}ஓட்டுகளைப் பிரிப்பது மக்கள்விரோதம் – சி.பி.எம்.

politics

”மக்கள்விரோத அரசியல்சாசனவிரோத மத்திய ஆளும் பாஜகவையும் அதைத் தாங்கிப்பிடிக்கும் அதிமுகவையும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிக்கவேண்டும்; இதற்காக ஒன்றாக நிற்காமல் தனித்தனியாகப் போட்டியிடுவது மக்கள்நலனுக்கு விரோதமானது.” என்று சி.பி.ஐ.-எம். கட்சி வாக்காளர்களுக்கு தன்னுடைய அறைகூவலாக முன்வைத்திருக்கிறது.

பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் அணிக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என ஒவ்வொரு கட்சியும் வாக்காளர்களின் முன்னால், காரணகாரிய விளக்கத்தை அளித்துவருகின்றன. சிபிஐ-எம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய, மாநில அரசாட்சிகள் எப்படி இருக்கின்றன எனத் தொடங்கியுள்ள அந்த அறிக்கையில்,

” மாநிலத்தில் இந்த தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அரசியலிலும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். பாஜக – அதிமுக கூட்டணியை தமிழகத்திலும் வீழ்த்துவதோடு, தமிழகத்தில் பாசிச குணம் கொண்டுள்ள பாஜகவிற்கு இடம் கிடையாது என்பதை உறுதிசெய்ய வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்துவரும் அதிமுக ஆட்சி, மக்கள்விரோத, விவசாயிகள்விரோத நடவடிக்கைகளால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக மக்களின் எதிரியாகவே மாறிவிட்ட ஒரு ஆட்சியாகும்.” என்றும்,

”அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது. சிறு-குறு தொழில்கள் முடங்கியுள்ளன. விவசாயம், வர்த்தகம் உள்பட்ட அனைத்து துறைகளும் ஸ்தம்பித்துள்ளன. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாக மாறியுள்ளது. சிறு-குறு தொழில் முனைவோர், விவசாயிகள், கைவினைஞர்கள் கடன்வலையில் சிக்கி தற்கொலையில் மாண்டுவருகின்றனர். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி படிப்பு பறிக்கப்பட்டுவிட்டது.” என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், “ பெண்கள் – குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. பொள்ளாச்சியில் இளம் பெண்கள் அதிமுக பிரமுகர்களால் சீரழிக்கப்பட்டுள்ளனர். சாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமைக் கொடுமைகள், ஆணவப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து அடித்தே படுகொலை செய்யப்பட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.” என சமூகப் பாதுகாப்பு மோசமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

” அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பூதியம் பெறுபவர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், செவிலியர்கள் என அனைத்து துறை ஊழியர்களின் பிரச்னைகளும் தீர்க்கப்படவில்லை. அரசின் அவலங்களுக்கு எதிராகப் போராடிய எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், சமூக அக்கறையுள்ள ஆர்வலர்கள் ஆகியோர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள், அடக்குமுறை, கைது, சிறை, வழக்குகள் என அதிமுக அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. ஜனநாயக உரிமைகள் அனுதினமும் பறிக்கப்பட்டுகிறது.” என்றும் குறைகளாகவும் குற்றங்களாகவும் பட்டியலிட்டிருக்கிறது, சிபிஐ-எம்.

மக்கள் பிரச்னைகளுக்கு ஒரு துளி அளவுகூட அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை எனக் குறைகூறியுள்ளதுடன், ”அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பணியமர்த்தல், பணிமாறுதல், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை உள்பட்ட அனைத்து துறைகளிலும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு லஞ்சம் – ஊழல் பெருக்கெடுத்துள்ளது. முதலமைச்சர் உள்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.” என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

”மாநில சுயாட்சி உள்பட பல்வேறு விழுமியங்களை பேசிக்கொண்டிருந்த அதிமுக, இந்தக் காலகட்டத்தில் மத்திய மோடி அரசிடம் முற்றாக சரணாகதி அடைந்து விட்டது. கிட்டத்தட்ட மத்திய பாஜக அரசின் ஓர் அடிமை அரசாகவே அதிமுக அரசு மாறிவிட்டது. நீட் தேர்வு, இந்தி – சமஸ்கிரும் திணிப்பு, சிறுபான்மை மக்களை பாதிக்கக் கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், பொதுத் துறைகள் தனியாருக்கு தாரைவார்ப்பு, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்,டி.வரி விதிப்பு மூலம் சிறு-குறு தொழில்கள் பாதிப்பு, 8 வழிச் சாலை, வேளாண்விரோத சட்டங்கள், மின்சார சட்டத்திருத்த மசோதா உள்பட்ட மக்கள்விரோத, கார்ப்பரேட்மயக் கொள்கைகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் கொடிய திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் துணைபோனதன் மூலம் ஒட்டுமொத்த தேச மக்களுக்கும் விரோதியாக மாறி இருக்கிறது, அதிமுக.”” என விமர்சனம் செய்திருக்கும் சிபிஐ-எம் கட்சி,

”ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் கடனாளி மாநிலமாக தமிழகம் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது” என்றும், ஆனால், இவற்றில் எதையும் சரிசெய்யும் திட்டமோ திராணியோ அதிமுக அரசுக்கு இல்லை என்றும் சாடியுள்ளது.

” தமிழகத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சாதி, மத அடிப்படையில் அணி சேர்க்கும் பாஜகவின் முயற்சி மிகவும் ஆபத்தானது. மத்திய பாஜக அரசின் கொடிய மதவெறித் திட்டங்களுக்கும், மாநிலங்களையும் பிராந்திய அரசியல் கட்சிகளையும் கபளீகரம் செய்கிறது. ஒற்றை ஆதிக்க எதேச்சதிகார ஆட்சியை நிறுவத் துடிக்கிறது. இந்த அரசியல்சாசனவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவுகட்டுவதை உறுதிசெய்யக்கூடியது, இந்தத் தேர்தல். தமிழக நலன் காக்கவும், அதிமுக-பாஜக கூட்டணி மறுசிந்தனையின்றி வீழ்த்தப்படவேண்டியது காலத்தின் கட்டளை. இதைச் சீர்குலைக்கும் வகையில் சில கட்சிகளும், சிலர் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிடுவது வேதனையானதாகும். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாஜக – அதிமுக கூட்டணியின் எதிர்ப்பு வாக்குகளை, இவர்கள் பிரிப்பது மக்கள்நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, வீழ்த்தப்படவேண்டிய பாஜக- அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக சேவகம் செய்வதாகவே அமையும்.” என்றும்,

” தேசிய அளவில் இன்றைக்கு பாஜகவை பின்னுக்குத் தள்ளவேண்டும்; அதை நிறைவேற்றும் சக்தி திமுக, சிபிஎம் உள்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிடம் மட்டுமே உள்ளது. தமிழக வாக்காளர்களும், இளம் தலைமுறை வாக்காளர்களும் இதை மனதில்கொள்ளவேண்டும். நாம் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் நமது குழந்தைகள்-சகோதரிகள்-இளைஞர்கள்-விவசாயிகள்-தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான வாக்கு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.” என்று கே.பாலகிருஷ்ணன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

**- இளமுருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *