மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

தேர்தல் திருவிழா இன்று நிறைவு: கடைசி நேரம் வரை தொடர்ந்த நாடகங்கள்!

தேர்தல் திருவிழா இன்று நிறைவு: கடைசி நேரம் வரை தொடர்ந்த நாடகங்கள்!

இவ்வளவு பரபரப்பான, கடுமையான, சவால்கள் நிறைந்த தேர்தலை என்று சொல்வதை விட, இவ்வளவு கேவலமான நாடகங்கள் நடந்த தேர்தலை தமிழகம் இதுவரை சந்தித்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அண்ணா–காமராசர், கருணாநிதி–எம்.ஜி.ஆர், கருணாநிதி–ஜெயலலிதா என்று துருவ அரசியலில் ஊறித்திளைத்த திராவிட பூமி தமிழகம். இந்தத் தேர்தலில் ஸ்டாலின்–எடப்பாடி பழனிசாமி என்ற இரண்டு புதுமுகங்களுக்கு எதிரான துருவ அரசியல் அறிமுகம் செய்யப்பட்டது. இருவருமே அரசியலிலும், அதிகாரத்திலும் அனுபவங்களைப் பெற்றவர்களாயினும், தனியாக தேர்தலை எதிர்கொண்டது முதல்முறையாக இப்போதுதான். இருவருக்குமான வேற்றுமைகளை விட பொது ஒற்றுமைகளும் பல உண்டு.

ஸ்டாலின் கட்சியின் தலைவர் பதவியை எட்டுவதற்கும், முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கும் நீண்ட நெடிய போராட்டங்களைக் கடந்து வந்தவர். எடப்பாடி பழனிசாமியும் ஊராட்சித் தலைவர், எம்.எல்.ஏ, அமைச்சர் என பல படிகளைக் கடந்து வந்தவர்தான் என்றாலும், முதல்வர் பதவி என்பது அவருக்குக் காலம் என்கிற யானை திடீரென போட்டு விட்ட மாலை. ஸ்டாலினுக்கு இன்னும் அதற்காக யுத்த களத்தில் நின்று போராட வேண்டியிருக்கிறது.

இதுபோல இருவருக்குமிடையே பல வேற்றுமைகள் இருந்தாலும், முதல்வர் வேட்பாளராக நிற்பது, தேர்தல் வியூகத்துக்கான முழுப்பொறுப்பையும் தோளில் சுமப்பது என இருவரும் முதல்முறையாக களம் காண்பதில் ஒன்றுபட்டு நின்றார்கள். அதேபோல இந்தத் தேர்தலில் உடன்பிறப்புகளை மட்டுமே நம்பி ஸ்டாலின் களம் இறங்கவில்லை; அவர் ‘ஐபேக்’கை நம்பினார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களை நம்பவில்லை. அவருக்கு ஆலோசனை சொல்வதற்கு சுனில், எழில், மிதுன், சத்யா என ஒரு பெரும் கூட்டமே களத்தில் இறங்கிக் கலக்கியது.

இருவருமே வியூகங்களை விட விளம்பரங்களை அதிகம் நம்பினர். அதற்கு பலனும் கிடைத்தது.

அதிமுகவின் ‘வெற்றிநடை போடும் தமிழகமே’ விளம்பரம், ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வெளுத்து வாங்கியது என்றால், ‘ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப்போறாரு’ பாட்டு பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. அதிமுக சார்பில் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தரப்பட்டன. யூடியூப் சேனல்கள், இணையதள ஊடகங்கள் என எங்கெங்கு காணினும் இரட்டை இலைச்சின்னம் விளம்பரம் நிரம்பி வழிந்தது. போட்டியாக அதிமுக செய்தியைப் பார்ப்பதற்கு முன்னும் உதயசூரியன் விளம்பரம் உதிக்க வைத்தது திமுக. இப்படியான போட்டிகள், இந்தத் தேர்தலை மிகக்கடுமையாக மாற்றின. இருவருக்கும் சேர்ந்த, ப்ளஸ் சேர்க்கப்பட்ட கூட்டமும், வரவேற்பும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தன. இப்படியாக ஒரு வாரத்துக்கு முன்பு வரையிலும், பாரம்பரியமான தேர்தல் வியூகங்களின்றி புதிய பாணி மோதல் நீடித்தது.

