மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

ஓட்டுப்போட்ட பிரபலங்கள்!

ஓட்டுப்போட்ட  பிரபலங்கள்!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கினாலும் காலை 6 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.

வேலூர் திருத்தணி காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க பொதுமக்கள் பலரும் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ தமிழகம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்றார்

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவருடன் வந்து சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிளாரென்ஸ் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்கினைப் பதிவு செய்தார்.

போடி சட்டசபை தொகுதி வேட்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞரின் நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்திய பிறகு, எஸ்ஐஇடி கல்லூரிக்கு வந்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மே 2ஆம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும். அமைதியாகவும் ஆர்வத்துடனும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தியும் அல்ல அதிருப்தியும் அல்ல. தோல்வி பயம் காரணமாகத் தேர்தலை நிறுத்த அதிமுகவினர் முயன்றனர். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது” என்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது மகள், ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராவுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே, காலை 7 மணிக்கே, நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

சென்னை நீலாங்கரையிலுள்ள தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள வாக்குச்சாவடிக்குச் சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்.

பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் அவர் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய பிறகு சைக்கிளில் வீடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்ததால், ரசிகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் நடிகர் விஜய் வீடு திரும்பினார்.

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜீத்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்களித்தனர். முதல் ஆளாக வாக்களிக்க காலையிலேயே இருவரும் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அஜித் வருகையையொட்டி அவரைக் காண அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். சிலர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். போலீசார் ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டனர்.

நடிகர் சூர்யா, கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் ஆகியோர் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினரோடு வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.

சக்தி பரமசிவன், பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 6 ஏப் 2021