மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

சிறப்புக் கட்டுரை : இந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?

சிறப்புக் கட்டுரை : இந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?

ராஜன் குறை

திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் துவங்கி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இரண்டு திராவிட கட்சிகளின் இருதுருவ அரசியல் என்பதே தமிழக அரசியலை நிர்ணயிப்பதாகவும், அதன் வழியாக இந்திய அரசியலிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், நிகழ்வுப் போக்குகளை தீர்மானிப்பதாகவும் இருந்து வந்துள்ளது. இதன் ஒருமுனையில் 1969 முதல் தி.மு.க-வினை தலைமையேற்று நடத்திய கலைஞர் 2018-ஆம் ஆண்டு மறைந்தார். எதிர்முனையில் எம்.ஜி.ஆர் 1987-ஆம் ஆண்டே மறைந்தாலும், அவரால் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆக்கப்பட்டு, பலரால் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று எண்ணப்பட்ட ஜெயலலிதா கட்சிப் பொறுப்பேற்று இரு துருவ அரசியலை தொடர்ந்தார். ஆனால் அவரும் 2016-ஆம் ஆண்டு மறைந்தார். ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மறைந்தது ஒரு சகாப்தத்தை நிறைவு செய்தது.

இந்த சூழ்நிலையில் பார்ப்பனீய கருத்தியல் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரு நயவஞ்சக கருத்தை உருவாக்கியது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமையை வியந்தோதுவது நயமான கருத்தாகத் தெரியும். அதன் பின்னால் உள்ள வஞ்சகம் என்னவென்றால் அவர்கள் மறைவுடன் திராவிட கருத்தியலுக்கே முடிவு கட்டிவிட வேண்டும் என்ற விழைவு, ஆசை. இந்த விழைவும், ஆசையும் திராவிட கருத்தியல் கடுமையாக எதிர்த்து ஓரம் கட்டிய பார்ப்பனீய சக்திகளுக்கு எழுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி இந்திய ஒன்றியத்தில் ஆட்சியமைத்தது பாப்பனீய சக்திகளின் விழைவுக்கு, திராவிட கருத்தியலை வீழ்த்தவேண்டும் என்ற ஆசைக்கு பெரிதும் ஊக்கமளித்தது. தி.மு.க-வை பொருத்தவரை கலைஞருக்குப் பிறகு ஏற்கனவே செயல்தலைவராக இருந்த அவர் மகன் ஸ்டாலின் தலைமைப் பொறுப்பேற்றுவிட்டார். அங்கே எந்த குழப்பமும் விளைவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அ.இ.அ.தி.மு.க-வில் குழப்பங்களை தோற்றுவிக்க பார்ப்பனீய சக்திகளுக்கு அருமையான வாய்ப்பு தென்பட்டது. இதன் நுட்பத்தை புரிந்துகொள்ள நாம் இந்த அரசியல் கட்சிகள் என்பவை எப்படி கட்டப்பட்டவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் இடம்

அரசியல் கட்சி என்பது ஒரு கட்டடம் போல. கிளைகள், ஒன்றியம் அல்லது வட்டம், மாவட்டம் என்று பல தளங்களாக கட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றிலிருந்து பொதுக்குழு, செயற்குழு என்று தேர்ந்தெடுக்கப்படவேண்டும். கட்சியின் தலைவர், பொதுச்செயலர் என்பவர்களை தேர்ந்தெடுப்பது அவர்களது வெகுஜன ஈர்ப்பின் அடிப்படையில் போட்டியின்றி நிகழ்ந்தாலும் கட்சி அமைப்பு என்பது ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகர்புற வார்டுகளிலும் சரியாக வேர்பிடித்து நிற்க வேண்டும். தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் இப்படி வேர்மட்ட அளவில் சமூகத்தில் விரவியிருப்பவை, பரவியிருப்பவை. அவற்றின் இருப்பை வேர்மட்டத்தில் எது உறுதிசெய்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதை புரிந்துகொள்ள அரசியல் என்றால் என்னவென்று வரையறுக்கும் ஒரு கோட்பாட்டை கவனிக்கவேண்டும்.

