மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

புதுச்சேரி தேஜகூ வேஸ்ட் கூட்டணி: ஸ்டாலின்

புதுச்சேரி தேஜகூ வேஸ்ட் கூட்டணி: ஸ்டாலின்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் தொடர் பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், கடந்த 20 நாட்களாகத் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று (ஏப்ரல் 3) புதுச்சேரியில் பிரச்சாரம் செய்தார். மொத்தம் 234 தொகுதிகளுக்கும் சேர்ந்து 55 கூட்டங்கள் நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். ஏறக்குறைய 12,000 கிலோமீட்டர் பயணித்திருக்கிறார்.

இந்த நிலையில் 56ஆவது கூட்டத்தில் புதுச்சேரியில் பேசிய ஸ்டாலின், “கடந்த ஐந்து வருடங்களாக மத்திய பாஜக அரசு எப்படி எல்லாம் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அரசைத் தொல்லைப்படுத்தியது. தங்களுக்கு ஏவலாக கிரண்பேடியைப் பயன்படுத்தி முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு சொல்ல முடியாத தொல்லைகளை, துன்பங்களை எல்லாம் கொடுத்தார்கள்.

மக்கள் நலத் திட்டங்களை செய்ய விடவில்லை. ரேஷன் கடைகளில் பொருட்களை ஒழுங்காக விநியோகிப்பதற்கும் தடை போட்டார்கள். ஏன் அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டார்களா? இல்லை.

இப்போது கிரண்பேடியை நீக்கிவிட்டார்கள். அதாவது ஏன் கிரண்பேடியை நீக்கினார்கள் என்றால், மக்களுக்கு அந்த ஆளுநர் மீது அந்த அளவுக்கு வெறுப்பு. இந்தத் தேர்தல் நேரத்தில் நாம் நீக்கி விட்டால் அதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று அவரை நீக்கியிருக்கிறார்கள்.

கடந்த இரண்டு மாதமாக பாஜக புதுச்சேரியில் என்ன செய்கிறது என்றால், அமைச்சர்களை மிரட்டினார்கள், சபாநாயகரை மிரட்டினார்கள், பிறகு கட்சிகளை மிரட்டினார்கள். புதுச்சேரியில் பாஜக தலைமையில் என்ஆர் காங்கிரஸ் – அதிமுக கூட்டணி அமைத்து உங்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள். அந்த கூட்டணி ஒற்றுமையான கூட்டணியா? கொள்கை கூட்டணியா? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மூன்று கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான். அதாவது நம்ப வைத்து ஏமாற்றுவது.

பாஜகவை பொறுத்தவரையில் - அதைத் தலைமை ஏற்று நடத்தும் பிரதமராக இருக்கும் மோடியைப் பொறுத்தவரையில் - அவருடைய பணி நாடு முழுவதும் இருக்கும் மாநிலங்களில் எங்கும் நிம்மதியாக ஒரு ஆட்சியை நடத்தவிடக் கூடாது. பாஜகவைத் தவிர யாரும் எந்த மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது.

அதற்காக 2014இல் இருந்து பார்த்தீர்கள் என்றால் எப்போது மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததோ, எப்போது மோடி பிரதமராக வந்து உட்கார்ந்தாரோ, அன்றிலிருந்து, எந்தெந்த மாநிலங்களில் மெஜாரிட்டியோடு இருக்கும் ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.

2016 அருணாசலப் பிரதேசம், 2017 கோவா, மணிப்பூர், 2018 மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்தார்கள். 2018இல் ஜம்மு-காஷ்மீரில் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தார்கள். 2019 கர்நாடக, சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியை கலைத்தார்கள். 2020இல் மத்தியப் பிரதேச ஆட்சியைக் கவிழ்த்தார்கள். அதற்குப் பிறகு 2021இல் கடைசியாக புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியைக் கவிழ்த்தார்கள்” என்று பட்டியலிட்டார்.

“இவ்வாறு சர்வாதிகாரமாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளை கவிழ்ப்பதுதான் மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சியின் கொள்கையாக இருந்து வருகிறது. இவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் என்ன செய்யவேண்டும், மக்களுக்கு என்ன செய்யலாம்? என்று நினைக்கவேண்டும்.

