மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

விஜய் ஓட்டுப் போட சைக்கிளில் வர காரணம் ?

விஜய் ஓட்டுப் போட சைக்கிளில் வர காரணம் ?

சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து நடிகர் விஜய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று முழு வீச்சுடன் நடந்து வருகிறது. இந்தமுறை யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார் என்பதற்கான முடிவு இன்று மக்களால் பதிவு செய்யப்பட்டுவிடும். அடுத்த மாதம் மே 2 ஆம் தேதி அதற்கான பதிலும் கிடைத்துவிடும்.

இந்நிலையில், அரசியல் தலைவர்களில் துவங்கி நடிகர்கள் வரை அனைத்துப் பிரபலங்களும் அதிகாலை முதலே ஓட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

பொதுவாக, அதிகாலையிலேயே பிரபலங்கள் ஓட்டுப் போட்டுவிடுவதற்கும் காரணம் இருக்கிறது. காலை 7 மணிக்கே ஓட்டுப் போட சென்றால் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும். மக்களுக்கு நடிகர்களால் சிக்கலும் நிகழாமல் இருக்கும். காலை முதல் ஆளாக ரஜினிகாந்த் ஓட்டுப் போட்டார். தொடர்ந்து, திருவான்மியூர் ஓட்டுச் சாவடியில் நடிகர் அஜித்தும் அவரின் மனைவி ஷாலினியும் தங்களுடைய ஓட்டினைப் பதிவு செய்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் முழுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் ஓட்டுப் பதிவு நடந்துவருகிறது. இந்நிலையில், நீலாங்கரை ஓட்டுச் சாவடியில் ஓட்டுப் போட விஜய் சைக்கிளில் வந்தார். 22 ஆயிரம் விலை மதிப்பு கொண்ட Montra மெட்டல் நியான் ரெட் மாடல் சைக்கிளில், முகத்தில் முக கவசத்துடன் ஓட்டுப் போட வந்தார். அவருக்கு பின் இரு சக்கர வாகனங்கள் அணி வகுத்தன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான சர்க்கார் படத்தின் இடம்பெறும் ‘ஒரு விரல் புரட்சியே’ பாடல் காட்சிகளைப் போல ஓட்டுப் போட கிளம்பினார். விஜய் சைக்கிளில் வந்த விஷயம் தெரிந்ததும் அருகிலுள்ள ஏரியாவிலிருக்கும் விஜய் ரசிகர்களும் ஆதரவு தெரிவிக்க விஜய்யை சந்திக்க வந்துவிட கூட்டமும் அதிகரித்தது. வாக்குச்சாவடியிலும் கூட்டம் அதிகரித்ததால், ரசிகர் ஒருவரின் பைக்கில் ஏறி கிளம்பினார்.

இந்நிலையில், ஏன் விஜய் சைக்கிளில் வந்தார் என்கிற கேள்வியும் எழுந்தது. பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென எகிறிவிட்டது. சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லாத ஒன்றாக எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மாற வாய்ப்பிருக்கிறது. இதை உணர்த்துவதற்காக சைக்கிளில் வந்தார் என்று கூறப்பட்டது. இதுமட்டுமின்றி, இணையத்தில் பல்வேறு யூகத்தின் அடிப்படையில் பல கருத்துக்களை இணையவாசிகள் முன்வைத்து வந்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்து நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓ ரியாஸ் கூறும்போது, "விஜய் சைக்கிளில் வந்ததற்கு ஒரே காரணம்தான். அது, அவர் வீட்டுக்கு பின்புறம் உள்ள தெருவில் பூத் இருந்ததாலும், அந்த தெரு சந்து சிறியதாக இருப்பதால் காரை நிறுத்த முடியாது என்பதாலும் சைக்கிளில் வந்தார். இதை தவிர வேறு எந்த காரணமும் கிடையாது. ஊடகங்கள் இதை தவறாக சித்தரிக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்

- ஆதினி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

செவ்வாய் 6 ஏப் 2021