மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும்: அதிமுக புகார்!

5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும்: அதிமுக புகார்!

திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உட்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தான் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதாகத் தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக, அரசியல் கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீது புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபுமுருகவேலுடன் கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்து திமுகவுக்கு எதிராக மனு கொடுத்திருக்கிறார்.

அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை ஆகிய 5 தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகவும், எனவே இந்த தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் புகார் கொடுத்திருக்கிறார்.

அதில், எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அவருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து 25 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது முழுக்க முழுக்க வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் நேரடியாகக் கொடுக்கப்படுவதுடன், கூகுள் பே வலைதளம் வழியாகவும் பணம் நவீன முறையில் கொடுக்கப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “வாக்காளர்களுக்குப் பணம் தரும் கலாச்சாரம் தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. முதல் முறையாகத் திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது. திருமங்கலம் பார்முலாப்படி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஒரு சில தலைவர்களை அந்தக் கட்சி வெற்றி பெற வைக்கிறது. அவர்கள் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் சரி, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகதான் வெற்றி பெறும். அதில் மாறுபட்ட கருத்து கிடையாது.

கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளிலும் திமுகவால் பணம் விநியோகிக்கப்படுகிறது. திமுகவினர் நவீன முறையில் ஊழல் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற்று, கூகுள் பே மூலம் பணம் போடுகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுக்களையும் அழைத்து குழுவுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் பணம் விநியோகித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்த கேலிக்கூத்துதான் நடக்கிறது.

இந்த 5 தொகுதிகளில் பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். 2ஜி பணத்தை வைத்து செயற்கையான முறையில் வெற்றி பெற முயல்கின்றனர். எனவே இந்த 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறி பிரச்சாரம் , கருத்துக்கணிப்புகளை வெளியிடுகிறது. எனவே அந்த தொலைக்காட்சியைத் தடை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

இந்த சூழலில் தமிழகத்தில் 5- 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 5 ஏப் 2021