கார்ல் ஷ்மிட் (1888-1985) என்ற ஜெர்மானிய அறிஞர் கூறிய அரசியல் குறித்த வரையறை கல்விப்புலத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவது. அவர் என்ன கூறினார் என்றால் அரசியல் என்பது நண்பன், எதிரி என்ற கட்டமைப்புதான் என்றார். அவர் வேறு மதம், ஜாதி அடையாளங்கள் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த நண்பன்-எதிரி உறவுகளை கூறவில்லை. அவற்றையெல்லாம் கடந்த “தூய” நண்பன்-எதிரி என்ற வேறுபாட்டின் உருவாக்கமே அரசியல் என்றார். அதாவது அரசியல் எதிரி என்பது அரசியல் அதிகார பகிர்வின் காரணமாக மட்டுமே இருக்க வேண்டும். மற்ற அடையாளங்கள், தொழில், வர்த்தக நலன்கள் இதை முற்றாக தீர்மானிக்கக் கூடாது.

இந்த வரையறையை கணக்கில் கொண்டு பார்த்தால் நாம் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய கட்சிகள் சமூகத்தில் பரவியிருப்பதை சரியாகப் புரிந்துகொள்ளலாம். இந்த இரண்டு கட்சிகளிலும் எல்லா ஜாதிகளை சேர்ந்தவர்களும், சமூகக் குழுக்களை, தொழில்களை, வர்த்தகத்தை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். சொல்லப்போனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகள் கூட ஒருவர் தி.மு.க-வில் இருந்தால் மற்றொருவர் அ.இ.அ.தி.மு.க-வில் இருப்பார். இரண்டு கட்சிகளுக்கும் ஒன்றையொன்று எதிர்ப்பது அரசியல் என்பதாக மட்டுமே நிலைபெற்றுள்ளது. இது ஷ்மிட் கூறிய வரையறைப்படி ஒன்றையொன்று எதிர்க்கும் இரு துருவ அரசியல் என்பதை மொத்த சமூகப் பரப்பினுள் அனைத்து ஜாதி, வர்க்கங்களின் ஊடாக கட்டமைத்துள்ளது.

இந்த கட்சிகளில் உட்கட்சி தேர்தல்கள் நடப்பது, பல்வேறு மட்டங்களிலும் கட்சி அமைப்புகள் தன்னார்வமாக செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும், கட்சிக்காரர்களும் அவர்களுக்கிடையிலான எதிர்ப்பின் கூறுகளும் தெளிவாக உயிர் பெற்றுள்ளன. ஐம்பதாண்டு காலத்தில் இந்த இரு கட்சிகளின் சமூக பரவலின் தன்மையே வேறொரு கட்சி இங்கே வேர்பிடிப்பதற்கு சவாலாக உள்ளது. ஒரு சில கட்சிகளால் ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினரிடையே அமைப்பு கட்ட முடிகிறது. சில கட்சிகள் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் வெளியே உள்ளவர்களை வலைப்பின்னலாக தொகுக்க முயல்கின்றன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் வேர்மட்ட பரவல் என்பது அவற்றையே முக்கியமான அரசியல் ஆற்றல்களாக உருவாக்கியுள்ளது.

