக, அலுவலர்களாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

1558 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1677 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள். 1,558 வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்கள், பயன்படுத்தப்பட்டன.

தேர்தல் பணியில் 2,833 பெண்கள் உள்பட 6,835 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் 2,420 போலீஸாரும், 901 ஐஆர்பிஎன் காவலர்களும், 1,490 ஊர்காவல் படையினரும், துணை ராணுவப் படையினர் 40 குழுக்கள் என மொத்தம் 8,000 பேர் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் முடிக்க பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதுமட்டுமில்லாமல், தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு, வாழை மர தோரணம் கட்டப்பட்டு, சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு சுப நிகழ்வு வீட்டுக்கு வருவோரை போல் வரவேற்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று (ஏப்ரல் 6) நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக ஒரு அணியாகவும் போட்டியிட்டன.

இந்த நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தேர்தல் தொடங்கிய காலை நேரத்திலேயே புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, அப்பா பைத்தியம் சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவர் திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியில் 220 பேர், காரைக்கால் 247 பேர், மாஹே 25 பேர் என மொத்தம் 492 கொரோனா நோயாளிகள் வாக்களித்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நிலவரம்

புதுச்சேரி மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.63% வாக்குகள் பதிவாகின.

காலை 11 மணி நிலவரப்படி 20.07% வாக்குகள் பதிவாகின.

முற்பகல் 11:30 மணி நிலவரப்படி 35.75% வாக்குப்பதிவு பதிவானது.

புதுசேரியில் மதியம் 1.30 மணி நிலவரப்படி 53.30 சதவீத வாக்குப்பதிவானது. அதில், காரைக்காலில் 52.14 சதவீதம், மாஹே 44.28 சதவீதம், ஏனம் 54.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

புதுச்சேரி மாநிலத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.11% வாக்குகள் பதிவாகின.

மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக ஏனாமில் 85.76% வாக்குப்பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குகள் பதிவாகின.

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் மொத்தமாக 81.64 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி - 81.91 %

காரைக்கால் - 80.08%

மாஹே - 73.53%

ஏனாம் - 90.72 %

ஓப்பீடு

கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரியில், காங்கிரஸ் கூட்டணி, என்.ஆர். காங்கிரஸ். தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

2016ஆம் ஆண்டில் 84.08 சதவிகித வாக்குப்பதிவுகள் பதிவாகின. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 2.44 சதவிகித வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டில் 86.19 சதவிகித வாக்குப் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

4 நிமிட வாசிப்பு

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

4 நிமிட வாசிப்பு

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

புதன் 7 ஏப் 2021