மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

தேர்தல் நடக்கும்போதே பணப்பட்டுவாடா, தங்கக்காசு விநியோகம்!

தேர்தல் நடக்கும்போதே பணப்பட்டுவாடா, தங்கக்காசு விநியோகம்!

கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர், வாக்காளர்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன்களை வழங்குவதாகக் கூறி, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோர் இன்று (ஏப்ரல் 6) மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், பாஜக சார்பில், அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

முக்கியப் பிரமுகர்கள் இத்தொகுதியில் போட்டியிடுவதால், கோவை தெற்கு நட்சத்திரத் தொகுதியாக விளங்குகிறது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுவென நடந்து வரும் நிலையில், வைசியாள் வீதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே பாஜகவினர், வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகளுடன், வீட்டு உபயோகப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன்களை விநியோகிப்பதாகப் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அங்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோஷமிட்டார்.

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த கோவை தெற்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் வகாப்பும் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் மயூரா ஜெயக்குமாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கக் காசு

அதுபோன்று, நாமக்கல் கோட்டை சாலையில் வாக்காளர்களுக்குத் தங்கக் காசு அளிப்பதற்கான டோக்கன் வழங்க திமுகவினர் முயன்றதாகப் புகார் வந்துள்ளது.

நாமக்கல் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் நாமக்கல் கோட்டை சாலையில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்குத் தங்கக்காசு வழங்குவதற்கான டோக்கன் வழங்க திமுகவினர் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவினர் வழங்கிய தங்கக்காசு வழங்குவதற்கான டோக்கன்களை அதிமுகவினர் பறிமுதல் செய்து தெருக்களில் கிழித்து எறிந்து வீசி சென்றனர்

டோக்கன்களை கிழித்து எறிந்து வீசியதை திமுகவினர் தடுத்ததால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் தகவலறிந்து வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

பணம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர். இதனால் இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களிடம் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பது உடன் பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற திமுகவினர் அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக நிர்வாகி அணைக்கரை பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதன் காரணமாக அதிமுக திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அலுவலர்கள் மாரியப்பனிடம் சோதனையிட்டனர். அப்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது குறித்து எழுதி வைத்திருந்த பேப்பரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் தேனி அருகே பெரியகுளம் தனி தொகுதிக்கு உட்பட்ட அன்னஞ்சியில், வாக்குச்சாவடி பிரிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் பொது மக்கள் வாக்களிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னஞ்சி, மேலத்தெருவை சேர்ந்த பொதுமக்கள், அதே பகுதியில் உள்ள கள்ளர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து வந்தனர். தற்போது நடைபெறும் தேர்தலில், இந்த வாக்குச் சாவடி, அதே ஊரில் இந்திரா நகர் காலனியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்னஞ்சி, மேலத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்கச் செல்ல மறுத்து, சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் போலீஸார் அங்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

-சக்தி பரமசிவன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 6 ஏப் 2021