மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

கலைஞரின் பிரச்சாரத்தை நினைவுகூர்ந்த ஸ்டாலின்

கலைஞரின் பிரச்சாரத்தை நினைவுகூர்ந்த ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் சேப்பாக்கத்தில் போட்டியிடும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “தம்பி உதயநிதிக்கு நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இப்போது என் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் நான் முதன் முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோது தலைவர் கலைஞர் எனக்காக ஓட்டு கேட்டார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

அப்போது, ‘தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். கடைசியாக ஆயிரம் விளக்கு தொகுதியில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இங்கு இருக்கக் கூடிய மக்கள் ஊர் ஊராக போய் ஓட்டு கேட்கிற நீங்கள், உங்கள் பிள்ளைக்கு ஓட்டு கேட்கமாட்டீர்களா? என்று கேட்டு விடக்கூடாது என்பதற்காக ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்’ என்று கலைஞர் கூறினார் . அதே மாதிரிதான் நானும் தமிழ்நாடு முழுவதும் ஓட்டு கேட்டு விட்டேன்.

உதயநிதி சொல்லும்போது கூட, நீங்கள் மற்ற தொகுதியைப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என்று இரு நாட்களுக்கு முன்பு சொன்னார். இங்கு வெற்றி உறுதியாகி விட்டது என்றார்.

நீ அப்படிச் சொல்லலாம். ஆனால் இந்த தொகுதியில் மக்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். நிச்சயமாக நான் வந்து ஓட்டு கேட்பேன் என்று கூறினேன். அதன்படி இன்று வந்திருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இந்த தொகுதிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு. கலைஞர் இந்த தொகுதியில் 3 முறை நின்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதே போல் பேராசிரியர் அன்பழகன் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.

எனவே இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தொகுதியில் கலைஞரின் பேரனும், என்னுடைய மகனுமான உதயநிதியை சிறப்பான முறையில் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தற்போது கருத்துக் கணிப்புகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கணிப்புகளைப் பொறுத்தவரைக்கும் நாம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்வது வழக்கமல்ல. எனவே நாம் நம்முடைய பணிகளைத்தான் செய்ய வேண்டும். அதைத்தான் கலைஞர் நமக்குத் தொடர்ந்து சொல்லித் தந்துள்ளார்.

அதேசமயத்தில் இந்த கருத்துக் கணிப்புகள் ஆளும் கட்சிக்கு பயத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த அச்சம், தோல்வி பயத்தின் காரணமாக ஏதேதோ உளற ஆரம்பித்துள்ளனர். 10 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. ஆனால் நம் மீது நில அபகரிப்பு, ஊழல் செய்திருக்கிறோம் என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்கின்றனர்.

ஆனால், ஜெயலலிதாவின் பதவி போனது, அவர் சிறைக்குப் போன கதையெல்லாம் தெரியும். எனவே ஒரு ஆட்சியில் முதலமைச்சர்களாக இருக்கக் கூடியவர்கள் டான்சி வழக்கில் சிறைக்குப் போன வரலாறுதான் அதிமுகவின் வரலாறு” என்று தெரிவித்தார்

மேலும், “அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வருகிற 6ஆம் தேதி மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, துறைமுகம், ஆர்.கே.நகர் பெரம்பூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

ஞாயிறு 4 ஏப் 2021