ஆனால் தன்னுடைய மிருக பலத்தால் பாசிச முறையால் கட்சிகளையும், தனி மனிதர்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் பணியைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வாங்கிய வாக்குகள் வெறும் 19,000. ஆனால், ரங்கசாமியையும் – அதிமுகவையும் மிரட்டி 9 தொகுதிகளில் பாஜக இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. அதற்கு ரங்கசாமியும் தலையாட்டி இருக்கிறார். இங்கிருக்கும் அதிமுகவும் தலையாட்டி இருக்கிறது.

அதே போல இங்கிருக்கும் ரங்கசாமியும், இங்கு இருக்கும் அ.தி.மு.க.வும் எப்படி தலையாட்டுகிறதோ அதே போல தமிழ்நாட்டிலும் பழனிசாமி தலைமையில் இருக்கும் ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அங்கே துரோக கூட்டணி என்று சொன்னால் இங்கு வேஸ்ட் கூட்டணி. அதனால்தான் புதுச்சேரியை வளப்படுத்த இப்போது நாம் பெஸ்ட் கூட்டணியாக சேர்ந்திருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர். “பாஜக கூட்டணியில் இருக்கும் ரங்கசாமி வெற்றி பெற்றால், நான் தான் முதலமைச்சர் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இரண்டு முறை பிரதமர் அவர்கள், இந்த புதுவைக்கு வந்து விட்டு சென்றிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காகவும், அரசியல் நிகழ்ச்சிக்காகவும் வந்தார். அவ்வாறு வந்த பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் வெற்றி பெற்றால் ரங்கசாமிதான் முதலமைச்சர் என்று சொல்லி விட்டுச் சென்றாரா? இல்லை. அதனால் அப்படி ஒரு குழப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அதுபோன்று, பிரதமர் அவர்களே, புதுவை மாநிலத்தில் நீங்கள் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றிருக்கிறீர்கள். அப்போது இந்த புதுவை மாநிலத்தை பற்றி ஏதாவது பேசினீர்களா? புதுச்சேரி மாநில அந்தஸ்தை பெற ஏதாவது கருத்து சொன்னீர்களா? புதுச்சேரி மாநிலத்தின் கடன் 8,600 கோடி ரூபாய். அதை தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று சொன்னீர்களா?

ஆனால் இதையெல்லாம் சொல்லுகிற ரங்கசாமி, மோடியிடம் இந்த கோரிக்கைகளை மேடையில் ஏன் சொல்லவில்லை?

மத்திய ஆளுங்கட்சி மாநிலத்தில் இருந்தால்தான் திட்டங்களை கொண்டு வர முடியும். அதை காப்பாற்ற முடியும் என்கிறார்கள். திட்டங்கள் கிடைப்பதற்கு மக்களைப் பற்றி சிந்திக்கின்ற அரசு இருந்தாலே போதும்.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி இன்றைக்கு அ.தி.மு.க. பெயரில் நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட தமிழ்நாட்டில் கொண்டுவர முடியவில்லையே? இந்த நிலையில் மத்திய அரசோடு ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக எல்லா திட்டங்களையும் கொண்டு வர முடியும் என்று சொல்கிறாரே, இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் இரண்டு பேரும், அதாவது மாநில அரசும் – மத்திய அரசும் ஒற்றுமையாக தான் இருக்கிறீர்கள். ஏதாவது செய்து கிழித்து இருக்கிறீர்களா? இல்லையே.

புதுச்சேரியில் இன்றைக்கும் பாஜக எதற்காக குறிவைத்து கொண்டிருக்கிறது என்றால் ஒரே ஒரு காரணம்தான். புதுச்சேரியில் இயற்கை வளம் நிறைய இருக்கிறது. சாகர்மாலா என்ற திட்டத்தின் மூலம் அதனை அபகரிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அவர்கள் அதை கடுமையாக எதிர்த்த காரணத்தினால் அது முடியவில்லை.

அதனால் எப்படியாவது பாஜக இந்த மாநிலத்திற்குள் நுழைந்து, அதை அபகரிப்பதற்காக திட்டங்களை எல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறது. அதை நீங்கள் தயவு கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், ”திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவியருக்கு மாதம் மாதம் 1,000 ரூபாய் நிச்சயமாக வழங்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, தனி கல்வி வாரியம் அமைக்க நிச்சயமாக எங்கள் கூட்டணி பாடுபடும். காரைக்காலுக்கு காவிரி நீர் உரிமையையும், புதுச்சேரிக்கு உள்ள உரிய பங்கையும் நிச்சயமாக பெற்றுத்தருவோம்” என வாக்குறுதிகளைக் கூறி பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். இறுதியாக இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 4 ஏப் 2021