மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

அரசியலுக்குத் தடையா... நடிப்பதை நிறுத்திவிடுவேன்: கமல்

அரசியலுக்குத் தடையா... நடிப்பதை நிறுத்திவிடுவேன்: கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். அதோடு கோவை தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

தேர்தலையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக தன்னுடைய தொகுதியில் முகாமிட்டு, மக்களைச் சந்தித்து வந்தார். இந்நிலையில் இன்று கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி மாநில முதன்மை துணைப் பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் மற்றும் நடிகை சுகாஷினி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தித்தனர்.

அப்போது பேசிய கமல், “எங்களுக்கு என்று தனி ஊடகம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறோம். எதிர்க்கட்சி ஊடகங்களைக்கூட நாங்கள் சாதகமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. மாறாக இதில் எந்த சூழ்ச்சியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நான் அரசியலுக்கு எதற்கு வந்தேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், வரலாறு என்னை இங்குக் கொண்டு வந்தது. என் வேலை உண்டு, என் வரி உண்டு எனது கலை உண்டு என்றிருந்தேன். எனது தேவை அரசியலுக்கு வேண்டுமா என யோசித்துப் பார்க்காமலிருந்தது என்னுடைய தவறுதான். அதே தவறைப் பலரும் செய்திருக்கிறார்கள். அரசியல் வருகையை முன்பாகவே செய்திருக்க வேண்டும் என உணரும் வேளையில், தற்போதாவது செய்தேனே என்பதை நினைத்து மகிழ்கிறேன்.

ஒரு சினிமா நடிகர் மீண்டும் நடிக்கச் சென்றுவிடுவார் என என்னைப்பற்றிப் பேசினார்கள். தற்போது என் அலுவலகம், வீடு எல்லாவற்றையும், கட்சிக்காகக் கொடுத்துவிட்டு, ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். பரமக்குடியில் உள்ள எனது தந்தை வீட்டில் கதவுக் கூட இல்லை. அப்படிப்பட்ட இடத்தில் தான் பிறந்தேன்.

எனக்கு அரசியலில் மிரட்டல்கள் எல்லாம் வந்தது. உயிருக்குப் பயப்படவில்லை நான். எஞ்சிய நாள் மக்களுக்காகத் தான். அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், சினிமாவில் நடிக்கிறேன் என்றால், அது எனது தொழில். பிறர் தயவில் வாழக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து எனது வேலையைச் செய்வேன். சினிமா எனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருந்தால், அது நிறுத்தப்படும். தற்போது ஒப்புகொண்ட படங்களை முடித்துவிட்டு, அடுத்த படத்துக்குச் சொல்வதைப் பற்றி ஆலோசிப்பேன்.

இது தவறு என்று சொல்கிறவர்களுக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ என்ற பட்டத்துடன் பல படங்களைச் செய்திருக்கிறார். அரசியல் போரை தொடுப்பதற்கு அவருக்கு அந்த பணம் தேவையாக இருந்தது. எனக்கும் அந்த தேவை இருக்கிறது.

எனது தொகுதியில் வாழும் மக்களைப் பார்த்த போது, இந்த அரசு இவர்களைத் தொடர்ந்து ஏழ்மையில் வைத்திருக்கிறது என்பது தெரியவந்தது. எனவே இந்த அரசு அகற்றப்படவேண்டும். என்னுடைய முகவரி விரைவில், கோவைக்கு மாறும். என்னுடைய சக வேட்பாளர் சொல்வது போல், நான் காணாமல் போய்விடுவேன் என்பது நிஜமல்ல. யார் காணாமல் போவார்கள் என்பதை விரைவில் மக்கள் சொல்வார்கள்” என்றார் கமல்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 4 ஏப் 2021