மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

வாக்களிக்கச் செல்லும்முன்... கவனத்துக்குச் சில குறிப்புகள்!

வாக்களிக்கச் செல்லும்முன்... கவனத்துக்குச் சில குறிப்புகள்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் தொடங்கிவிட்டது. வாக்குப்பதிவு இனிதே நடைபெற வேண்டும் என்றால், வாக்கு எந்திரங்கள் சரியாகச் செயல்படுவது மட்டுமல்ல, வாக்காளர்களும் உரிய முறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் அல்லவா?

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு இரவு 7 மணிவரை நடைபெறும் என இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் 11 அடையாள ஆவணங்களில் ஒன்று அவசியமானது.

அந்த ஆவணங்கள்:

ஆதார் அட்டை, ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி அட்டை, வங்கி / அஞ்சலகப் படத்துடன்கூடிய கணக்குப்புத்தகம், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமானவரி நிரந்தரக் கணக்கு எண் (பான்)அட்டை, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் கீழ் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மைய, மாநில அரசுப் பணியாளர் அடையாள அட்டை, நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர் அட்டை ஆகியவை.

* முகக்கவசம் அணிந்துகொண்டுதான் செல்ல வேண்டும். (அணியாதவர்களுக்கு தரப்படும் என கூறியிருக்கிறார்களே என ரொம்பவும் சிந்திக்காமல், முகக்கவசம் இந்தக் கொரோனாவிலிருந்து நமக்கும் சுற்றியிருப்போருக்கும் பாதுகாப்பு தருவது என்பதை மனதில் வையுங்கள்.)

* தனிநபர் இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும்.

* வாக்குச்சாவடியில் நான்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள். அவர்களில் முதல் அலுவரிடம் உங்கள் வாக்காளர் தகவல்சீட்டில் உள்ள பெயர் முதலிய தகவல்களைக் கூற வேண்டும். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியல் புத்தகத்தில் இருந்தால், அதை உரக்கச் சொல்வார். சாவடியில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களும் உங்கள் பெயர் சரியானதுதானா என சரிபார்ப்பார்கள். அதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத யாரும் இருந்தால் அவர்களில் ஒருவரோ ஒன்றுக்கும் மேற்பட்டவர்களோ எதிர்ப்பு தெரிவித்து, குறிப்பிட்ட நபரை வாக்களிக்கவிடாமல் வெளியே அனுப்பிவிடுவார்கள். (கள்ள ஓட்டு போடுவதைத் தடுப்பதற்கான ஆரம்ப கால ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.)

* பட்டியலில் உள்ளபடியே நீங்கள் சரியான வாக்காளர்தான் என்பதில் சிக்கல் இல்லை என்றால், முதல் அலுவலர் உங்கள் பெயரை டிக் செய்துவிட்டு, அடுத்த அலுவலரின் இடத்துக்கு அனுப்பிவைப்பார்.

* இரண்டாவது அலுவலரின் இடத்தில் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைப்பார். பின்னர், ஒரு சீட்டைக் கொடுத்துவிட்டு, பதிவேடு ஒன்றில் உங்களின் கையொப்பம் அல்லது கையெழுத்தைப் பெற்றுக்கொள்வார்.

* மூன்றாவது அலுவலரிடம் அந்த சீட்டைத் தர வேண்டும். அதை அவர் வாங்கிக்கொண்டு, உங்களின் விரலில் மை இருக்கிறதா, இல்லையா என்பதை பார்த்துவிட்டு, உங்களை வாக்களிக்க அனுமதிப்பார். இப்போது கொரோனா காலம் என்பதால் வாக்குப் பதிவுக்காக வலது கைக்கு உறையை அவர் வழங்குவார். (அல்லது முன்கூட்டியே தன்னார்வலர்கள் மூலம் விநியோகிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.)

* அடுத்து, நான்காம் அலுவலரிடம் செல்ல வேண்டும். வாக்குப்பெட்டி இருக்குமிடத்துக்கு செல்லும் முன் வாக்களிப்பதற்கு வசதியாக எந்திரத்தை தயாராக வைத்திருப்பார்.

நிறைவாக, அட்டைத் தடுப்புக்குள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எந்திரத்தில், நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வேட்பாளாருக்கு நேராக இருக்கும் நீலநிறப் பொத்தானை, கையுறை அணிந்துகொண்டு அழுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அருகில் வைக்கப்பட்டிருக்கும் வி.வி.பேட் எனும் வாக்கு ரசீது இயந்திரத்தில், பீப் ஒலியுடன் சிவப்பு விளக்கு எரியும். அத்துடன், யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை அந்த விவிபேட் வாக்கு ரசீது எந்திரம் அச்சடித்துக் காட்டும். 7 நொடிகளுக்குள் அதை நாம் பார்த்துவிட வேண்டும். அதற்கு மேல் அடுத்த வாக்காளருக்கான நேரம் வந்துவிடும்..

ஆம், எதற்கும் நேரம்காலம் உண்டு அல்லவா?

அந்த ஏழு நொடிகளுக்குள் தாராளமாக யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் பார்த்துவிடமுடியும். ஒரே நிபந்தனை, எந்த எந்திரக் கோளாறும் ஏற்படாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

உங்களின் ஜனநாயகக் கடமைகளில் ஒன்று, சுபமாக முடிந்துவிட்டது!

கொரோனாவுக்காகத் தரப்பட்ட கையுறையை மறக்காமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு இல்லம் திரும்பலாம்.

அடுத்து?

மே 2ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டியதுதான்!

-இளமுருகு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 6 ஏப் 2021