ஆனால் கருத்துக்கணிப்புகள் பல வெளியாகி, திமுகவுக்கு ஆதரவாக முடிவுகளை அறிவித்த பின், அதிமுக தரப்பில் ஓர் ஆக்ரோஷம் வெளிப்பட்டது. அதன் அணுகுமுறையில் மாற்றங்கள் உண்டாயின. அதற்கேற்ப ஆ.ராசா பேசிய சில வார்த்தைகள் கிடைக்க, அதை வெட்டியும் ஒட்டியும் போட்டு, லட்சக்கணக்கில் அதைப் பரப்பி, முதல்வரின் தாயைப் பழித்துவிட்டதாகக் கூறி, போராட்டங்களை அதிமுக முன்னெடுத்தது. அதை தகவல் தொழில்நுட்பரீதியாக உடனடியாக எதிர்கொண்டு முறியடிக்கத் தவறியது திமுக. முதல்வர் பழனிசாமி, பரப்புரையில் கண்ணீர் விட்டார். போராட்டங்கள் பெரிதானதும் ஆ.ராசாவை மன்னிப்பு கேட்க வைத்தது திமுக தலைமை. அதற்குப் பின்னும் அதே விஷயத்தை பிரதமரும், முதல்வரும் விடாமல் பேசியது, அதிமுக அந்த விவகாரத்தில் அரசியல்தான் செய்கிறது என்ற விமர்சனத்தைக் கிளப்பியது.

அதற்குப் பின், ‘தூத்துக்குடியில் 13 பேரைக் கொன்றபோது வராத அழுகை, அப்பாவையும் மகனையும் லாக்கப்பில் கொன்றபோது வழியாத கண்ணீர், பொள்ளாச்சியில் அத்தனை இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது ஏற்படாத துயரம், ஆ.ராசா உருவகமாகச் சொன்ன வார்த்தைகளால் வந்தது எப்படி’ என்று சமூக ஊடகங்களில் சடுகுடு ஆடினார்கள் நெட்டிசன்கள். அடுத்த நாளில் இருந்து அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டார்கள்.

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ வெளியீட்டாளர் சந்திரசேகரன், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் திமுக சார்பில் நிற்கும் வேட்பாளர்களை ஆடுகளாக உருவகப்படுத்தி, ‘நீ அனுப்புன 10 ஆடுகளையும் வெட்டி பிரியாணி போட்டு அனுப்பவில்லை என்றால் வேலுமணியை யாருன்னு கேளு’ என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒருமையில் சவால் விட்டார். அந்த வீடியோ வைரலாகப் பரவ, அவர் மீது புகார் கொடுத்தது திமுக வழக்கறிஞர் அணி. கொலை மிரட்டல் உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடுத்தது காவல்துறை. அவர் தெம்பாக தெருவுக்குத் தெரு பரப்புரை செய்து கொண்டிருந்தார்.

நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட அனிதா, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதைப் போல அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட, அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனிதாவின் சகோதரர் புகார் கொடுக்க, ‘அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. யாரோ போட்டுவிட்டார்கள்’ என்று தடியைக் கீழே போட்டு, அந்தப் பதிவை நீக்கினார் மாஃபா.

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் இருந்த சசிகலா, இளவரசியின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அதிமுக அரசு அதைத் திட்டமிட்டே நீக்கிவிட்டதாக அதகளம் செய்தார்கள் அமமுகவினர். அதை நினைவு இல்லமாக மாற்றிவிட்டதால் அங்கிருந்த பெயர்கள் அனைத்தையும் நீக்கி விட்டதாக விளக்கம் சொன்னது மாநகராட்சி நிர்வாகம்.

எல்லாவற்றையும் மிஞ்சியது, தமிழகத்தின் முக்கிய நாளிதழ்களில் முதல் நான்கு பக்கங்கள் வெளியிடப்பட்ட அதிமுக விளம்பரம். திமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறி, பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போலவே செய்திகளை உருவாக்கி, நான்கு பக்கங்களுக்கு ‘விளம்பரம்’ என்ற அடிக்கோடு எதுவுமே இல்லாமல் அந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அது ஸ்டாலினை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கியது. ஏற்கெனவே தன் மகளின் வீட்டில் நடந்த ஐடி ரெய்டால் ஆவேசத்தில் இருந்த ஸ்டாலின், இந்த விளம்பரங்களைப் பார்த்து கொதித்துக் கொந்தளித்து கோபத்தைப் பரப்புரையில் வெளிப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக கம்யூ., தலைவர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும், ‘இது இதழியல் அறமில்லை’ என்று தங்களுடைய அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினர்.

உச்சமாக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், ‘இதனால் பெரிய தாக்கம் ஏற்படாது’ என்றார். ஆளும்கட்சிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகளை வெளியிட ஊடகங்கள் மிரட்டப்பட்டதாகவும் அவர் கூறியது, அரசியல் அரங்கில் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இப்படி மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பல அரசியல் சீன்களைத் தாண்டி, ஒவ்வொரு தொகுதியிலும் சின்னச்சின்ன நாடகங்களை அரங்கேற்றி, எதிராளியை வீழ்த்துவதற்கான வேலைகள் எக்கச்சக்கமாக நடந்தன. அதிலும் கொங்கு மண்டலம்தான் அதிகமான சங்கு முழங்கியது. கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் பையா என்கிற கிருஷ்ணன், 69 வயதுக்காரர். அவர் வாக்குக் கேட்டுச் சென்றபோது, கல்லூரி மாணவி ஒருவரிடம் ‘நீ எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடுவ’ என்று கேட்க, அந்த மாணவி, ‘உதய சூரியனுக்குதான் ஓட்டுப் போடுவேன்’ என்று சொல்ல, அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தார் கிருஷ்ணன். அதை வீடியோ எடுத்து ஆபாசம் என்று அற்புதமாக திரைக்கதை எழுதி, அலைபேசியில் அலைய விட்டது அதிமுக ஐடி அணி. அதற்கு அவர் ‘அடப்பாவிகளா! அது என் பேத்தி மாதிரிடா’ என்று புலம்பித்தவித்தார்.

அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொகுதியில், இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமாகவுள்ளன. அவற்றை மொத்தமாக வாங்குவதற்காக இரண்டு கூட்டணிக் கட்சியினரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் பரப்புரை முடியும் நாளில் கரும்புக்கடை பகுதியில் திமுக பரப்புரை செய்து கொண்டிருந்த இடத்துக்கு வேலுமணியும் போக, அங்கே மோதல் ஏற்பட்டது. அதில் இஸ்லாமியப் பெண்கள் தாக்கப்பட்டதாக வேலுமணி கொந்தளித்தார். பெண்களின் கம்மல்களைப் பறித்துள்ளனர் என்று ஆவேசமாக அங்கு பேசினார். அதன்பின் அந்த பெண்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களை அங்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இது தொடர்பான படங்களும், அமைச்சர் வேலுமணியின் பேச்சும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரப்பப்பட்டது.