இப்படிப்பட்ட கட்சி கட்டுமானத்தை வலுப்படுத்த தேவை கொள்கைகள், கோட்பாடுகள். திராவிட முன்னேற்ற கழகம் பார்ப்பனீய சனாதன எதிர்ப்பு, சமூக நீதி, மாநில சுயாட்சி, திராவிட-தமிழ் அடையாளம் ஆகியவற்றை மையப்படுத்தி, பெரியாரும் அண்ணாவும் அயரா உழைப்பால் உருவாக்கிய, கலைஞர் தன் பேராற்றலால் கட்டிக்காத்து வளர்த்த கருத்தியலை கொண்டது என்பதால் அதன் கொள்கைகளில், கோட்பாடுகளில் கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ச்சி இருக்கிறது. அண்ணா தி.மு.க ஒருவகையில் தி.மு.க-வை பின்பற்றினாலும், ஜெராக்ஸ் பிரதியெடுத்தாலும், தி.மு.க எதிர்ப்பு என்பதே அதன் ஆதாரக் கோட்பாடாக இருந்து வந்திருப்பதையும் காணமுடியும். அண்ணா தி.மு.க-வுடன் “அகில இந்திய” என்ற அடைமொழியும் சேர்ந்தால் அது ஒரு விலாங்கு மீன் கட்சியானது. திராவிட மீன் தலையும், அகில இந்திய பாம்பின் வாலும் கொண்டது. எம்.ஜி.ஆர் பல படங்களில் டபுள் ஆக்ட் செய்தவர் என்பதையும் நினைவில் கொண்டால் இந்த கருத்தியல் இரட்டை வேடத்தையும் புரிந்துகொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் தி.மு.க-வின் கொள்கை திராவிடக் கருத்தியல்; அண்ணா தி.மு.க-வின் கொள்கை அகில இந்தியம் கலந்த திராவிடக் கருத்தியல் – ஒரு சமரசப் போக்கு; நீர்த்துப்போன வடிவம்.

இப்படி கட்சி அமைப்பு என்ற செங்கல்கள், கொள்கை கோட்பாடு என்ற சிமெண்ட் இரண்டையும் இணைத்து உருவான கட்டடத்தின் கூரையாக அமைந்து நிறைவு செய்வதுதான் தலைமை என்பது. வலுவான கான்கிரீட் தளமாக கூரை அமையும்போதுதான் கட்டடம் மழையையும், வெயிலையும் தாங்கி அனைவருக்கும் புகலிடம் தரும் முழு பயன்பாட்டுக்கு வருகிறது.

இந்த உதாரணத்தை மனதில் கொண்டால் ஜெயலலிதா மரணத்தில் எத்தகைய வாய்ப்பை பார்ப்பனீய கருத்தியலும், அதன் கட்சி அமைப்பாகிய பாரதீய ஜனதா கட்சியும் பார்த்தன என்பதை விளங்கிக் கொள்ளலாம். நல்ல செங்கல் கட்டடம். தி.மு.க எதிர்ப்பு என்ற சிமெண்ட்டின் மீது இந்துத்துவ கோட்டிங் கொடுத்துவிடலாம். அதன் தலைமையை மட்டும் முழுவதும் தன் கட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் கட்டிய வீட்டிலேயே குடியேறிவிடலாம். அல்லது அந்த செங்கல்களையெல்லாம் உருவி எடுத்து தன் வீட்டை கட்டிவிடலாம். இப்படியாக ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை ஜெயலலிதா மரணத்தில் கண்டது பாரதீய ஜனதா கட்சி.

மக்களாட்சி சமூகத்தில் மன்னராட்சி கால சூழ்ச்சிகள்

மத்தியில் ஆட்சியதிகாரத்தை வைத்திருக்கும் பாரதீய ஜனதா கட்சி பல மாநிலங்களிலும் மாற்றுக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைவர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றுவதை பழக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களது இலட்சியம் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றியதும் இந்திய ஒன்றிய அரசை ஒற்றை அரசாக மாற்றி மாநில அரசுகளை எந்த அதிகாரங்களும் அற்ற உள்ளாட்சி அமைப்புகளாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான். காஷ்மீரிலும், புது டெல்லியிலும் செய்து காட்டியுள்ளார்கள்.

தமிழகத்தில் வட கிழக்கு மாநிலங்கள் போல அ.இ.அ.தி.மு.க தலைவர்களை நேரடியாக பாரதீய ஜனதாவில் இணைப்பதை அது விரும்பவில்லை. காரணம் அப்படி செய்தால் கட்சியின் வேர்மட்ட அமைப்புகள் தி.மு.க-விடம் சென்றுவிடலாம். அதனால் கொஞ்சம், கொஞ்சமாக அ.இ.அ.தி.மு.க கட்சியை இந்துத்துவத்திற்கு அணுக்கமானதாக மாற்றுவதையே விரும்பியது. இந்த திட்டத்தை செயல்படுத்த பாரதீய ஜனதா கட்சி பார்ப்பனீய சக்திகள் செய்த சூழ்ச்சிகள்தான் மன்னராட்சி காலத்தை நினைவு படுத்துவதாக அமைந்தது. மிகச் சுருக்கமாக அவற்றை நினைவு படுத்திக்கொள்வோம். இவற்றினூடாக நடந்த அதிகார அத்துமீறல்கள், சட்ட நடைமுறை வளைத்தல்கள் ஆகியவற்றை ஒரு பெரிய நூலாகவே எழுதலாம்.

ஜெயலலிதா இறந்தவுடன் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள். அப்போது வெடித்த ஜல்லிகட்டு போராட்டத்தை பயன்படுத்தி அவரை ஜல்லிகட்டு நாயகராக்க முயன்றார்கள். அதைக்கண்ட சசிகலா விழித்துக்கொண்டு அவரே முதல்வராக முடிவுசெய்தார். அப்படி நடந்தால் தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் துவங்கச்செய்தார்கள். சசிகலா முதல்வராவதை தவிர்க்க கவர்னரை சென்னைக்கே வராமல் வெளி மாநிலத்திலேயே இருக்க வைத்தார்கள். ஓ.பி.எஸ்ஸால் போதுமான எம்.எல்.ஏக்களை தன்பக்கம் இழுக்க முடியாது என்று தெளிவான போது சசிகலாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டிருந்த தீர்ப்பை வெளியிடச் செய்தார்கள். அப்படியும் சசிகலா தன்னுடைய அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுதான் சிறை சென்றார்.

அதற்கடுத்து எடப்பாடி பழனிசாமியை அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி தங்கள் பக்கம் கொண்டுவந்த பாஜக அவருடன் ஓ.பி.எஸ்ஸை இணைத்து வைத்தார்கள். அதற்கான நிபந்தனையாக பழனிசாமியை சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து விலக்கச்சொன்னார்கள். இப்படி அ.இ.அ.தி.மு.க மூன்றாக பிளவுபட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை இரட்டைத் தலைவர்களாக்கி அவர்களுக்குள் இருந்த முரண்பாட்டை பயன்படுத்தி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டுவந்தார்கள்.

இதில் உச்சகட்ட சூழ்ச்சியே ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறியதுதான். அதன் மூலம் சசிகலா மீது பழி சுமத்தி அவரை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த திட்டம் போட்டிருக்கலாம். அந்த மர்மத்தை விசாரிக்க ஆணையம் அமைத்தே தீரவேண்டும் என்று நிபந்தனை போட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவரே அந்த ஆணையத்தில் சென்று சாட்சி சொல்லவில்லை. ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அனைவரும் அவரை அருகே சென்று பார்க்கமுடியவில்லை. அதனால் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து பலவித வதந்திகள் பரவத்தான் செய்தன. சில தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறப்பட்டன. ஆனால் ஆறுமுகச்சாமி ஆணையத்தால் எந்த புதிரையும் விடுவிக்க முடியவில்லை. இப்போது ஓ.பன்னீர்செல்வம் கிளப்பிய “மரணத்தில் மர்மம்” பூதம் மீண்டும் குடுவைக்குள் அடைபட மறுக்கிறது.

எம்.ஜி.ஆர் மறைந்தபோது கட்சி வெளிப்படையாக பிளவுபட்டது. எம்.ஜி.ஆரின் வலது கரமான ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியை முதல்வராக்கினார். ஆனால் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக திரண்ட சட்டமன்ற உறுப்பினர் குழு ஜானகியை ஆதரிக்கவில்லை. ஆட்சி கவிழ்ந்தது. தேர்தலில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று பிரிந்து போட்டியிட்டார்கள். மக்கள் ஜெயலலிதா அணிக்கே அதிக ஆதரவு அளித்ததால், கட்சி மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்தது. இவையெல்லாமே வெளிப்படையான மக்களாட்சி நிகழ்வுகள். சூழ்ச்சிகளோ மர்மங்களோ இல்லை.

ஆனால் ஜெயலலிதா மறைந்ததும் கட்சியின் சட்டதிட்டங்கள் கூறுகிறபடி அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவில்லை. பொதுக்குழுவே தாற்காலிகமாக சசிகலாவை தேர்ந்தெடுத்தது. பின்னர் பொதுக்குழுவே அவரை நீக்கியது. பொதுச்செயலாளர் பதவியையே அது நீக்கிவிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராகவும், பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுத்தது. இவையெல்லாம் கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பாக இருந்தாலும் தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இரட்டைத் தலைமைக்கு அங்கீகாரம் கொடுத்து, இரட்டை இலை சின்னமும் கொடுத்து மக்களாட்சி நடைமுறைகளை மீறியிருக்கிறது. கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது; அது தீர்ப்பு சொல்லும் என்று கூறிவிட்டது. இன்று வரையிலும் கட்சி உறுப்பினர்களும் சரி, பொதுமக்களும் சரி ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக சசிகலாவை ஏற்கிறார்களா, ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்கிறார்களா அல்லது பழனிசாமியை ஏற்கிறார்களா என்று தெரியவில்லை. இவர்களையெல்லாம் இஷ்டப்படி பிரித்தும், சேர்த்தும் விளையாடுகிறது பாரதீய ஜனதா கட்சி ஆளும் ஒன்றிய அரசு.

மீண்டும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்போது, பழனிசாமியால் மக்கள் வாக்குகளை ஈர்க்க முடியாது என்று உணர்ந்தது பாஜக. அதனால் சிறைத்தண்டனை நிறைவுபெற்று விடுதலையாகும் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க முயற்சி செய்தது. பார்ப்பனீய சூழ்ச்சியாளர் குருமூர்த்தி தி.மு.க என்னும் தீயை அணைக்க சசிகலா என்னும் சாக்கடை ஜலத்தை பயன்படுத்தலாம் என்று பகிரங்கமாக பேசினார். ஆனால் பாரதீய ஜனதா சொல் கேட்டு சசிகலாவிற்கு துரோகம் செய்த பழனிசாமியால் அந்த திட்டத்திற்கு இணங்க முடியவில்லை. அதனால் தேர்தலில் சசிகலா எந்த நிலைபாட்டையும் எடுக்காமல் பார்த்துக் கொண்டது பாஜக. தன்னுடைய வலிமையை சோதித்துப் பார்க்க தினகரன் மட்டும் போட்டியிடுகிறார்.

மக்களாட்சி மீட்பே இந்தத் தேர்தல்

மக்கள் 2016 தேர்தலில் ஜெயலலிதாவிற்கு வாக்களித்து, குறைந்த வாக்கு சதவீத வித்தியாசமென்றாலும், அவர் ஆட்சியை தேர்ந்தெடுத்தார்கள். அவரது கட்சியை தேர்ந்தெடுத்தார்கள். அந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 188 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றதுடன் 180 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. போட்டியிட்ட தொகுதிகளில் 3.5% வாக்குகளையே பெற்றது. இப்படி மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி, ஒன்றிய அரசில் ஆட்சி பொறுப்பில் இருப்பதால் கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி, அ.இ.அ.தி.மு.க ஆட்சி, கட்சி ஆகிய இரண்டையும் தங்கள் வசம் கொண்டுவந்தது. இதைத்தான் மக்களாட்சிக்கு எதிரான மன்னர்கால சூழ்ச்சி அரசியல் என்கிறோம். ஒரு பெரிய ஏமாற்றுக்காரனை குறிக்க “தோலிருக்க சுளை முழுங்கி” என்று சிறுவர்களுக்கு கதை சொல்வார்கள். அதாவது உள்ளிருக்கும் கனியின் சுளைகளை தின்றுவிட்டு, களிமண் நிரப்பி தோலை ஒட்டவைத்துவிடுவானாம். அப்படிப்பட்ட தோலிருக்க சுளை முழுங்கி வேலையை பாரதீய ஜனதா கட்சி நான்காண்டுகளாக செய்து காட்டியுள்ளது.

