மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

பஜ்ஜி கடை வைத்துகூட பிழைக்கமுடியாது : ராமதாஸ்

பஜ்ஜி கடை வைத்துகூட பிழைக்கமுடியாது : ராமதாஸ்

அதிமுக அணிக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், பல கெடுதல்கள்தான் நடக்கும் என்றும் பிரியாணி, பஜ்ஜி, தேனீர் கடைகள் வைத்துகூட ஏழைமக்கள் பிழைக்க முடியாது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளர்.

அந்த அறிக்கை விவரம்:

” தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதற்கான இந்தத் தேர்தல், மிகவும் முக்கியமானது. மகாபாரத புராணத்தைப் போன்று நன்மையை வீழ்த்த பெருந்தீமை துடித்துக்கொண்டு இருப்பதே, இதற்குக் காரணம். பரப்புரை முடிவடைந்தது முதல் வாக்களிப்பது வரையிலான காலம், விலைமதிப்பில்லாத நம் வாக்கை யாருக்கு அளிப்பதென, தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தீர்மானிப்பதற்கான சிந்தனைக்காலம் ஆகும்.

வாழ்க்கையில் தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில்தான் அனைத்தையும் நாம் தேர்வுசெய்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறவர்கள் யார்? என்பதையும் அவர்களின் தகுதி, திறமை மட்டுமின்றி, கடந்த கால வரலாற்றையும் ஆய்வுசெய்துதான் வாக்களிக்கவேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் நிம்மதியாக வாழமுடியும்.

அதிமுக அரசு செய்தவை

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மக்களுக்கு வாழ்வாதாரம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தொழில் வளம் பெருகியிருக்கிறது. கொரோனா காலத்திலும்கூட தமிழகத்திற்கு ரூ.1.50 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கிறது. புயல் மழையால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு வழக்கத்தைவிட கூடுதல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள், 6 பவுன் வரையிலான நகைக்கடன்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

சமூக நீதியை நிலைநிறுத்த வன்னியருக்கு 10.50% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு - அவினாசி திட்டம் உள்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகை ஆகிய மாவட்டங்களைப் பிரித்து, 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது என அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

அதிமுக வாக்குறுதிகள்

தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும் அதிமுக - பாமக கூட்டணி தயாரித்து உள்ளது. அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,500 உதவி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், அனைத்து வீடுகளுக்கும் வாஷிங் மெஷின் இலவசம், இலவச கேபிள் டிவி இணைப்பு, வீடு தேடிச்சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டம், ஆட்டோ வாங்க ரூ.25,000 மானியம், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்பட்ட பல வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன.

நான் என்னென்ன செய்வேன்?

* புதிய ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களுக்கும் பிற சாதிகளுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டநிலையில் உள்ள அனைத்து சமுதாயங்களும் உரிய உள் இட ஒதுக்கீடு கிடைப்பதையும் கண்டிப்பாக உறுதி செய்வேன்.

* அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் (ஜாக்டோ ஜியோ), காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர், சத்துணவுப் பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள், நியாயவிலைக்கடை ஊழியர்கள், சர்க்கரை ஆலைப் பணியாளர்கள், கிராமப்புற ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சரிடம் நேரில் பேசி நிறைவேற்றச் செய்வேன்.

* மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிற கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னவாகும்?

நிலப்பறிப்பு, கொலை - கொள்ளை உள்பட்ட குற்றச்செயல்கள் அதிகரிக்கும், வன்முறை தலைவிரித்தாடும், ஒரு குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் திரைப்படத் துறையிலோ, ஊடகத் துறையிலோ தாக்குபிடிக்கமுடியாது, பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது, பிரியாணி, பஜ்ஜி, தேனீர் கடைகள் வைத்துகூட ஏழைமக்கள் பிழைக்க முடியாது என்பன போன்ற சீரழிவுச் செயல்கள்தான் அதிகரிக்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் தமிழ்நாடு வாழ்வதற்கு உகந்த மாநிலமாக இருக்காது. இப்படி ஒரு நிலை உருவாவதை நல்லவர்கள் எவரும் விரும்பவே மாட்டார்கள்.

எனவே, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வெற்றிநடை போடுவதை உறுதிசெய்ய, அதிமுக, பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்; அதன்மூலம் தமிழகத்தில் நல்லாட்சி தொடரச்செய்ய வேண்டும்.” என்று ராமதாஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

ஞாயிறு 4 ஏப் 2021