அவை வெளியான சில மணி நேரங்களிலேயே கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்னொரு வீடியோவை வெளியிட்டனர். அதில் பர்தா அணிந்திருந்த ஒரு இஸ்லாமியப் பெண் ஒருவர், கூட்டத்துக்கு நடுவே நின்று கொண்டு தன் காதணிகளைக் கழற்றிக் கொண்டிருந்தார். அதே பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவருடைய கம்மலைத்தான் பறித்துவிட்டதாக வேலுமணி பேசுகிறார் என்று கூறி ‘இது வேலுமணியின் திட்டமிட்ட நாடகம்’ என்று மானத்தை வாங்கியிருந்தார்கள். ஏற்கெனவே தொண்டாமுத்துாரில் ஸ்டாலின் மக்கள் கிராம சபை நடத்தும்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் போல ஒருவரை அனுப்பி கேள்வி கேட்க வைத்து, அவரை திமுகவினர் தாக்கிவிட்டதாக வேலுமணி பேட்டி கொடுத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவர் அதிமுக நிர்வாகி என்பதற்கான ஆதாரங்களும் வேலுமணியுடன் நிற்கும் புகைப்படங்களும் திமுக ஐடி விங்க் ஆட்களால் பரப்பப்பட்டன. அதேபோல இந்த நாடகத்தையும் அரங்கேற்றப் பார்த்து அதில் தோற்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.

இதற்கிடையில், டிவிக்களில் பிரேக்கிங் நியூஸ் வந்ததைப் போல எக்கச்சக்கமான பொய்யான ஸ்கிரீன் ஷாட்கள் உருவாக்கப்பட்டு நுாற்றுக்கணக்கில் பரப்பப்பட்டன. தேர்தல் கமிஷன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யும் வாய்ப்புள்ளதால், இயந்திரம் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க முதலில் இரட்டை இலைச் சின்னத்தை அழுத்திப்பாருங்கள். சரியாக இருந்தால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்’ என்று ஸ்டாலின் பேசியதாக ஓர் அபத்தச் செய்தி இப்படி பரப்பப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே அதே போன்று எடப்பாடி பழனிசாமி, ‘முதலில் உதயசூரியன் சின்னத்தை அழுத்திப் பாருங்கள்’ என்று சொன்னதுபோல மற்றொரு போலி புகைப்படம் உலா வரத்துவங்கியது. இதனால் மக்கள் எதைத்தான் நம்புவதோ என்று குழம்பித் தவித்தார்கள்.

இவை அனைத்தையும் விட, ‘அங்கே ஒரு கோடி பதுக்கல், இங்கே பணம் மூட்டை மூட்டையாக வைத்திருக்கிறார்கள்’ என்று பொய்யான புகார்கள் பறந்து கொண்டேயிருந்தன. இதனால் பறக்கும் படை அதிகாரிகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அலையாய் அலைந்து எதையும் பிடிக்க முடியாமல் நொந்து போயினர். இன்று வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், கடந்த 25 நாட்களில் தமிழகத்தில் திமுக பிரமுகர்கள் 33 பேருடைய வீடுகளில் ரெய்டு நடந்திருந்தது. நேற்று இரவு, கோவை முன்னாள் மேயரும், சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவருமான ராஜ்குமாரின் வீட்டில் இதேபோல ரெய்டு நடந்தது. அங்கே ஒன்றுமே எடுக்கப்படவில்லை. வந்தவர்கள் ஒரு மணி நேர சோதனைக்குப் பின் ‘சாரி’ சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்.

நேற்று இரவு இன்னுமொரு பரபரப்பு நாடகம் அரங்கேறியது. ஸ்டாலின் நிற்கும் கொளத்துார் தொகுதி உட்பட 6 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை மனு கொடுத்தது. அதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. வாக்குப்பதிவு நாளான இன்று இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சமும் பதற்றமும் தமிழக மக்களிடையே இருக்கிறது.

எல்லா நாடகங்களும் முடிந்து இன்று திரை மூடப்படுகிறது. க்ளைமாக்ஸ் மட்டும் மே 2 அன்று!

–பாலசிங்கம்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

செவ்வாய் 6 ஏப் 2021