மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: ஸ்டாலின்

எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: ஸ்டாலின்

மழை பெய்து ஓய்ந்தது போல, தமிழகத்தில் நேற்று மாலை 7 மணிக்குப் பிரச்சார அலை ஓய்ந்தது. நாளை, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 4) சென்னையில் பிரச்சாரம் செய்தார். இறுதியாகத் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் - நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “தமிழுக்குப் பெருமையும் - தமிழினத்துக்கு உரிமையும் - தமிழ்நாட்டுக்குச் செழுமையும் உருவாக்க 1949ஆம் ஆண்டு "திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற உரிமைப் பேரியக்கத்தை ‘காஞ்சி தந்த வள்ளுவன்’ பேரறிஞர் அண்ணா உருவாக்கினார்.

18 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் எல்லாத் தெருக்களிலும் தன்னுடைய கன்னித்தமிழால் கழகம் வளர்த்தார், பேரறிஞர் அண்ணா. வீறு கொண்ட போராட்டங்கள் மூலமாகக் கழகத்தை உயிர்த்தெழச் செய்தார். அவருடைய தமிழாலும் - போராட்டங்களாலும் 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்தோம். காலம் நமக்கு வழங்கிய கொடையான பேரறிஞர் பெருந்தகையை, அதே காலம் தன்னிடம் விரைந்து எடுத்துக் கொண்டது.

அடுத்து தலைவர் கலைஞர் வந்தார் . அண்ணனுக்குத் தம்பியாக - உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பாக, தலைவர்களுக்கெல்லாம் தலைவராக, முதலமைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சராகக் கழகத்தை நடத்தினார். அரியணையில் அமர்த்தினார். அண்ணாவின் பேரியக்கத்தை நான்கு முறை ஆட்சியில் அமர வைத்தார். இன்றைக்கு நாம் காணுகிற நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி, கலைஞர். தமிழ்நாட்டின் நகரங்கள், கிராமங்கள் என எங்குச் சென்றாலும் கலைஞர் உருவாக்கிய திட்டங்கள்தான் கண்ணில்படும்” என்றார்.

மேலும், “திருவாரூர் வீதிகளில் சின்னஞ்சிறு சிறுவனாக, கால் சட்டை அணிகிற பருவத்தில், தமிழ்க் கொடியோடு புறப்பட்ட தலைவர் கலைஞர், கோட்டை கொத்தளத்தில் இந்திய நாட்டின் தேசியக் கொடியை அதிக முறை ஏற்றிய தமிழ்நாட்டு முதலமைச்சர். அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவரும் அவர்தான். அவர் கோட்டையில் கொடி ஏற்றிய காலமெல்லாம், தமிழ்க்கொடி ஏறியது. தமிழன் கொடி ஏற்றினான். அவர் மறையும்போது முதலமைச்சராக இல்லை என்பதுதான், நமக்கெல்லாம் இருக்கின்ற வருத்தம்.

திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது என்கின்ற லட்சியத்தை நிறைவேற்றி விட்டேன் என்று தலைவர் கலைஞரிடம் காட்ட நினைத்தேன். ஆனால், முதுமை காரணமாக அவர் முந்திக் கொண்டார். அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் காட்டுவதற்கான நாள்தான், ஏப்ரல் 6.

14 வயதில் நான் பொதுவாழ்வுக்கு வந்ததிலிருந்து எனக்கு உழைக்கக் கற்றுக் கொடுத்தார் கலைஞர். போராட்டம் நடத்தக் கற்றுக் கொடுத்தார். அஞ்சாமல் சிறைக்குச் செல்லக் கற்றுக் கொடுத்தார். சித்ரவதைக்குப் பயப்படக் கூடாது என்று கற்றுக் கொடுத்தார். மக்கள் எப்போது பாதிக்கப்பட்டாலும், உடனே சென்று அவர்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். மக்களாகிய உங்களுடைய வாழ்விலும் தாழ்விலும் - சுகத்திலும் துக்கத்திலும், உங்களில் ஒருவனாக இருக்கக் கற்றுக் கொடுத்தார்.

புயலா? மழையா? வெள்ளமா? நிலச்சரிவா? எங்கே மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்தாலும் முதல் ஆளாக நான் சென்றிருக்கிறேன்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை இந்தப் பழனிசாமி அரசாங்கம் துடிக்கத்துடிக்கக் கொன்ற போதும் உடனடியாக நான் சென்றேன். அந்தக் கலவர பூமிக்குச் சென்றேன். நீட் தேர்வு காரணமாக தங்களுடைய மருத்துவக் கல்லூரிக் கனவு சிதைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவச் செல்வங்களின் வீடுகளுக்குச் சென்றேன். அ.தி.மு.கவினர் வைத்த பேனர்களால் விபத்துக்கு உள்ளாகி இறந்து போன மாணவி வீட்டுக்கு உடனடியாகச் சென்று உதவி செய்தேன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீதியில் இறங்கி கையெழுத்து வாங்கினேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தினேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகப் போராடினோம். காவிரி உரிமை மீட்புக்காக நடைப்பயணம் சென்றோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு உதவி செய்தேன்” எனக் குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் நீளுகிற உதவிக்கரம் என்னுடையதுதான். அந்த அடிப்படையில், இறுதிக்கட்டப் பரப்புரையில், வாக்காளப் பெருமக்களிடம் அன்போடும், உரிமையோடும், பணிவோடும் கேட்கிறேன். தமிழ்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் உழைக்க நான் காத்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்காக நல்ல பல திட்டங்களை நான் வைத்திருக்கிறேன். அந்தத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்” என்று மக்களிடம் வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.

“தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக, நிர்வாகம் என்கின்ற ஒன்றே இல்லை. 2011-ஆம் ஆண்டு வெற்றி பெற்று வந்த ஜெயலலிதா, தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க எடுத்த முயற்சிகளில் தோல்வியைத் தழுவி, நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று, சிறைக்குப் போய் பதவியை இழந்தார். அவர் சிறைக்குப் போன காரணத்தால முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், அரசு நிர்வாகத்தை முடக்கி வைத்தார். சிறையில் இருந்து திரும்பி வந்த ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார். 2016-இல் இறந்து போனார். இப்படி முதல் ஐந்தாண்டுக் காலம் போனது. அதன்பிறகு, அ.தி.மு.க.வின் கோஷ்டிச் சண்டையால் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பழனிசாமியும் - பதவியைக் கைப்பற்றப் பன்னீர்செல்வமும் நடத்திய நாடகங்களினால், அடுத்த ஐந்தாண்டுக் காலம் போனது.

இதுதான் கடந்த பத்தாண்டுக்கால தமிழக ஆட்சியின் சுருக்கம். இதைத்தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகம் அடைந்த அத்தனை பின்னடைவுகளையும் சரி செய்தாக வேண்டும். தமிழகத்தைக் கூறுபோட்டு விற்க நினைக்கும் பா.ஜ.க.வுக்குப் பக்கத் துணையா, அடிமையாக இருக்கிறது பழனிசாமி அரசு.

எனவே. இந்த இரண்டு சுயநலச் சக்திகளிடமிருந்தும் கோட்டையை மீட்டாக வேண்டிய போர்தான், இந்தத் தேர்தல், தமிழகத்தை மீட்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தி.மு.க.விடம் உள்ளது. நான் உறுதியளிக்கிறேன் - இந்தப் பேரழிவில் இருந்து தமிழகத்தை நான் மீட்டெடுப்பேன். பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்குச் சமம். வெற்றி பெறும் ஒன்றிரண்டு அ.தி.மு.க.வினரையும் மிரட்டி பா.ஜ.க.வில் சேர்த்து விடுவார்கள்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற நிகழ்வின் மூலமாக தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று, மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டு, அதனை எழுதி வாங்கி இருக்கிறேன். இதுவரை பல லட்சம் பேர் மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள். மக்களுடைய கோரிக்கைகளை 100 நாள்களில் நிறைவேற்றிக் காட்ட என்னால் முடியும் என்று வாக்குறுதி அளித்தார் ஸ்டாலின்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

திங்கள் 5 ஏப் 2021