இந்த தேர்தலில் இந்த சூழ்ச்சி அரசியலை முறியடித்து தமிழக ஆட்சியையும், அ.இ.அ.தி.மு.க கட்சியையும் பாரதீய ஜனதா கட்சியின் கோரப்பிடியிலிருந்து மீட்க வேண்டியது தமிழக வரலாற்றின் அவசியத் தேவையாகும்.

ஸ்டாலின் தலைமையில் புதிய திராவிட சகாப்தம்

கருத்துக் கணிப்புகள் கூறுவதைப் பார்க்கும்போது ஸ்டாலின் தமிழக தலைவராக மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார் என்று தெரிகிறது. ஐம்பதாண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட அவரை வாரிசு அரசியல் தலைமை என்று பார்ப்பனீய சக்திகள் செய்த பிரசாரம் எடுபடவில்லை. அவர் திராவிட கருத்தியலின் வாரிசாக, கொள்கை, கோட்பாடுகளின் வாரிசாக எழுந்து நிற்கிறார். அதன் ஒரு பகுதியாகவே அவர் கலைஞர் கருணாநிதி என்ற வரலாற்று நாயகரின் தொடர்ச்சியாகவும் விளங்குகிறார். அவருடைய தேர்தல் அறிக்கையும், பத்தாண்டுகால தொலைநோக்கு உறுதிமொழிகளும் இருபத்தோராம் நூற்றாண்டில் திராவிட கருத்தியல் புத்துருவாக்கம் பெற்று தழைத்தோங்கப் போவதை உணர்த்துகிறது.

அ.இ.அ.தி.மு.க என்ற வேர் மட்டத்தில் பரவிய கட்சி நிச்சயம் சுலபத்தில் கலைந்துபோகாது; காணாமல் போகாது. ஆனால் அது பாரதீய ஜனதா கட்சியின் பிடியிலிருந்து வெளிவரவேண்டும். குருமூர்த்திகளின் கைப்பாவைகளை துரத்தியடிக்க வேண்டும். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பங்கேற்கும் தேர்தலை நடத்தி, கட்சி விதிமுறைகள்படி ஒரு பொதுச்செயலாளரை கண்டடைய வேண்டும். அவரது தலைமையில் மீண்டும் மாநில நலனை மனதில் கொண்ட கட்சியாக, தி.மு.க-வின் எதிர்கட்சியாக அது மாறவேண்டும். அதற்கான அவகாசத்தை ஸ்டாலின் ஆட்சி அந்த கட்சிக்கு அளிக்கும். அப்படி அந்த கட்சி தன்னை புதுப்பித்துக்கொண்டு தி.மு.க-விற்கான ஒரு திராவிட கருத்தியல் மாற்றாக, ஷ்மிட் கூறிய எதிரி அமைப்பாக மீண்டும் உருவானால், அதுவும் புதிய திராவிட சகாப்தத்தின் அங்கமாகும்.

அகில இந்திய அளவிலும் பாரதீய ஜனதாவின் பாசிச செயல்பாடுகளை எதிர்த்து முறியடிக்கும் அரசியல் அணியை கட்டமைக்க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க முக்கிய பங்காற்றும். அதற்கான அச்சாரத்தை இந்த சட்டமன்ற தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியிடம் நேரடியாக வழங்கிவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

ஏப்ரல் 6 மக்களாட்சி மீட்பு தினமாகவும், மே 2 புதிய திராவிட சகாப்தத்தின் துவக்கமாகவும் அமையப் போவது உறுதி.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 4 ஏப் 2021